Friday, March 25, 2016

சின்னாத்து மண்ணே என் பொன்னே

சின்னாத்து மண்ணே எம் பொன்னே
செருவாட்டுக் காசா என் ரோசா
செலவாகிப் போகாதே செல்லம்மா செல்லம்மா
செலவாகிப் போகாதே செல்லம்மா
1. மண்சரிஞ்சு பங்கப்பட்ட
பந்தக்காலு பள்ளத்திலும்
மஞ்சணத்திப் புல்துளிர்க்கும் மந்திரமாய்… (பத்திரமா
நேந்துவச்ச உண்டிக்காச
சாமியே திருடுமா
காவல்நிக்கும் எல்லச்சாமி
காலனா மருவுமா சொல்லம்மா… நீ சொல்லம்மா
செல்லம்மா ஏஞ் செல்லம்மா (ஏலேலம்மா/சின்னாத்து மண்ணே
2. பச்சைப்பல்லில் புன்சிரிக்கும்
பட்டுப்போலப் புல்வெளியும்
பச்சைப்பாம்பை வச்சிருக்கும் கண்மறைவா
கோடிஉசிர் செஞ்ச பாவி (சாமி)
கோடிக்கும் உறவுதான்
ஒண்ணிருக்கும் ஒண்ணுபோகும்
நேர்ப்படும் கணக்குதான்
துன்பமே இன்பம்தான்
செல்லம்மா ஏஞ்செல்லம்மா (ஏலேலம்மா
3. நேத்திருந்தோம் வீட்டுக்குள்ளே
காத்தடிச்ச வேகத்திலே
சாஞ்சிருச்சு கூரையெல்லாம் சங்கடமா
நீலவண்ணப் புள்ளிவானம்
 கூரையா ஜொலிக்குமே
மேகவெள்ளைப் பஞ்சுக் கூட்டம்
தோரணம் அசைக்குமே
இல்லைகள் இல்லையே
செல்லம்மா ஏஞ்செல்லம்மா
4. பொன்வண்டுக்கு வத்திப்பெட்டி
உள்ளுக்குள்ள மெத்தைகட்டி
வச்சிருந்தேன் பொத்திப்பொத்தி பத்திரமா
காலொசத்தி முட்டைபோடும்
காட்சிதான் கிடைக்குமா
நூலறுத்து தப்பியோடும்
சூழ்ச்சிதான் நடக்குமா
செல்லம்மா ஏஞ்செல்லம்மா
5. நள்ளிரவு விண்வெளியில்
நட்சத்திரப் பந்தலைப் போல்
பிள்ளையுந்தன் மென்சிரிப்பு (மென்னகைதான்)
கொல்லுவதோ (கொல்லுதடி)
காலையொளி பட்டதாலே
மீனெல்லாம் உதிர்ந்ததோ
வேளைவரும் அந்த ராவில்
 தோன்றவே மறைந்ததோ
 செல்லம்மா… செல்லம்மா

கபி கபி மேரே தில் மே


எப்போதும்என் மனதுள்ளே
ஓர்எண்ணமே தோன்றும்
 நீஇந்த உலகில்
வந்தாயோ என்னோடு சேர என
நீமுந்தைய பிறப்பில்
விண்மீனாய்மின் னியவளோ என்று
 உனைக் கொணர்ந்தார் மண்மேலே
என்னோடு வாழ்கவென
 எப்போதும்என் மனதுள்ளே
ஓர்எண்ணமே தோன்றும்
 உன் ஜோடி கை, உன் தோள்கள்
என்றும் என் ஆஸ்தி என
 உன் நீண்ட கூந்தல் நிழல் போக்கும்
எந்தன் வெய்யில் உன் ஈர இதழ், கரங்கள்
என் ஆஸ்தி என
 எப்போதும்என் மனதுள்ளே
ஓர்எண்ணமே தோன்றும்
 நான் போகும் சாலையில்
ஷெனாயின் பாடல் வந்தாற்போல்
 நம் சாந்தி ராத்திரி
பூந்துகில் தொடாமலா போவேன்
 உள்ளங்கைக்குள்ளே தான்
சுருங்காய் உன் வெட்கத்தாலே நீ
 எப்போதும்என் மனதுள்ளே
ஓர்எண்ணமே தோன்றும்
 உன் ஆயுளெல்லாம் இதைப் போலே
உன் அன்பு தாராய் நீ
 உன் நாட்கள் யாவும் இதே காதலின்
பார்வை வீசாய் முன் உன்னை அறியேன்
உனக்கும் அதேதானே
 எப்போதும்என் மனதுள்ளே
ஓர்எண்ணமே தோன்றும்

எரிமலையின் சிகரத்தில்
பனி பெய்வதை
கடற்கரை ஓரம் நடக்கையில் பார்த்தேன்

எங்கள் வீட்டுப்பக்கம் புல்தரை இருக்கும்
அங்கே பவழமல்லி பொறுக்கப் போய்
சந்தோஷமாகிவிட்டேன், பல நாட்கள் அங்கே இருந்ததைப் போல

நேற்று மாலை அவளை
மறுபடி சந்திப்பேனா
நாளை பெய்த மழை நேற்றும் பெய்யுமா

வணிக வளாகத்தின் நீரூற்று நிற்கிறது
அசைவது நினைவு

நனைந்த உடைபோல்
நெருக்கமாயிருக்கிறேன் அவளோடு

நினைவில் நிலவின் கிரணத் துளி
பறவைகளின் வாயைக் கட்டிப்போட்டிருக்கிறது
சிள்வண்டு இசைக்கிறது

வானுக்கு வெளியே வழியும் நிலவுக் கதிர்
கடலை உப்பளமாக்கிவிட்டது

பண்டிகைக்கு ஏற்றப்பட்டிருக்கிறது சரவிளக்கு
தொலைபேசியின் பாட்டொலி குறுகுகிறது
என் ஆறுதல் ஏறிய வாகனம்
தென்கிழக்கில் நகர்ந்துபோகிறது

வருத்தத்தின் பல பாதைகளில் நிலா ஒளிர்கிறது
வெக்கையில் இருப்பது நான் மட்டுமல்ல

என் தனித்த தூக்கத்துக்குள்
மயில் நீட்டுகிறது
தன் களைத்த,
கண்கள் வைத்த தோகையை

மொட்டை மலையில்
காற்றின் இரைச்சலில்
இங்கே இல்லாதவள்
 இங்கே இருக்கிறாள்

பாட்டு வைத்தியர்


தேசியத்து முற்போக்கு
தேரடியில் நிக்குது
ஜோசியத்தை நம்பிக்கிட்டு
ஜோக்கராக மாறுது
சுட்டுவிரல் முடிவெடுக்கும்
சட்டசபைத் தேர்தலில்
கட்டைவிரல் ஜோசியமா
காப்பாத்தப் போகுது?

நீங்கள் கனவு கண்டிருக்கிறீர்களா?


“பல முறை வித்தியாசமான கனவெல்லாம் கண்டிருக்கிறோம்” என்றும் சொல்கிறீர்கள், அல்லவா? ஓர் இரவுத் தூக்கத்தில் சிலர் ஆறு முறைகூட கனவு காண்பதுண்டு. அந்த ஆறில் ஒண்ணோ ரெண்டோ அவர் யோசித்தே இராத சம்பவங்களைக் கொண்டதாகவும் இருக்கலாம். கனவு எங்கே இருந்து உருவாகிறது? நம்முடைய நினைவுகள், உணர்ச்சிகள், யோசனைகள் போன்றவை, நம் மூளையின் குறிப்பிட்ட ஒரு பகுதியில் பதிந்திருக்கும். அந்தப் பகுதியில் இருந்துதான் கனவு உருவாகிறது. இரவு நேரத்தில், உங்கள் மனதில் பதிந்திருக்கும் விஷயங்களையும், நீங்கள் தூங்கப் போகும் முன்பு என்ன யோசித்தீர்களோ அதையும் உங்கள் மூளை போட்டுக் கலக்குகிறது. குலுக்குகிறது. அதுவே கனவு. கனவில் வந்தது நிஜத்தில் நடக்கும் என்று சொல்ல முடியாது. ஆனால், அந்த சமயத்தில் நம் வாழ்வில் என்ன நடந்துகொண்டு இருக்கிறதோ அதைப் பற்றிய குறிப்புகள் இருக்கக்கூடும். ‘நமது உள்மன உணர்வுகளைத் தெரிந்துகொள்ள கனவுகள் நமக்கு உதவுகின்றன’ என்று கனவுகளை ஆராய்ச்சி செய்பவர்கள் கூறுகிறார்கள். “கனவுகளின் மூலம் நம்முடைய பிரச்னைகள் சிலவற்றை நாம் தெளிவுபடுத்திக்கொள்ளக்கூட முடியும்” என்றும் சேர்த்துக்கொள்கிறார்கள். பல கனவுகள், அர்த்தமுள்ள - பொதுவான மையக் கருத்துகளை உள்ளடக்கியிருக்கின்றன என்று விஞ்ஞானிகள் சொல்கிறார்கள். இங்கே அவற்றில் சில விதக் கனவுகளைப் பற்றிப் பார்க்கலாம். அவை உங்களைப் பற்றியும் உங்கள் வாழ்வில் என்ன நடந்துகொண்டிருக்கிறது என்பதைப் பற்றியும் சொல்லக்கூடும். கனவின் கருத்து: யாரோ துரத்துவது போல அதன் பொருள்: ஏதோ ஒரு பயங்கரமான உயிர் உங்களைத் துரத்துவது போலக் கனவு வரும். இதற்கு, நிஜ வாழ்வில் உங்களுக்கு வந்திருக்கும் பிரச்னை ஒன்றை நீங்கள் சந்திக்காமல் ‘அப்புறம் பார்த்துக்கொள்ளலாம்’ என்று தவிர்ப்பதைக் குறிக்கும். க.க. : பறப்பது போல… பொருள்: நிஜ வாழ்க்கையில் நீங்கள் ஏதோ சிறப்புப் பெறப் போகிறீர்கள். உங்கள் நண்பர்கள் உங்களை லீடர் போலப் பார்க்கலாம். பெற்றோர் உங்களுக்கு அதிக சுதந்திரம் கொடுக்கலாம். க.க. : காணாமல் போய்விடுவது போல… பொருள்: ஏதோ ஒன்றைப் பற்றி முடிவு எடுக்க வேண்டிய கட்டத்தில் இருக்கிறீர்களா? தவறான முடிவை எடுத்துவிடுவோம் என்று இப்போது பயப்படுகிறீர்கள். இந்தக் குழப்பத்தைத் தவிர்க்க, உங்கள் முன் இருக்கும் சாத்தியக் கூறுகளை ஒன்றுக்கு இரண்டு முறை அலசி ஆராயுங்கள். க.க. : கீழே விழுவது போல… பொருள்: நீங்கள் நிறைய வேலைகளை இழுத்துப் போட்டுக்கொண்டிருக்கிறீர்கள். கொஞ்சம் நிதானம் ஆகி, உங்களை எது அழுத்தத்துக்கு ஆளாக்குகிறது என்று யோசிக்க வேண்டிய நேரம் இது. கனவில் கீழே விழும்போது மெதுவாக அடிபடாமல் விழுந்தீர்களா? உங்கள் கடினமான கால கட்டத்தை சீக்கிரமே தாண்டிவிடுவீர்கள் என்று புரிந்துகொள்ளுங்கள். க.க. : அசைய முடியாதது போல… பொருள்: ஏதோ பிரச்னையில் மாட்டிக்கொண்டிருக்கிறீர்கள். இந்தப் பிரச்னை எப்படி வந்தது, வருங்காலத்தில் இது போன்ற சந்தர்ப்பத்தில் புத்திசாலித்தனமாக முடிவெடுப்பது எப்படி என்று யோசியுங்கள். க.க. : எதையோ காணாமல் போட்டுவிடுவது போல… பொருள்: உங்கள் தன்னம்பிக்கை கொஞ்சம் தளர்ந்திருக்கிறது. ஏதேனும் புது விளையாட்டிலோ, புதிய பொழுதுபோகிலோ நீங்கள் ஈடுபட விரும்பலாம். ஆனால், அதில் வெற்றிகரமாகச் செயல்பட முடியாதோ என்று உங்களுக்குத் தோன்றலாம். தன்னம்பிக்கைக் குறைவு! அந்த நம்பிக்கை உங்களுக்கு உள்ளேயேதான் இருக்கிறது. தேடிப் பாருங்கள், கண்டுபிடித்துவிடுவீர்கள்! க.க. : ஏதோ ஒரு விஷயத்துக்கு (பரீட்சைக்கோ பயணத்துக்கோ…) உங்களைத் தயார்ப்படுத்திக்கொள்ளாதது போல, அல்லது தாமதமாகிவிடுவது போல… பொருள்: சீக்கிரம் உங்களுக்கு வரவிருக்கும் ஒரு வேலை, அல்லது நீங்கள் பங்குகொள்ள வேண்டிய ஒரு நிகழ்ச்சி பற்றி நீங்கள் கவலையோடு இருக்கிறீர்கள். அதற்கு நீங்கள் ஏற்கெனவே நல்ல முறையில் தயார் செய்திருந்தால், உங்களுக்கு இப்போது பதற்றமாக இருக்கிறது என்று அர்த்தம். இது சாதாரணமானதுதான். நல்ல முறையில் தயார் செய்யவில்லை என்றால் இந்தக் கனவை ஓர் எச்சரிக்கையாக எடுத்துக்கொள்ளுங்கள். தயார் செய்யுங்கள். One liners ஒரு கனவு 10 நிமிடம் முதல் 40 நிமிடம் வரை நீடிக்கும். நீங்கள் விழித்திருக்கும்போது இருப்பதை விட, கனவு காணும்போது மூளை அதிக சுறுசுறுப்போடு வேலை செய்கிறது. உங்கள் வாழ்க்கையில் நீங்கள் கனவு காணும் நேரம் மொத்தத்தையும் கணக்கிட்டால், சுமார் ஆறு வருட காலம் வரும்.

ஆப்பிள்னா என்ன?


‘ஆப்பிள்’ என்றால் ஆப்பிள் இல்லை! ‘ஆப்பிள்’ என்றதும் உங்களுக்கு மொபைல் போனோ, மேக் (Mac) கணினியோ ஞாபகம் வந்திருக்குமே… இந்த ஆப்பிளை அறிமுகப்படுத்தி, உலகில் முக்கியமான மாற்றங்களை ஏற்படுத்திய ஸ்டீவ் ஜாப்ஸ்-க்கு முன்பிருந்தே, வேறு இரு ஆப்பிள்கள் பிரபலமாக இருக்கின்றன. உலகம் தோன்றுவதற்கே ஏவால் தின்ற ஆப்பிள்தான் காரணம் என்று ஒரு கதை உண்டு. அது முதல் ஆப்பிள். அறிவியல் உலகில் மறுமலர்ச்சி ஏற்படுத்தியது, ஐஸக் நியூட்டனின் ஆப்பிள்! மரத்தில் இருந்து ஆப்பிள் கீழே விழுவதைப் பார்த்து, ‘புவி ஈர்ப்பு விசை’ என்பதை உலகத்துக்கு நிரூபித்தார் அந்த விஞ்ஞானி. இதை எல்லாம் யோசிக்கும்போது ஆப்பிள் என்கிற பழத்தின் சுவாரசியம் நமக்குத் தெரிகிறது. அது ஒரு பக்கம் இருக்க, ஆங்கிலத்தில் ‘Apple’ என்பது பழத்தைக் குறிப்பதோடு, வேறு எதை எதையோ குறிப்பிடும். கவனித்திருக்கிறீர்களா? Idiom என்று சொல்லப்படும் மரபுத் தொடர்களில் ஆப்பிள் என்கிற சொல் பல வேறு அர்த்தங்களைத் தருகிறது. ஒரு கூட்டத்தில் எல்லோரும் நல்லவர்களாக இருக்க, ஒருவர் மட்டும் மோசமானவராக இருந்தால், அவரை ‘rotten apple’ என்பது வழக்கம். அதே பலரில், ஒருவரை மட்டும் எனக்கு மிகவும் பிடிக்கும் என்றால் அவரை ‘you are the apple of my eyeசs’ என்று சொல்வேன். அப்படியே எதிர்ப்பதம் ஆகிறது, பாருங்கள்! ‘பட்டிக்காட்டு ஆள்’ என்பதைக் கூட, ‘apple knocker’ என்று ஆங்கிலேயர்கள் கிண்டல் கலந்து கூப்பிடுவார்கள். தொடர்பே இல்லாத இரண்டு விஷயங்களைக் குறிப்பிட, ஆப்பிளைத் தொடர்பு படுத்தி ஒரு சொற்றொடர் உண்டு. Apples and oranges என்பதுதான் அது. அதாவது, டேவிட்டையும் பீட்டரையும் ஒப்பிடவே முடியாது, ஏனென்றால் அவர்கள் ஆப்பிளும் ஆரஞ்சும் போல (like apples and oranges) என்று குறிப்பிடுவார்கள்.. இரண்டு ஆப்பிள்கள் தொடர்பு இல்லாமல் உருண்டு கிடப்பது கூட ஓ.கே. ஆனால், சதுர ஆப்பிள் என்பதுதான் இடிக்கிறது. விதிமுறைகளுக்கு முழுமையாகக் கட்டுப்பட்டு நடப்பவரை square apple என்கிறார்கள். அதேபோல பொருட்களை எல்லாம் அதிகபட்சமாக ஒழுங்காக, சுத்தமாக வைத்திருப்பதற்கு ‘apple – pie - order’ என்று பெயர். ஒழுங்காகவும் இல்லாமல், வேலைகளை நியதிப்படி செய்யாமல் இருப்பவர், வேலை சொன்னவருக்கு ஜால்ரா அடிக்க வேண்டியிருக்கும்! இப்படி, தேவையில்லாமல் புகழ்ந்து பேசுவதை, ‘polish the apple’ என்கிறார்கள். (தமிழில் இதை சோப்புப் போடுவது என்று சொல்லும் வழக்கம் உண்டு.) ஒரு செய்கைக்கு இப்படி ஒரு பெயர் என்றால், ஒரு நகருக்கே ஆப்பிள் என்று பெயர் உண்டு. ஆம், நியூயார்க் நகரத்தை ‘Big apple’ என்பார்கள். அதே நேரம், “அங்கே ‘Road apple’ கிடக்கு” என்று யாராவது சொன்னால், குனிந்து பழத்தைத் தேட வேண்டாம். ரோடு ஆப்பிள் என்றால், குதிரைச் சாணி!

Saturday, March 19, 2016

அகநாழிகை மாமா

அகநாழிகை மாமா

 அழகு மிகுந்த மாமா
அகநாழிகை மாமா
அறிவு நிறைந்த மாமா
அவரைப் பாடுவோமா..?

வக்கீல் கோட்டு மாட்டி
வாது மன்றம் செல்லுவார்
வார்த்தைகளை நீட்டி
வழக்குகளில் வெல்லுவார்

எத்தனையோ பாட்டிலே
ஏழு ஸ்வரம் காட்டுவார்
ஏரி காத்த ராமரை
இடத்தை விட்டு ஓட்டுவார்

ஏசுநாதர் என்றைக்கோ
எருசலேமைச் சுற்றினார்
வாசுதேவன் அப்பப்போ
வாய்த்த மலையில் சுற்றுவார்

பாங்காய்க் கவிதை எழுதுவார்
பதிப்பகமும் நடத்துவார்
போங்காய்ப் பேசும் மனிதரை
போட்டுப் பார்த்து மகிழுவார்

பாங்காக் சென்ற மாமா
என்ன செய்தார் தெரியுமா?
அதனை நானும் கூறினால்
அடிக்க ஓடி வருகுவீர்..! -

கொழந்தைக் கவிஞர் ரமேஷ் வைத்யா