“பல முறை வித்தியாசமான கனவெல்லாம் கண்டிருக்கிறோம்” என்றும் சொல்கிறீர்கள், அல்லவா?
ஓர் இரவுத் தூக்கத்தில் சிலர் ஆறு முறைகூட கனவு காண்பதுண்டு. அந்த ஆறில் ஒண்ணோ ரெண்டோ அவர் யோசித்தே இராத சம்பவங்களைக் கொண்டதாகவும் இருக்கலாம்.
கனவு எங்கே இருந்து உருவாகிறது?
நம்முடைய நினைவுகள், உணர்ச்சிகள், யோசனைகள் போன்றவை, நம் மூளையின் குறிப்பிட்ட ஒரு பகுதியில் பதிந்திருக்கும். அந்தப் பகுதியில் இருந்துதான் கனவு உருவாகிறது. இரவு நேரத்தில், உங்கள் மனதில் பதிந்திருக்கும் விஷயங்களையும், நீங்கள் தூங்கப் போகும் முன்பு என்ன யோசித்தீர்களோ அதையும் உங்கள் மூளை போட்டுக் கலக்குகிறது. குலுக்குகிறது. அதுவே கனவு.
கனவில் வந்தது நிஜத்தில் நடக்கும் என்று சொல்ல முடியாது. ஆனால், அந்த சமயத்தில் நம் வாழ்வில் என்ன நடந்துகொண்டு இருக்கிறதோ அதைப் பற்றிய குறிப்புகள் இருக்கக்கூடும்.
‘நமது உள்மன உணர்வுகளைத் தெரிந்துகொள்ள கனவுகள் நமக்கு உதவுகின்றன’ என்று கனவுகளை ஆராய்ச்சி செய்பவர்கள் கூறுகிறார்கள்.
“கனவுகளின் மூலம் நம்முடைய பிரச்னைகள் சிலவற்றை நாம் தெளிவுபடுத்திக்கொள்ளக்கூட முடியும்” என்றும் சேர்த்துக்கொள்கிறார்கள்.
பல கனவுகள், அர்த்தமுள்ள - பொதுவான மையக் கருத்துகளை உள்ளடக்கியிருக்கின்றன என்று விஞ்ஞானிகள் சொல்கிறார்கள். இங்கே அவற்றில் சில விதக் கனவுகளைப் பற்றிப் பார்க்கலாம். அவை உங்களைப் பற்றியும் உங்கள் வாழ்வில் என்ன நடந்துகொண்டிருக்கிறது என்பதைப் பற்றியும் சொல்லக்கூடும்.
கனவின் கருத்து: யாரோ துரத்துவது போல
அதன் பொருள்: ஏதோ ஒரு பயங்கரமான உயிர் உங்களைத் துரத்துவது போலக் கனவு வரும். இதற்கு, நிஜ வாழ்வில் உங்களுக்கு வந்திருக்கும் பிரச்னை ஒன்றை நீங்கள் சந்திக்காமல் ‘அப்புறம் பார்த்துக்கொள்ளலாம்’ என்று தவிர்ப்பதைக் குறிக்கும்.
க.க. : பறப்பது போல…
பொருள்: நிஜ வாழ்க்கையில் நீங்கள் ஏதோ சிறப்புப் பெறப் போகிறீர்கள். உங்கள் நண்பர்கள் உங்களை லீடர் போலப் பார்க்கலாம். பெற்றோர் உங்களுக்கு அதிக சுதந்திரம் கொடுக்கலாம்.
க.க. : காணாமல் போய்விடுவது போல…
பொருள்: ஏதோ ஒன்றைப் பற்றி முடிவு எடுக்க வேண்டிய கட்டத்தில் இருக்கிறீர்களா? தவறான முடிவை எடுத்துவிடுவோம் என்று இப்போது பயப்படுகிறீர்கள். இந்தக் குழப்பத்தைத் தவிர்க்க, உங்கள் முன் இருக்கும் சாத்தியக் கூறுகளை ஒன்றுக்கு இரண்டு முறை அலசி ஆராயுங்கள்.
க.க. : கீழே விழுவது போல…
பொருள்: நீங்கள் நிறைய வேலைகளை இழுத்துப் போட்டுக்கொண்டிருக்கிறீர்கள். கொஞ்சம் நிதானம் ஆகி, உங்களை எது அழுத்தத்துக்கு ஆளாக்குகிறது என்று யோசிக்க வேண்டிய நேரம் இது. கனவில் கீழே விழும்போது மெதுவாக அடிபடாமல் விழுந்தீர்களா? உங்கள் கடினமான கால கட்டத்தை சீக்கிரமே தாண்டிவிடுவீர்கள் என்று புரிந்துகொள்ளுங்கள்.
க.க. : அசைய முடியாதது போல…
பொருள்: ஏதோ பிரச்னையில் மாட்டிக்கொண்டிருக்கிறீர்கள். இந்தப் பிரச்னை எப்படி வந்தது, வருங்காலத்தில் இது போன்ற சந்தர்ப்பத்தில் புத்திசாலித்தனமாக முடிவெடுப்பது எப்படி என்று யோசியுங்கள்.
க.க. : எதையோ காணாமல் போட்டுவிடுவது போல…
பொருள்: உங்கள் தன்னம்பிக்கை கொஞ்சம் தளர்ந்திருக்கிறது. ஏதேனும் புது விளையாட்டிலோ, புதிய பொழுதுபோகிலோ நீங்கள் ஈடுபட விரும்பலாம். ஆனால், அதில் வெற்றிகரமாகச் செயல்பட முடியாதோ என்று உங்களுக்குத் தோன்றலாம். தன்னம்பிக்கைக் குறைவு! அந்த நம்பிக்கை உங்களுக்கு உள்ளேயேதான் இருக்கிறது. தேடிப் பாருங்கள், கண்டுபிடித்துவிடுவீர்கள்!
க.க. : ஏதோ ஒரு விஷயத்துக்கு (பரீட்சைக்கோ பயணத்துக்கோ…) உங்களைத் தயார்ப்படுத்திக்கொள்ளாதது போல, அல்லது தாமதமாகிவிடுவது போல…
பொருள்: சீக்கிரம் உங்களுக்கு வரவிருக்கும் ஒரு வேலை, அல்லது நீங்கள் பங்குகொள்ள வேண்டிய ஒரு நிகழ்ச்சி பற்றி நீங்கள் கவலையோடு இருக்கிறீர்கள். அதற்கு நீங்கள் ஏற்கெனவே நல்ல முறையில் தயார் செய்திருந்தால், உங்களுக்கு இப்போது பதற்றமாக இருக்கிறது என்று அர்த்தம். இது சாதாரணமானதுதான். நல்ல முறையில் தயார் செய்யவில்லை என்றால் இந்தக் கனவை ஓர் எச்சரிக்கையாக எடுத்துக்கொள்ளுங்கள். தயார் செய்யுங்கள்.
One liners
ஒரு கனவு 10 நிமிடம் முதல் 40 நிமிடம் வரை நீடிக்கும்.
நீங்கள் விழித்திருக்கும்போது இருப்பதை விட, கனவு காணும்போது மூளை அதிக சுறுசுறுப்போடு வேலை செய்கிறது.
உங்கள் வாழ்க்கையில் நீங்கள் கனவு காணும் நேரம் மொத்தத்தையும் கணக்கிட்டால், சுமார் ஆறு வருட காலம் வரும்.
No comments:
Post a Comment