Thursday, July 9, 2009

கம்பன்

"ஒருத்தி இருக்கிறாள். ஒன்றுமில்லாமல் காலியாக இருக்கும் என் மனத்துக்குள் தன்னை அவள் இருத்திக்கொண்டாள். அவள் வெள்ளைத் தாமரைப் பூவில் இருப்பாள். அறுபத்து நான்கு கலைகளையும் கருத்தில் வைத்திருப்பாள். நம் ஐம்புலன்களில் ஏதொன்றும் கலங்காமல் கருத்துகளைத் திருத்துபவள் அவள்தான். நான்கு திசையையும் பார்க்க நான்கு தலைகள் கொண்ட பிரமனின் தேவியான அவளை நான் ஒருபோதும் மறவேன்."


இது கம்பர் பாட்டு.
பாட்டைப் பாருங்கள் மேற்சொன்ன விளக்கத்தின் மொழிக்கு மிக நெருக்கத்தில் இருக்கும்.

பாட்டு:

ஒருத்தியை யொன்றுமி லாவென் மனத்தினு வந்துதன்னை
இருத்தியை வெண்கமலத் திப்பாளை யெண்ணெண் கலைதோய்
கருத்தியை யைம்புலனுங் கலங்காமற் கருத்தை யெல்லாம்
திருத்தியை யான்மற வேன்றிசை நான்முகன் தேவியையே.

வார்த்தைக் கோவைக்காக இதை இங்கே குறிப்பிடுகிறேன். மற்றபடி, ராமாயணத்தைத் தவிர, கம்பன் எழுதிய பிற நூல்கள் தென்படுவது அரிதிலும் அரிதாக இருக்கிறது. மேற்சொன்ன பாடல் சரஸ்வதி அந்தாதியில் வருகிறது. ‌

இந்த நூலின் பாயிரமாக இரண்டு பாடல்கள் உண்டு. ரசனைக்குரிய அந்தப் பாடல்கள் யாருக்காவது நினைவிருந்தால் சொல்லுங்களேன்.

Friday, June 26, 2009

‌நாடோடிகள் விமர்சனம்

உதயம் தியேட்டருக்கு ரொம்ப நாளைக்கப்புறம் இன்று போனேன். நாடோடிகள் படம். இடைவேளையில் பாப்கார்ன் கொறிக்க வந்தால் அங்கே சசிகுமார் நிற்கிறார். ''சசி, பிச்சுப்புட்டியேப்பா... தமிழ் சினிமான்னாலே காறித்துப்பணும்ங்கிறது மாதிரியான நிலைமையை உன்னை மாதிரி ஆளுகதான் மாத்திட்டிருக்கிய" என்றேன். பணிவோடு புன்னகைத்தார். அப்புறம் அவரை ரசிகர் குழாம் சூழ்ந்துகொண்டது.

அநேகமாக படத்தில் நடித்திருந்த அத்தனை பேரும் முதல் காட்சிக்கு அங்கே ஆஜர் ஆகியிருந்தார்கள். "இந்தத் தியேட்டர்தான் மக்களோட பல்ஸ் பாக்குற எடம்" என்றார் நண்பர்.

சசிகுமாரை மட்டுமில்லாமல் அங்கே வந்திருந்த நடிக நடிகையர் அனைவருக்குமே ரசிகர்கள் ஆரவாரத்தோடு முகமன் கூறினார்கள். நா.முத்துக்குமாரிடம், "பிரமாதம் போ" என்று சொல்லிவிட்டு தம்மைப் பற்றவைத்தேன்.


"அது சரீ, விமர்சனம்?" என்கிறீர்களா?


படத்தைப் போய்ப் பாருங்க சாமிகளா...

Saturday, June 20, 2009

ஒருவன் நனையவில்லை

ஒருநாள் குரு தன் சீடர்களிடம் கேட்டார்: ''இரண்டு பேர் நடந்துகொண்டிருந்தார்கள். அப்போது பெய்துகொண்டிருந்த மழையில் ஒருவன் நனையவில்லை" என்றார்.

இதைக் கேட்ட சீடர்கள் வெவ்வேறு காரணங்களைச் சொன்னார்கள்.

''நீங்கள் எல்லோருமே நான் சொன்னதை ஒருவிதமாகவே பார்க்கிறீர்கள். ஒருவன் நனையவில்லை; இருவருமே நனைந்துவிட்டார்கள் என்பதைத் தான் குறிப்பிட்டேன்'' என்றார் குரு.

சீடர்கள் தலை குனிந்தார்கள்.

Monday, June 15, 2009

நேற்றைய விபத்து

கோடம்பாக்கம் நெடுஞ்சாலையில் கோகுலம் சிட்ஃபண்ட்ஸ் சிக்னலில் வலப்புறம் திரும்ப வேண்டும். சிக்னலில் சிவப்பு. டூ வீலரை நிறுத்தினேன். எனக்கு முன்னால் ஒரு கார் மட்டும் நின்றிருந்தது. பின்னால் இருந்த காரின் டிரைவர் ஹார்ன் அடித்தபடி இருந்தார். என் வண்டியை சற்று முன்னகர்த்தினேன். விடாமல் ஹார்ன் அடித்துக்கொண்டே இருந்தார் மேற்படி டிரைவர். இருந்த சில அங்குல இடத்துக்கு நகர்ந்தேன். ஆனாலும், சிவப்பு விளக்கு எரிந்துகொண்டிருக்கும்போதே காரை நகர்த்தி வந்து என் பைக்கை இடித்தான் அந்த டிரைவன். இடக்காலை பலத்த யத்தனத்தோடு உறுதியாக ஊன்ற முயன்று ... முடியாமல் விழுந்துவிட்டேன். இப்போது சிக்னலில் பச்சை. விழுந்த வண்டியைத் தூக்க என்னால் முடியவில்லை. எவ்வளவோ முக்கிப்பார்த்தும்... ம்ஹூம்! அப்போது, நெடுஞ்சாலையே ஸ்தம்பித்து நின்றது. அடர்த்தியான டிராபிக்கில். என் வண்டியைக் கடந்து போகமுடியாமல் என்னை இடித்த காரும், மற்ற வாகனங்களும் நின்று ஹாரன்களைக் கதறடித்துக்கொண்டிருந்தன. பக்கத்திலேயே நின்றிருந்த டூவீலர் பில்லியனில் உட்கார்ந்திருந்த திடகாத்திரனைப் பார்த்து, ப்ளீஸ், ஹெல்ப் பண்ணுங்க' என்று கத்தினேன். அவர் வேறுபக்கம் திரும்பிக்கொண்டார்.
ஆச்சர்யமாக இருந்தது. மனிதர்கள் பிறருக்கு உதவும் பரோபகார குணத்தோடு இருக்க வேண்டும் என்றெல்லாம் சொல்லவில்லை, வண்டியைத் தூக்க எனக்கு உதவி நான் ஓரமாகப் போய்விட்டால் நீங்கள் போக வழி கிடைக்குமே என்று நினைத்துக்கொண்டேன்.

Tuesday, June 9, 2009

ஓஹோஹோ அம்மம்மா ஓல்டு மாங்க் ரம்ம‌‌ம்மா

"ஹுக்கும், கதையெழுதுறீங்க. கட்டுரை எழுதுறே. பாராட்டி புனைபெயர்ல லெட்டரும் எழுததிக்கிறீங்க, என்ன பிரயோஜனம்... என்னைப் பத்தி எப்பவாவது எழுதி இருக்கியாடா, என் வெண்ட்ரூ? "

போத்தலின்,இந்த வரிகளை நான் நாகரிகமாக எழுதியிருந்தாலும், சிச்சுவேசன் என்னமோ எஸ் எம் எஸ் படத்தில் சந்தானம் பேசும் டெரர் டயலாக்குக்கு ஈக்குவலானது.. கிளாஸுக்கும் தண்ணீர் பாக்கெட்டுக்குமான இடைவெளி அதிகம் இருந்தது. இரண்டே வார்த்தைகளில் சொல்வதென்றால்,‘டவுசர் கிளிந்தது’. அடுத்து தாவு தீர்ந்துவிடுமோ என்ற அச்சத்தில்.. “என்ன செல்லம் இப்பிடி சொல்லிட்ட?.உன்னைப் பத்தி எவ்வளவு எழுதி வச்சுருக்கேன் தெரியுமா?” என்று சொல்லிவிட்டு.விட்டு,ட்டு,டு..என்று விக்கி வெலவெலத்தாலும், டங்கு டரியலாகாமல் இருக்க, இந்த இரவை சரக்குக்கான கடிதமாய்...

******

ஓஹோஹோ அம்மம்மா ஓல்டு மாங்க் ரம்ம‌‌ம்மா,

பிளஸ் டூ கடைசிப் பரிட்சை முடித்து தலையில் துண்டு போடாத குறையாக ஒளிந்து ஒளிந்து பாருக்குள் வந்து நீ குழந்தை போல நின்றிருந்த இடங்களிலேயே நானும் நின்று, மூலை முடுக்கில் இருந்து எவனாவது பார்த்துத் தொலைக்கிறானா என்று பயந்து பயந்து , ஹும்ம்ம்...

சாக்கணாக் கடையின் ஏதோவொரு 'சரக்கு' மாஸ்டரிடம், “ஒரிஜினல்தானே இது” என்று சந்தில் சிந்து பாடி, “என்னடா கேட்டே... அக் மார்க் பட்டை மாதிரி இருக்கும்டா” என்று அவர்கொஞ்சம் பீர் வார்த்தார்.


அதன் பிறகு உன்னைப் பார்க்க கடைக்கு நான் வந்த அந்த சனிக்கிழமை என்னில் இன்னும்.

சளி பிடித்தது என்று சொன்ன‌தற்கு அர்த்தம், ரம்மில் சுடு தண்ணியும் மிளகுத் தூளும் கலந்து அடி என்கிற மருத்துவ உண்மையை வழக்கமாக்கிக்கொண்டது அன்றிலிருந்துதான்.

45 மில்லிதான் நான் முதலில் போட்டது. அதன்பிறகு கடைசிவரை என்கூட வரப் போகிறாய் என்பதையறியாமல்... உன் மீதான காதல் வாய்த்த தருணம் காந்தி ஜெயந்தியன்று கடையடைத்திருந்த தினம்தான். பிளாக்கில் விற்கிறார்களா என்று தயங்கித் தயங்கி நான் நான் தேடினேன்...‘சிங்காரி சரக்கு நல்ல சரக்கு’ என்று பாட‌ல் எங்கோ ஒலித்தது நினைவில் இன்னும் இன்னும் இன்னும் இருக்கிறது துவர்க்கிறது.

அப்புறம் அன்றிரவு கைகால் நடுங்க, தூக்கத்தை இழந்த‌ அதேவேளைதான் நான் உன்னில் என்னை இழந்து விட்டேன் என்றுணர்ந்த தருணமும்.

மறுநாள் மாலை வீட்டை விட்டுக் கிளம்பும்போதே புன்சிரிப்பு என்னை ஆட்கொண்டது. அது கொஞ்சம் கோணலாக இருந்ததையும் உணர்ந்தேன். எம்.ஜி.ஆருக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். மதுவிலக்கைத் தளர்த்தி எத்தனை தலைமுறைகளைச் சந்தோஷப்படுத்தினார்..!

ஒருவேளை லோடு இறக்கிக்கொண்டு இருந்தார்கள் எனில் , ஒரு நொடி அங்கே காத்திருந்தாலும் உயிர்வலி எனக்கு ஏற்ப்படுமே,ஏனெனில் அந்த இடமும் அங்கு நிற்பர்வர்களைப் பற்றிய எண்ணமும் அதைப் பற்றி சமூகம் கொண்ட பார்வையும் இப்படி என்ன என்னமோ தோன்ற... ஒரே அழுத்து..அவ்வளவு வேகம் போனதில்லை நான் அடுத்த கடையைத் தேடி. அங்கே போய்ச் சேர்ந்தவுடன் உனக்காகக் காத்திருக்கும்பொழுதே இன்னுமொரு சந்தேகம். அங்கேயும் லோடு இறக்க வந்துவிடுவார்களோ என்று. எதற்கு வம்பு என இரண்டு கடைகளுக்கும் நடுவில் நின்றிந்த அந்த நிமிடங்களில் எத்தனை %^$#&*%$# என்பதை எழுத இன்னும் தமிழில் வார்த்தைகள் கண்டுபிடிக்கவில்லையடி ரம்ம‌ம்மா..

அடுத்த நொடி உன் முன் நான்.கண்முன் நீ. நிறமற்ற போத்தலில் நீ செம்பழுப்பாய் இருந்தாலும் அப்போதைய என் தேவை ஒரு கட்டிங் கரெக்ட் பண்ணுவதே.ஏனெனில் நம்மைப் பொறுத்தவரை 16 மணிநேரத்திற்கும் மேலான இடைவெளி என்பது ஒரு யுகக் கணக்காகிப் போனதால்...

ரோட்டோர ஆயாக்கடையைப் பார்த்ததும் ஆம்லேட் சாப்பிட‌லாமா என்று தோன்றியது. ஆம்லேட் சொல்லும்முன் அந்தக் கடை வாசலில்...ஒருவன் ஆம்லேட் தின்றுகொண்டிருந்தானே... அவன் தோற்றம்... அதுவும் அந்த விரல்கள்... அதுவும் ஒரு புண்நாள்.

உன்மீதான என்காதல் எவ்வளவு காட்டமாய்ப் பயணிக்கிறது என்பது எனக்கு மட்டுமே தெரியும். சந்தேகமிருந்தால் என் உடலை அரிந்து எவனையாவது ரத்தம் குடித்துப் பார்க்கச்சொல், இரண்டு குவார்ட்டர் அடித்ததுபோல் இருக்குமென் ரத்தம்.


உன் மீதான என் காதல் இனி கூடுவதற்கு வாய்ப்பேதுமில்லை.ஏனெனில் ஃபுல்லை விட கூடுதலாக அடித்தால் கட்டுப்படியாகாது. மேல்வரும்படி கிடைத்தால் கூட்டியிருப்பேனே...

ஆக..

என் உணர்வின் உச்சம் நீ.. வாழ்க என் மீதான உன் காதல். அது மட்டுமே என்னை விடுவிக்கும் இனி.


மொத்தமாய் சித்தம் முழுக்க உன் நினைவுகள்
ரத்தம் முழுக்க உன் மூலக்கூறுகள்,இதயம் முழுக்க நீ.. என்றாலும்
நான் தானே நீ...

இப்படிக்கு,

போதையாய்,
ம‌ப்பில்
'கப்பு'டன்
உளறலுக்கு
குவார்ட்டர் கோயிந்த‌ன்

Tuesday, June 2, 2009

என் கைபேசிக்கும் எனக்கும் சண்டை

இல்ல சார்,
பேண்டுக்கிட்டிருக்கேன்
கழுவுனதும் வந்துர்றேன்
என்பதாக முடிந்த
உரையாடலில் பங்கு பெற்ற எனக்கு
தொலைபேசி நாகரிகம் தெரியும்

ஒருமுறை வெளியூர் ஓட்டல் ஒன்றில்
புணர்ந்துகொண்டிருந்தபோது
வந்த
அழைப்பையும் எடுத்துப் பேசினேன்

வெறியேறிய தருணங்களில்
நான்
தூக்கியெறிவது
என் கைபேசியாகவே இருக்கிறது

என் எண் திரையில் ஒளிர்ந்தால்
தவிர்க்கும் பெண்களென‌
மூவர் உண்டு
அவர்களில் யாரும் உறவினர் இல்லை

அகாலத்தில்
மயங்கிக் கிடக்கையில்
அழைத்து
இலக்கண சந்தேகம் கேட்டு
எங்காவது இலக்கில்லாமல் பிக்னிக் போவோமா
என்கிறான்
நண்பனென்கிற பரம வைரி

கடும்கோபத்தில்
நண்பனைப் பழிவாங்க‌
குரலெடுத்துப் பாடுகிறேன் நிசியில்

வீடு காலிசெய்யச் சொல்லிவிட்டார்கள்

சாமான் சட்டிகளைப் போட
ஒரு ரூம் கிடைக்குமா
ப்ளீஸ்...

Sunday, May 10, 2009

சும்மா

இலக்கியத்தின் பிரபஞ்சத்துவம் எது?

இனம், மதம், மொழி, இடம் என்று மனித குலம் துண்டிக்கப்பட்டிருக்கிறது. தீவிரவாதம், உலகமயமாதல்... பழைய மதிப்பீடுகள் அசையத் தொடங்கியிருக்கின்றன. ஒவ்வொரு மனிதனும் தீவாகிக்கொண்டிருக்கிறான். இந்நிலையில் மனித குலத்தைப் பிணிக்கும் சரடாக இலக்கியம் மட்டுமே இருக்கிறது.

அரசியல் அடுத்த தேர்தலை சிந்திக்கிறது. மதம் அடுத்த ஜென்மத்தைச் சிந்திக்கிறது. இலக்கியம்தான் நேற்று இன்று நாளை குறித்துச் சிந்திக்கிரது.

எந்த மேகத்திலிருந்து விழுந்தாலும் மழைத்துளி மண்ணுக்கே சொந்தம். எந்த மொழியில் எழுதப்பட்டாலும் இலக்கியம் மனிதனுக்கே சொந்தம். பூமிக்குள் மறைந்து கிடப்பவற்றை அறிவியல் தேடுவது போல வாழ்க்கைக்குள் மறைந்துகிடப்பவ‌ற்றைக் கலை தேடுகிறது.

புல்லாங்குழலுக்குள் புகுந்து வரும் கரியமில வாயு இசையாய் வெளிப்படுவது போல படைப்புக்குள் நுழைந்து வெளிவரும்போது படைப்பாளியின் வலி ஆனந்தமாகிவிடுகிறது.

எல்லாப் படைப்புகளும் இயற்கையின் நிழல் அல்லது வாழ்வின் பிரதி.

நிறங்களை ஆளாத் தெரிந்தவன் ஓவியனாகிறான். சத்தங்களை செதுக்கத் தெரிந்தவன் இசைஞனாகிறான். மொழியை மோகித்தவன் படைப்பாளியாகிவிட்டான்.

வேறு வேறு கண்களால காணப்பட்டாலும் அழகு ஒன்றுதான். வேறு வேறு கண்களால் சிந்தப்பட்டாலும் கண்ணீர் ஒன்றுதான்.

நாகரிகங்களால் பிளவுபட்டுக் கிடக்கும் மனிதர்களைக் கலாசாரத்தால் ஒன்று படுத்தும் கலைதான் இலக்கியம்.

24 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் பிறந்த கொசு இன்னமும் கொசுவாகவே இருக்கிறது. ஆனால் மனிதன் மாறிவிட்டான். காரணம் மொழி.

நன்றி, வணக்கம்.‌

Tuesday, March 31, 2009

தண்ணிலை விளக்கம்!

பழைய நண்பர்கள் மன்னிக்கவும். இது என் புதிய நண்பர்களுக்காக (சரித்திரம் இம்பார்ட்டன்ட் தானே...)


இருக்கும் வரை சுகிக்கும் கலை
படிக்கும் ஒரு மாணவன்
இனிக்கும் பொருள் அனைத்தும் தொடத்
துடிக்கும் பெரும் காமுகன்

பனிக்கும் எரி மலைக்கும் இடை
நடக்கும் ஒரு சாகசன்
கிடக்கும் தெரு கடக்கும் நொடி
திகைக்கும் சிறு மானுடன்

சிரிக்கும் மலர் தெறிக்கும் இசை
ரசிக்கும் நல் காதலன்
குடிக்கும் நொடி வழுக்கும் மொழி
பிதற்றும் ஒரு கேவலன்

வெறுக்கும் விருப் பிருக்கும் என
தினைக்கும் உன் ஞாபகம்
திறக்கும் விழி இமைக்கும் செயல்
மறக்கும் உன் பேரெழில்

சிரிக்கும் இதழ் முறைக்கும் விழி
இனிக்கும் நீ ஓவியம்
உனக்கும் அடி எனக்கும் வரும்
பிணக்கும் ஒரு நாடகம்.

Monday, February 23, 2009

காதல் சதுக்கம்

வந்து உட்கார்ந்து கால் மணி நேரம் ஆகியும் ஜெர்ரி எட்சனுக்குப் படபடப்பு அடங்கவில்லை. நெஞ்சுக்குள்ளே ஓடும் ரயிலின் தடக் தடக் குறையவில்லை. 'எழுந்து போய்விடலாமா' என்றுகூட நினைத்தான். அப்பாவின் கேலியான சவாலும், அம்மாவின் பாசமான கண்டிப்பும் நினைவுக்கு வந்தன.

"ஏண்டா உனக்கு இருபத்திரெண்டு வயசு ஆச்சு, ஞாபகமிருக்கா இல்லையா? ஆபீஸ்ல இருந்து வர்றே. புஸ்தகமும் கையுமா ரூமுக்குள்ளே போய் உட்கார்ந்துடறே. இல்லைன்னா கம்ப்யூட்டர், இன்டர்நெட். இதுவரைக்கும் ஒரு பொண்ணு கூடவாவது அவுட்டிங் கிவுட்டிங்னு எங்கேயாவது போயிருக்கியா?" அம்மாவின் குரல் ரொம்பவே தழுதழுத்துவிட்டது.

அப்பா ஒருபடி மேலே போய், "கொஞ்சம்கூட சோஷல் மூவ்மென்ட்டே இல்லாம எப்படித்தான் படிப்பும் முடிச்சுட்டு வேலையும் வாங்கினானோ..." என்று கேட்டேவிட்டார். விட்டால் இவனை டிஸ்மிஸ் செய்யச்சொல்லி ஆபீஸுக்கே லெட்டர் போட்டுவிடுவார் போலிருக்கிறது.

இவனுக்கு மட்டும் பிறரைப் போல் நார்மலாக இருக்க ஆசையில்லையா என்ன? சுபாவம் என்று ஒன்று இருக்கிறதே... அழகு குறைந்த பெண் என்றால் அலட்சியம் வந்துவிடுகிறது. ரொம்ப அழகான் பெண்ணைப் பார்த்தாலோ காதலுக்கு பதில் பயம்தான் வருகிறது. காம்ப்ளெக்ஸ்! இது அப்பா, அம்மாவுக்குப் புரிந்தால்தானே...

"நான் என்ன செய்யணும்னு எதிர்பார்க்கறீங்க?"

"உன்னைச் சுத்தி நடக்கற விஷயங்களைப் பாரு. உன் வயசுப் பசங்களும் பொண்ணுங்களும் ரெஃப்ரெஷ் பண்ணிக்கறதுக்குன்னே காதலை உபயோகிக்கறது தெரியும். லவ், டேட்டிங் எல்லாம் எவ்வளவு பெரிய விஷயம்ங்கிறது புரியும்" என்றபடி அப்பாவைப் பார்த்துக் கண்ணடித்தாள் அம்மா.

இவன் வெட்கப்பட்டு முடிப்பதற்குள், "லவர்ஸ் ஸ்கொயருக்குப் போ. எத்தனை விதமான ஜோடிகள் வர்றாங்க, லவ்லயே எத்தனை வகை இருக்குன்னு எல்லாம் தெரிஞ்சுப்பே. உனக்கே புத்தி வர சான்ஸ் இருக்கு. போ... போயிட்டு ராத்திரி வந்து என்கிட்டே சொல்லு. இந்தா" என்று கார் சாவியைக் கையில் திணித்தார் அப்பா.

இதோ வந்தாச்சு. பார்த்தாச்சு, இந்தக் கண்கொள்ளாக் கண்காட்சியை. 'ஊரின் இளைஞர் ஜனத்தொகை இத்தனையா!' என்று அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது.

காதல் சதுக்கத்தில் எல்லா பெஞ்சுகளும் இரண்டு பேர் மாத்திரமே உட்காரும்படி டிசைன் செய்யப்பட்டிருந்ததை கவனித்தான். ஒவ்வொரு பெஞ்சிலும் ஒரு ஜோடி. உயரமான ஆள், குட்டைப் பெண்... பருமனான அம்மணி, ஒட்டடைக் குச்சி ஜென்டில்மேன். நடுத்தர வயது ஆபீஸர் தோற்றத்தில் ஒருவன், கூடவே கான்வென்ட் பெண் போன்ற ஆன்ட்டி... வெவ்வேறு தரங்களில், வெவ்வேறு நிறங்களில் மனிதர்கள். காதலர்கள். ஒரே ஒற்றுமை எல்லோருடைய முகங்களிலும் சந்தோஷம், சந்தோஷம், சந்தோஷம்!

சிரித்தபடி, சீரியஸாக, சத்தம் போட்டபடி, முத்தம் கொடுத்தபடி, தோளில் கை போட்டு அணைத்துக்கொண்டு, மடி மீது தலைவைத்து, மார்பில் அடைக்கலம் தேடி... உக்கிரமாகக் காத்லிக்கும் ஜோடிகள்.

தனியாகவும் ஓரிருவர் உட்கார்ந்திருந்தார்கள். 'காத்திருந்தார்கள்' என்று சொல்வதுதான் பொருத்தம். ஒன்று, காதலி வருவாள்... அல்லது இதுவரை எங்கேஜ் ஆகாதவன் என்றால் புதிய நட்பு கிடைக்கும் மனித உயிர்களிடையே புதிய உறவுகளை உருவாக்குவதற்கும். ஏற்கெனவே இருக்கும் உறவுகளைச் செழுமைப்படுத்துவதற்கும் வீனஸ் தேவதையின் நிதி உதவியோடு கட்டப்பட்டிருக்கும் ஏரியா ‍ காதல் சதுக்கம்...

'தான் எதற்கு இங்கே வழி தப்பிய ஆடாக... திருவிழாவில் தொலைந்த குழந்தையாக...' என்று ஓரளவு படபடப்பு அடங்கி, யோசித்துக்கொண்டிருந்தபோது, நம்ப முடியாத அந்தக் காட்சியைப் பார்த்தான்.

ஐம்பதடி தூரத்தில் இரண்டு யுவதிகள் இவனைக் காட்டி என்னவோ பேசிக் கொண்டிருந்தார்கள். ஒருத்தி, 'மாட்டேன். என்னை விட்டுவிடு' என்பதற்கான உடலசைவை வெளிப்படுத்தினாள். வயதில் மூத்தவளாகத் தெரிந்த மற்றவள், ஏதோ சொல்லி தைரியப்படுத்துவதும் புரிந்தது.

இவனுக்கு மறுபடி நெஞ்சு தடதடக்க ஆரம்பித்தது. 'நம்மைக் காட்டிக் காட்டி என்ன பேச்சு? ஒருவேளை அந்தச் சின்னவள் என்னால் கவரப்பட்டு... சே... நான் என்ன முதல் பார்வையிலேயே கவருமளவு கம்பீரமாகவா இருக்கிறேன்...'

இதற்குள் ஏதோ ஒரு முடிவுக்கு வந்தவர்கள் போல் இரு யுவதிகளும் ஜெர்ரியை நெருங்கினார்கள். 'என்ன அந்தஸ்தான தோற்றம்... கடவுளே என் வாழ்க்கையில் ஏதாவது அற்புதம் நடக்கப் போகிறதா?' அவசர அவசரமாகக் கைக்குட்டையை எடுத்து நெற்றியின் வியர்வைப் புள்ளிகளை அழுந்தத் துடைத்ததில் எரிந்தது நெற்றி. நெஞ்சுக்குள் ரயிலின் தடக்... தடக்... ஸ்டார்ட் ஆனது.

பக்கம் வந்தவர்களில் கூச்ச சுபாவியாகத் தெரிந்த அழகிய பெண் (அட, அதற்குள் 'அழகிய' என்ற அடைமொழி தோன்றிவிட்டதே!) பேச ஆரம்பித்தாள். "வந்து... நீங்க... இந்த காதல் சதுக்கத்தைப் பத்தி என்ன நினைக்கிறீங்க?" அவள் குரல் கேட்டதும் பக்கத்து குரோட்டன்ஸில் இருந்து பட்டாம்பூச்சிகள் கிளம்பிப் பறந்தன. அவள் நெற்றியிலும் வியர்வை முத்துகளைப் பார்த்து இவனுக்குக் கொஞ்சம் ஆசுவாசமாக இருந்தது.


அதே நேரம், அவள் கேட்ட கேள்வியினால் அவனுடைய நெஞ்சு ரயில் வேகம் பிடிக்கவும் ஆரம்பித்தது. சொஞ்சம் சுதாரித்துக்கொண்டவள் போல அவள் தொடர்ந்து பேசினாள்.

"காதலைப் பற்றி என்ன நினைக்கறீங்க?" நல்லது. இது நல்லூழ்தான். இவன் இந்த இடத்துக்கு வரவேண்டும் என்பதற்காகத்தான் இவனுடைய அதிர்ஷ்ட தேவதை காத்திருந்திருக்கிறாள்!

"காதலை ப்ரபோஸ் பண்ண வேண்டியது ஆணா, பெண்ணா?" அடடே என்ன வாசனை, என்ன வாசனை! பெண்களின் உடலில் இயற்கையிலேயே இவ்வளவு வாசனை இருக்குமா என்ன?

அவளுடைய கேள்விகளுக்கெல்லாம் தான் என்ன பதில் உளறினோம் என்று ஜெர்ரிக்குப் பதிவாகவில்லை. விதவிதமான ஸ்ருதிய்ல் ஏதேதோ ஒலிகளை எழுப்பிய உணர்வுதான் இருந்தது. 'கடவுளே இந்து இந்த இடத்தின் மகினையா, பெற்றோரின் ஆசீர்வாதத்தின் பலனா, அல்லது முற்பிறவியில்...'

கடைசியாக அந்தக் கேள்வியையும் அவள் கேட்டேவிட்டாள்!

"இப்போ என்னை மாதிரி ஒரு பொண்ணு உங்க கிட்டே ஐ லவ் யூ சொன்னா எப்பிடி ரியாக்ட் பண்ணுவீங்க..?"

இவன் தாங்க முடியாதவனாக அவளுடைய கையைப் பற்றிக்கொண்டுவிட்டான். 'ஓ என் கடவுளே ஓ என் கடவுளே' என்கிற வார்த்தைகள் மட்டும்தான் மனதில் வந்தன.

அதுவரையில்...

நண்பர்களே எனக்கு இந்தக் கதையை முடிக்கத் தெரியவில்லை. நீங்கள் முடித்தால் சந்தோஷப்படுவேன்.

மிகவும் எதிர்பார்க்கிறேன். ப்ல்ஸ்!!!

Thursday, February 19, 2009

நண்பர்கள் நண்பர்களிடம் கேட்க விரும்பும் பத்து கேள்விகள்

1) வண்டி ஓட்டணும் ஜாக்கிரதை, ரெண்டு பெக் அடிச்சதுக்கப்பறம் கொஞ்சம் கேப் விடுங்க ‍ – இப்படி நாங்க சொல்ற எந்த வேலையையும் உருப்படியா நீங்க செஞ்சதா சரித்திரம் இல்லை. அது ஏன்?

2) கடையில் போய் சரக்கு வாங்கீட்டு வரச் சொன்னா, அதெப்படி நாங்க முக்கியமா சொல்லிவிட்ட பிராண்டை மாத்தி வாங்கிட்டு வ‌ர்றீங்க?

3) பக்கத்து டேபிள்காரர்களுக்கு சைடு டிஷ் தர்றது, சரக்கு மாஸ்டருக்கு சமையல் டிப்ஸ் தர்றதுன்னு எல்லாமே உடனே ஞாபகம் வெச்சுட்டு நடக்குது. ஆனா சிகரெட் வாங்கிட்டு வர்றது, பத்தவைக்க தீப்பெட்டி ஏற்பாடு பண்றது, சைடு ஆர்டர் பண்றது இதெல்லாம் நாலைஞ்சு தடவை சொல்லி, ரிமைண்டர் வெச்சு அப்புறம்தான் நடக்குது. அது ஏன்?

4) ஃபுல் மப்புல தோணுற தத்துப்பித்துவங்களை ஏகப்பட்ட பேருக்கு என் செல்லுல இருந்து திரும்பத் திரும்பச் சொல்றீங்களே... அது ஏன்?

5) நீங்க தண்ணியடிக்கிறது ஜாலிக்காகன்னு சொல்ல வேண்டியது, அதுவே நாங்க அடிச்சா அட்வைஸ் பண்றது. அதெப்படீங்க?


6) கடை அடைக்கப்போற கடைசி அவர்ல சரக்கு தேவைப்படும்போது உங்க மூஞ்சில இருக்கற டென்ஷன், கான்சண்ட்ரேஷன் – ஒம்போது மணிக்கே போலாம்னு நான் சொல்லும்போது ஏன் இருக்க மாட்டீங்குது?

7) போனைப் போட்டுட்டு எதிர்முனையில கொலைவெறியோட திட்டும்போது செல்லுல மைக்கையும் போட்டுட்டு அதெப்படீங்க ஒரு ரியாக்‌ஷனும் காட்டாம முஞ்சிய வெச்சுக்கறீங்க?

8) அடுத்தவன் தட்டுல இருந்து நான் ஆம்லேட்டை எடுத்துத் திங்கும்போது தலையில அடிச்சுக்கிற நீங்க, என் தட்டை வழிச்சு வழிச்சு நக்குறீங்களே... அது ஏன்ங்க?

9) நான் சரியா வாட்டர் மிக்ஸ் பண்ணும்போதெல்லாம் கொஞ்சம் சரக்கை எச்சாவா ஊத்திக்கிற நீங்க, நான் டைட்டா இருக்கும்போது ராவா ஊத்தினாக்கூட அது ஏன் உங்களுக்கு அவ்ளோ பிடிக்குது?


10) பாருக்குக் கிளம்பும்போது ‘லேட்டாச்சு.. லேட்டாச்சு’ன்னு குதிக்கறீங்களே.. அதே மாதிரி மப்பு ஏறினதுக்கு அப்பறம் அதே அளவு ஸ்டெடியா உங்களால குதிக்க முடியுமா?

Monday, February 16, 2009

எல்லாம் தெரிந்தவன்!

'நந்தினியிடம் இன்றைக்கே ஐ லவ் யூ சொல்லிவிடலாம்' என்று தீர்மானித்துக்கொண்டான் பரத். அவனைப் பற்றி முதன்முதலில் உள்ளூர்ப் பத்திரிகையில் எழுதியவள் நந்தினி. 'உலகின் அதிசய மனிதன்... எதைப்பற்றிக் கேட்டாலும் பதில் சொல்கிறார். உலகின் அதிக டேட்டாபேஸ் உள்ள கம்ப்யூட்டருக்கு இந்தியாவின் மனிதச் சவால்!' என்று எழுதியிருந்தாள்.

உண்மையில் பரத் அதற்கு முழுக்கத் தகுதியானவன். அது எப்படி என்று தெரியவில்லை, பதினைந்தாவது வயதில் 'அந்த'த் திறமை தனக்கு இருப்பதை உணர்ந்தான். யார் எதைக் கேட்டாலும் அதற்கான பதில் இவனுக்கு சந்தேகமில்லாமல் மூளையில் பளிச்சிட்டது. 'தாமிரத்தின் வேதிக்குறியீடு என்ன?' செக்கோஸ்லோவேகியாவில் எத்தனை மாகாணங்கள்? இடைக்காலச் சோழர்களில் தாவர விரும்பியான மன்னன் யார்? பதினொன்றின் வர்க்க மூலம் என்ன?சந்தன வாசனையோடு கூடிய கழிவை வெளியேற்றும் காட்டுப் பன்றி ஆப்பிரிக்காவின் எந்தப் பகுதியில் இருக்கிறது?செஸ்ஸில் கார்ப்போவ் இதுவரை தேசிய லெவலில் எத்தனை முறை வென்றிருக்கிறார்..?'

எதைக் கேட்டாலும் டக் டக் என்று பதில் சொன்னான். 'பரத் ஆராய்ச்சிக்குரிய ஒரு மனிதப் பொக்கிஷம்' என்று ஆங்கிலப்ப் பத்திரிகை ஒன்று தலையங்கம் எழுதியது. சன் டிவியிலிருந்து ஸ்டார் டிவி வரை இவன் பேட்டியை ஆர்வமாய் ஒளிபரப்பின. ஞாபக சக்க்தியை அதிகரிக்கச் செய்யும் ஸிரப் தயாரிக்கும் மருந்து கம்பெனி இவனை விளம்பரத்தில் நடிக்க வைப்பதற்காக இவன் வீட்டுக்கு நடையாய் நடந்தது. அரசியல் கட்சிகள் இவனைத் தங்கள் பக்கம் இழுத்துக்கொண்டு ஆதாயம் தேட அலைந்தன.

இது மறுபிறவியா, வேறு ஏதாவதா என்று இவனே ஐந்து வருடங்களாகக் குழம்பிக்கொண்டிருக்க, தற்செயலாகச் சந்தித்த நந்தினி ஒரு பிரபல மனோதத்துவ நிபுணரிடம் இவனை அழைத்துச் சென்றாள். "இந்தத் திறமை எப்படி வந்ததுனு யோசிக்கிறதை மட்டும் நிறுத்திடுங்க. .மத்தபடி குழப்பம் எதுவும் இருக்காது..." என்று சொல்லிவிட்டார் டாக்டர்.

அப்போது இவனைப் பற்றிப் பத்திரிகையில் எழுதியதுடன், நேரம் கிடைக்கும்போதெல்லாம் இவனைச் சந்திக்க வந்துவிடுவாள் நந்தினி. மாலை ஐந்து மணிக்கு வந்தால், ராத்திரி பத்து மணிக்குத்தான் போவாள். இவனைப் பற்றிய செய்தியைப் படித்துவிட்டு கேள்விகள் கேட்க வருகிறவர்களை, ஓகே! நாளைக்கு வாங்க. மணி பத்தாச்சு" என்று விரட்டுவாள்.

'ரொம்ப நல்ல பொண்ணு' என்று இவன் நினைத்துக்கொண்டிருந்த போதே, ''ஹாய் டியர்..." என்றபடி நந்தினி நுழைந்தாள்.
அவளுக்கு ஒரு பரிசு கொடுப்பவன் போன்ற தொனியில், "நந்தினி... நம்ம கல்யாணத்தை எப்ப வெச்சுக்கலாம்..?" என்றான் பரத்.

அவ்வளவுதான் படபடவென்று பொரிந்துவிட்டாள் நந்தினி. அவள் பத்து நிமிடம் படபடத்ததன் சாராம்சம் இதுதான்.
"நான் உன்கூட ஃப்ரெண்ட்லியாகத்தான் பழகினேன். ஒரு பெண்ணின் மனசைப் புரிந்துகொள்ள முடியாத முட்டாள். வடிகட்டின முட்டாள்...

Thursday, February 12, 2009

ஸாரி
நண்பர்களே,
இந்தப் பதிவை
நீக்கிவிட்டேன்.

Friday, February 6, 2009

அஞ்சுக்கு எத்தனை?

வளவளவென்று எழுதும் வழக்கமுள்ள நிருபரை ஆசிரியர் ஒருநாள் கன்னாபின்னா திட்டிவிட்டார். சில நாட்களில் ஒரு காரின் பெட்ரோல் டாங்க் வெடித்து ஐந்து பேர் இறந்து போய்விட்டார்கள். இந்தச் செய்தியை அந்த ரிப்போர்ட்டர் இப்படி ரிப்போர்ட் செய்தார்: 'ஐந்து பேர் பயணித்த காரின் பெட்ரோல் டேங்கில் பெட்ரோல் இருக்கிறதா என்று தீக்குச்சி கிழித்துப் பார்த்தார் ஒருவர். இருந்தது.'

கேள்வி பதில் பகுதிக்கு:
இதுவரை உங்களுக்கு 98 கெல்விகள் அனுப்பியிறுக்கிரேன். என்று கூட பிராசுறமாகவில்லையே என்?

எமதர்பாருக்கு மனிதன் ஒருவன் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டான். எமன் வேறு ஏதோ கணக்கு வழக்குப் பார்த்துக்கொண்டிருந்ததால் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தான். அங்கிருந்த உலகப்படத்தில் இந்தியாவில் டெல்லி பகுதியில் இரண்டு சிவப்பு விளக்குகள் எரிந்துகொண்டு இருந்தன‌. மனிதனின் திகைப்பைப் பார்த்த எமன், "யாராவது பொய் பேசினால் அந்த இடத்தில் சிவப்பு விளக்கு எரியும். இப்போது பிரதமரும் ஜனாதிபதியும் பேசிக்கொண்டு இருக்கிறார்கள். " சற்று நேரத்தில் இந்தியா முழுக்க சிவப்பு விளக்கு எரிந்தது. பதறிப்போன மனிதனிடம் எமன் சொன்னான்: "இப்போது டெலிவிஷனில் நியூஸ் வாசிக்கிறார்கள்."

குற்றவாளி மரண தண்டனை அனுபவிக்க வேண்டிய இடத்தை அடைய முழங்கால் அளவு சேற்றைக் கடந்து போகுமாறு அமைத்திருந்தான் அரசன். அதைக் கடக்கும்போது, "சே, என்ன கொடுமை... என்னை நேரடியாத் தூக்கில் போட்டிருக்கலாமே..." என்றான் குற்றவாளி.
அதற்கு உடன் வந்த காவலன் சொன்னான், "உனக்காவது ஒரு தடவையோட போச்சு. நான் திரும்பி இதே பாதையில நடக்கணும்ங்கிறதை நினைச்சுப் பார்த்தியா?"

இன்டர்வியூ அதிகாரி: கஷ்டமான ஒரு கேள்வி கேட்கவா, ஈஸியான ரெண்டு கேள்வி கேட்கவா?
இன்டர்வியூவுக்கு வந்த நாதாரி: கஷ்டமான ஒரு கேள்வி.
இ.அ: கோழி முதலில் வந்ததா, முட்டை முதலில் வந்ததா?
இ.வ.நா.:கோழி.
இ.அ.: எப்படிச் சொல்கிறாய்?
இ.வ.நா.: சார், ஒரு கேள்வி.....


அஞ்சுக்குள்ள ஒண்ணு போனா என்ன வரும்?
யாரவது பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்...

Thursday, January 22, 2009

ஈழம் எரிகிறது

நாட்பட நாட்பட நாற்றமு சேறும்
பாசியும் புதைந்து பயன்நீர் இலதாய்
நோய்க் களமாகி அழிகெனும் நோக்கமோ?

விதியே விதியே தமிழச் சாதியை
என்செய நினைத்தாய் எனக்குரை யாயோ?
சார்வினுக் கெல்லாம் தகத்தக மாறித்
தன்மையும் தனது தருமமும் மாயாது
என்றுமோர் நிலையா யிருந்துநின் அருளால்
வாழ்ந்திடும் பொருளோடு வகுத்திடு வாயோ?

கற்பகத் தருவோ? காட்டிடை மரமோ?
விதியே தமிழச் சாதியை எவ்வகை
விதித்தாய் என்பதன் மெய்யெனக் குணர்த்துவாய்.
ஏனெனில்
சிலப்பதி காரச் செய்யுளைக் கருதியும்
திருக்குற ளுறுதியும் தெளிவும் பொருளின்
ஆழமும் விரிவும் அழகும் கருதியும்
எல்லை யொன் றின்மை எனும் பொருள் அதனைக்
கம்பன் குறிகளாற் காட்டிட முயலும்
முயற்சியைக் கருதியும் முன்புநான் தமிழச்
சாதியை அமரத் தன்மை வாய்ந்தது என்று
உறுதிகொண் டிருந்தேன். ஒருபதி னாயிரம்
சனிவாய்ப் பட்டும் தமிழச் சாதிதான்
உள்ளுடை வின்றி உயர்த்திடு நெறிகளைக்
கண்டு எனது உள்ளம் கலங்கிடா திருந்தேன்.

ஆப்பிரிக் கத்துக் காப்பிரி நாட்டிலும்
தென்முனை யடுத்த தீவுகள் பலவினும்
பூமிப் பந்தின் கீழ்ப்புறத் துள்ள
பற்பல தீவினும் பரவி யிவ்வெளிய
தமிழச் சாதி தடியுதை யுண்டும்

காலுதை யுண்டும் கயிற்றடி யுண்டும்
வருந்திடுஞ் செய்தியும் மாய்ந்திடுஞ் செய்தியும்
பெண்டிரை மிலேச்சர் பிரித்திடல் பொறாது
செத்திடுஞ் செய்தியும் பசியாற் சாதலும்
பிணிகளாற் சாதலும் பெருந்தொலை யுள்ளதம்

நாட்டினைப் பிரிந்த நலிவினார் சாதலும்
இஃதெலாம் கேட்டும் எனதுளம் அழிந்திலேன்,
தெய்வம் மறவார், செயுங்கடன் பிழையார்,
ஏதுதான் செயினும் ஏதுதான் வருந்தினும்,
இறுதியில் பெருமையும் இன்பமும் பெறுவார்,

என்பதென் னுலத்து வேரகழ்ந் திருத்தலால்
எனினும்
இப்பெருங் கொள்கை இதயமேற் கொண்டு
கலங்கிடா திருந்த எனைக்கலக் குறுத்தும்
செய்தியொன் றதனைத் தெளிவுறக் கேட்பாய்.

ஈங்கிதில் கலக்க மெய்திடு மாயின்
மற்றதன் பின்னர் மருந்தொன்று இல்லை
இந்நாள் எமது தமிழ்நாட் டிடையே
அறிவுத் தலைமை தமதெனக் கொண்டார்
தம்மிலே இருவகை தலைபடக் கண்டேன்,

முழுதுமே தழுவி மூழ்கிடி நல்லால்,
தமிழச் சாதி தரணிமீ திராது
பொய்த் தழி வெய்தல் முடி பெனப் புகழும்
நன்றடா! நன்று! நாமினி மேற்றிசை
வழியெலாந் தழுவி வாழ்குவம் எனிலோ
ஏ! ஏ! அஃதுமக் கிசையா தென்பர்,

விதியே! விதியே! தமிழச் சாதியை
என்செயக் கருவி யிருக்கின் றாயடா?

Tuesday, January 20, 2009

மாதவி மழை

பதினாறு முழத்துக்குள் வைத்தி ருக்கும்
பருவத்தைப் புதிர்களினை விடுவிக் காமல்
பதினாறு வருடங்க ளாய்ச்ச மைத்த‌
பக்குவத்தை, பதாம்புயத்தை, தந்தால் அந்த
அதிசயத்தோல் அரங்கத்தில் நீயும் நானும்
ஆடிடலாம் சதுரங்கம் ஐம்பு லத்தால்!
நதிநீச்சல் எதிர்நீச்சல் ஒத்துக் கொண்ட‌
நம்நீச்சல் பொதுநீச்சல், நிததீச் சல்தான்!

நாட்டியமா டும்பறவை நீ!பா வாடை
நட்சத்ரம்! அவையோரின் ஆசைப் பார்வை
ஈட்டிகள் எ லாம்மோதும் கேட யம்நீ!
ஈகையினால் விழிசிவக்கும் தோகை! பூவைத்
தோட்டத்தி லும்மஞ்சம் விரித்த காம‌
கோட்டத்தி லும் அவிழ்க்கும் பட்டுக் கோட்டை.
ஓட்டப்பந் தயம்நடக்கும் உன்னை நோக்கி.
ஒட்டப்பந் தயம் நடக்கும் உன்னி டத்தில்!

தத்தித்தா தாதைத்தா என்று ஆடும்
தாமரைத்தே ரே!குறுக்கே சிறிது கூட‌
ஒத்திவைப்புப் பிரச்சினைக்கே இடந்த ராமல்
ஒத்தித்தா முத்துத்தா! இயற்கை தீட்டும்
சித்திரமே வாஅருகில்! மெல்ப டிந்த
சேலயெனும் தூசைச்சற் றேது டைப்பேன்!
ஒத்திகையில் லாமல்வந் தெவரும் தம்மெய்
ஒத்திகைபி டித்திடஒத் துழைக்கும் மாதே!

பலகறைகள் இருந்தாலும் நிலவே உன்னைப்
பாடாத புலவனிந்த உலகில் உண்டோ?
நிலவைப்போல் நீபொதுதான். மழையைப் போல‌
நீஅனைவர் மேல்பொழியும் அருள்தான், அன்றோ?
வலதுகரம் தருவதனை இடத றிந்தால்
வள்ளலுக்கு அழகல்ல என்பர்! ஆனால்,
வலதுகரம், இடதுகரம் இரண்டி னாலும்
வாரிவழங் கும்இன்ப வள்ளல் நீயே!

ஊர்விஷயம் தெரிந்துகொண்டு அறிஞன் ஆகும்
உத்தேசம் எனக்கில்லை. உன்விழாவில்
தேரிழுக்கும் கயிறாக இருந்தால் போதும்!
சிலர்,கிணற்றுத் தவளையென்று என்னைச் சொன்னால்
யார்கவலைப் படுகின்றார் அதனைப் பற்றி?
யவனர்களைச் சுமந்துவரும் கப்ப லே!நீ
கார்கூந்தல் மேகமிடக் கீழே மின்னல்
கனியசைத்த நாட்டியத்தால் மயங்கி விட்டேன்!

வண்ணங்கள் கண்ணின்கள், குழலும் யாழும்
வழங்குவது செவிவழிக்கள், நீகொக் கோக‌
எண்ணங்க ளால்போதை ஏற்ப டுத்தும்
இளங்கள்ளி இதழ்க்கள்ளி. இந்த ரெட்டைக்
கிண்ணங்கள் பருவச்சந் தனக்கிண் ணங்கள்!
கிழக்கதிரான் மேற்குவிழும் வேளை. சொந்தத்
திண்ணையிலே இடங்கொடுத்தால் இரவு என்னைத்
திகட்டாத உலகத்துக் கிட்டுச் செல்லும்.

பக்கம்பக் கமாயுன்னைப் புரட்டிப் பார்த்தும்
பயில்தோறும் சுவைகொடுக்கும் பாவே! வந்து
சிக்கலிலே தித்திக்கும் புறாவே! எந்தத்
திக்குமுனைக் கோடிடினும் விடாதா சைத்தீ!
பக்கலிலே படுக்கையிலே தடுக்கா தொட்டி
பழகப்ப ழகக்கொப்பு ளிக்கும் பாலே!
கைக்குள்ளே நூலிடுப்பு இருக்க, வானில்
காற்றாடி யாகட்டும் பட்டுச் சேலை.

பொதுக்கூட்ட மேடையடி மஞ்சம்! இங்கே
பொன்,அன்னம் நீயிருக்க ஏது பஞ்சம்?
கதிரவன்சா யும்நேரம் தங்க மாலை,
காஞ்சனமா லைஇந்தா அணிந்தென் பால்வா!
நிதியேஎன் பெட்டகத்தில் உறங்க வா!நீ
நிதம்இனிமேல் ஊர்க்காடும் கைதி அல்ல,
உதயச்சூரி யன்காலை எழுந்து வந்து
உதைக்கும்வரை தூங்கிடலாம் கேட்பார் இன்றி!
-நீலமணி

Monday, January 19, 2009

பதிவுலகம் காத்தாடுதே...

கொஞ்ச நாளாகவே பார்க்கிறேன், வலைப்பக்கங்களில் நாலைந்துதான் தேறுகிறது ஒருநாளைக்கு.

அதற்கு முன்பெல்லாம் தமிழ் மணத்தைத் திறந்தால் இரண்டு மூன்று சுவாரசியமான (தலைப்புவைக்கப்பட்ட) பதிவுகப் படித்துவிட்டு வந்தால் முகப்பு மாறி, நான்கு பதிவுகள் புதியது என்கிற முத்திரையோடு இருக்கும்.

சமீபகாலமாகக் காற்றாடுவதன் காரணம் என்ன? உலகப் பொருளாதாரச் சீர்கேடு என்றால் சின்னப் பிள்ளைத்தனமாக இருக்கும். இடைத்தேர்தல் மும்முரம் என்றால்... அதைப் பற்றி சிலபல பதிவுகள் வந்தன. வேறு என்னதான் காரணம்.

அறிஞ்சவுக சொல்லுங்க!

Saturday, January 3, 2009

சபாஷ் பையா!

''இந்த பிரெக் மட்டும் அட்ஜஸ்ட் பண்ணிக் குடுங்க. ஒரு லாரியை நசுக்கத் தெரிஞ்சேன்" என்றபடி தர்மராஜிடம் என் மொபெட்டை ஒப்படைத்தேன். அவர் முகத்தில் சிரிப்புக்கான அறிகுறி இல்லை. வழக்கம்போல் நானும் இப்போதெல்லாம் அவர் முகத்தில் சிரிப்பை எதிர்பார்ப்பதில்லை. பள்ளிக்கூட நட்பும் ஒயின் பார் உறவும் எங்களிடம் ஏற்படுத்தியிருந்த நெருக்கம் சமீபகாலமாகச் சிறிது மாற்றத்துக்குள்ளாகியிருந்தது.

தர்மராஜின் டிரேட் மார்க் ஆன புன்னகை கொஞ்சகாலமாகவே காணாமல் போயிருந்தது. இந்த 'கொஞ்ச காலமாக' என்பதை சரியாக ஆறு மாதமாக என்றும் சொல்லலாம்.

ஆறு மாதத்துக்கு முன்னால்தான் தன் மெக்கானிக் ஷெட்டுக்கு, பிள்ளை சுரேஷைக் கூட்டிக்கொண்டு வந்து ஸ்பேனர் கொடுத்து தொழில் கல்வி ஆரம்பித்தார்.

"எட்டு வயசுப் பையனைப் போயி..." என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதுவும் முதல் ரேங்க் வாங்கும் பையன்... "நல்லாப் படிச்சு என்ன புண்ணியம்? படிச்ச ஆளுங்க படுற பாட்டைத்தான் பார்க்கிறோமே... நல்லா டைட் பண்ணுடா டேய்" என்று கோச்சிங்கில் மும்முரமாகிவிட்டார்.

கொஞ்ச நாள் எனக்கு கஷ்டமாக இருந்தாலும் பிற்பாடு பிரமித்துப் போனேன். மூணே மாதத்தில் அந்த அளவு தொழில் சுத்தம். என் லொடுக்கு மொபெட்டை ஒருநாள் என் மச்சினன் எங்கேயோ கொண்டுபோய் அக்குவேறு ஆணிவேறாகக் கொண்டுவந்து கொடுக்க... வெறும் மூன்று மணி நேரத்தில் வண்டியை மீண்டும் உயிர்த்தெசவைத்தான் அந்தச் சின்னப் பையன்.

மறுநாள் தர்மராஜிடம் பாராட்டாகச் சொன்னதற்கு'ப்சு' என்றார். ''என்ன தொழிலோ போங்க" என்று அலுத்துக்கொண்டார். 'பையன் தொழிலை ஒழுங்காகக் கற்றுக்கொள்ளவில்லை' என்று அவர் நினைப்பது புரிந்தது. உண்மையிலேயே அவன் கைதேர்ந்த தொழில்காரனாக வருவான் என்று எனக்குத் தோன்றியதை அவருக்குப் புரியவைக்கும் முயற்சியில் தோற்றுப்போனேன். நான் போகும்போதெல்லாம் என்னிடம் தன் பையனின் தொழில் அறியாமையைப் பற்றிப் புலம்பித்தீர்ப்பார். அதையெல்லாம் கேட்டுக்கொண்டிருக்க நேரமில்லாத குறை. நானும் ரொம்ப அலட்டிக்கொள்வதில்லை.

இன்றைக்கும், "நீ போயி சாருக்கு டீ வாங்கிட்டு வா. நானே ப்ரேக்கை அட்ஜஸ்ட் பண்ணிடுறேன்" என்று பையனை அனுப்பிவிட்டு "என்ன பையனோ போங்க" என்று தன் வழக்கமான் புலம்பலை ஆரம்பித்தார்.

"ஏங்க, என்னோட ஃப்ரெண்ஸ் ரெண்டு மூணு பேரு உங்க பையனோட வேலையைப் பத்தி ஆஹா ஓஹோன்னு பேசிக்கிறாங்க. உங்களுக்குப் பொறாமை போலிருக்கு" என்றேன்.

"சும்மா எனக்கு ஆறுதலா இருக்கட்டுமேன்னு சொல்றீங்க. தலையால தண்ணி குடிச்சு கத்துக் குடுத்தும் அவன் மண்டையிலே தொழில் ஏற‌மாட்டேங்குது. எம்முன்னால ஒரு 'நட்'டைக் கூட அவன் சரியா முடுக்கினதில்லை. ஸ்பேர் பார்ட்ஸ் ஃபிட் அப் பண்ணிக் குடுடான்னா அந்த பேப்பர்ல அச்சடிச்சிருக்கிறதைப் படிச்சுக்கிட்டே இருக்கான். படிக்கிற பையனுக்குத் தொழில் சரிப்பட்டு வராதுங்கிறது சரியாத்தான் போச்சு. எக்கேடோ கெட்டுப்போறான்னு திரும்பவும் அவனைப் பள்ளிக்கூடத்திலேயே போடரதுன்னு முடிவு பண்ணிட்டேன்.." தர்மராஜ் வருத்தம் தோய்ந்த குரலில் சொல்லிக்கொண்டிருக்கும்போதே காபியோடு வந்த அந்த சுட்டிப்பையன் எனக்கு மட்டும் தெரியும்படி என்னைப் பார்த்துக் கண்ணடித்தான்.

ஓஹோ... அப்படியா சங்கதி?