Sunday, May 10, 2009

சும்மா

இலக்கியத்தின் பிரபஞ்சத்துவம் எது?

இனம், மதம், மொழி, இடம் என்று மனித குலம் துண்டிக்கப்பட்டிருக்கிறது. தீவிரவாதம், உலகமயமாதல்... பழைய மதிப்பீடுகள் அசையத் தொடங்கியிருக்கின்றன. ஒவ்வொரு மனிதனும் தீவாகிக்கொண்டிருக்கிறான். இந்நிலையில் மனித குலத்தைப் பிணிக்கும் சரடாக இலக்கியம் மட்டுமே இருக்கிறது.

அரசியல் அடுத்த தேர்தலை சிந்திக்கிறது. மதம் அடுத்த ஜென்மத்தைச் சிந்திக்கிறது. இலக்கியம்தான் நேற்று இன்று நாளை குறித்துச் சிந்திக்கிரது.

எந்த மேகத்திலிருந்து விழுந்தாலும் மழைத்துளி மண்ணுக்கே சொந்தம். எந்த மொழியில் எழுதப்பட்டாலும் இலக்கியம் மனிதனுக்கே சொந்தம். பூமிக்குள் மறைந்து கிடப்பவற்றை அறிவியல் தேடுவது போல வாழ்க்கைக்குள் மறைந்துகிடப்பவ‌ற்றைக் கலை தேடுகிறது.

புல்லாங்குழலுக்குள் புகுந்து வரும் கரியமில வாயு இசையாய் வெளிப்படுவது போல படைப்புக்குள் நுழைந்து வெளிவரும்போது படைப்பாளியின் வலி ஆனந்தமாகிவிடுகிறது.

எல்லாப் படைப்புகளும் இயற்கையின் நிழல் அல்லது வாழ்வின் பிரதி.

நிறங்களை ஆளாத் தெரிந்தவன் ஓவியனாகிறான். சத்தங்களை செதுக்கத் தெரிந்தவன் இசைஞனாகிறான். மொழியை மோகித்தவன் படைப்பாளியாகிவிட்டான்.

வேறு வேறு கண்களால காணப்பட்டாலும் அழகு ஒன்றுதான். வேறு வேறு கண்களால் சிந்தப்பட்டாலும் கண்ணீர் ஒன்றுதான்.

நாகரிகங்களால் பிளவுபட்டுக் கிடக்கும் மனிதர்களைக் கலாசாரத்தால் ஒன்று படுத்தும் கலைதான் இலக்கியம்.

24 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் பிறந்த கொசு இன்னமும் கொசுவாகவே இருக்கிறது. ஆனால் மனிதன் மாறிவிட்டான். காரணம் மொழி.

நன்றி, வணக்கம்.‌