Monday, December 22, 2008

பாய்ஸ் அண்ட் யூத்ஸ் அண்ட் ஜொள்ஸ் அண்ட் வழிசல்ஸ் அண்ட் கார்க்கிஸ்,

உங்க மனசுக்குப் பிடிச்ச பொண்ணைக் கூப்பிடுங்க.

'எனக்கு உன் மனசு புரியுது. உனக்கு என் மனசு புரியலையா?'ன்னு ஏதாவது வசனம் பேசுங்க.

அந்தப் பொண்ணு குழப்பமாப் பார்க்கும். 'உதாரணத்துக்கு, உன் மனசுக்குள்ளே ஏதாவது ஒரு நம்பரை நினைச்சுக்கோ. அதை நான் சரியாச் சொல்றேன்'னு சவால் விடுங்க.

அடுத்தது வழிமுறை.

'ஒண்ணுலேருந்து ஒன்பதுக்குள்ளே ஏதாவது ஒரு நம்பரை நினைச்சுக்கோ.

அதை ரெண்டால பெருக்கு.

அஞ்சைக் கூட்டு.

அதை ஐம்பதால் பெருக்கு. (இந்தா கால்குலேட்டர்.)


அதோட 1749‍ ஐக் கூட்டு.

அதிலிருந்து நீ பிறந்த வருஷத்தை ஃபுல்லா எழுதிக் கழிச்சிடு.

ஆச்சா, இப்போ 'என்ன விடை வருது'ன்னு கேளுங்க.

மேற்படிநண்பி, ஒரு மூன்று இலக்க நம்பரைச் சொல்வார்.

அதில் முதல் நம்பர்தான் அது தன் மனசில் நினைச்ச நம்பர். மீதீ ரெண்டும்?

அது அந்தப் பொண்ணோட வயசு!

'உனக்கு இப்போ இத்தனை வயசு ஆகியிருக்கணுமே'ன்னு சொல்லிப்பாருங்க.

உங்க ஃப்ரெண்ட் ஷாக் ஆயிடும். 'ச்சீ'ன்னு உங்க மார்பில குத்தக்கூடும். வயசு கொஞ்சம் கூடுதலா இருந்து தொலைச்சா, உங்க மேட்டரே கொஞ்சம் ரிஸ்க் ஆயிடுற ஆபத்து இருக்கு. இருந்தாலும் புகுந்து விளையாடு தலைவா!

தளபதி: சினிமா விமரிசனம்


ஒரு காட்சி:
காதலி சொல்கிறாள் "சூர்யா, எனக்கு நாளைக்கு நிச்சயதார்த்தம்." அவன் தலையில் இடி இறங்குகிறது. அவள் மெல்ல விலகுகிறாள்.

இந்தக் காட்சியில் இடம் பெற்றவர்கள் ஷோபனாவும் ரஜினிகாந்தும். அந்த சூர்யா முப்பத்திரெண்டு வருஷங்களாக அசிங்கங்களையே சந்தித்து வளர்ந்தவன். அவனுடைய அகராதியில் வாழ்க்கை என்கிற பதத்துக்கு, ரத்தம், சாவு, கொலை, சைக்கிள் செயின் இவைதான் அர்த்தம். அப்படிப்பட்டவனுக்கு அன்பை அறிமுகப்படுத்தியவள் சொன்ன சேதி இது. இந்த அதிர்ச்சியை நெகிழ்ச்சியை சினிமாவாகச் சொல்ல வேண்டும். காட்சியில் ஒளி மங்குகிறது. பாத்திரங்களின் பாவங்களை வெளிப்படுத்த முடியாத பொம்மை முகங்களின் மீது இருள் கவிகிறது. ஆட்கள் ஸில் அவுட்களாக அடையாளம் காட்டப்படுகிறார்கள். பின்னால் தூரத்திலிருந்து ஓர் ஒற்றைப் புல்லாங்குழல் புறப்படுகிறது. அதன் ஸ்தாயி உயர உயர அந்தச் சோகம் தெளிவாகப் புலப்பட்டுவிடுகிறது. இங்கே பார்வையாளர் கண்ணைத் துடைத்துக்கொள்கிறார்.

இன்னொரு காட்சி:

பிறந்த அன்றிலிருந்து முப்பத்திரெண்டு வருடங்களாக முகம் பார்த்தறியாத அம்மா, பார்க்க வந்திருக்கிறார். இருவரும் மெல்ல அருகில் வந்து தழுவிக்க்கொள்கிறார்கள். லாங் ஷாட்டில் வெகுதூரம் போகிறார்கள. பின்னால் பத்துப் பதினைந்து வயலின்கள் பீறிடுகின்றன. அவற்றின் உற்சாக நரம்புகளிலிருந்து உல்லாச உல்லாச ராகம். அந்தப் பாத்திரங்களின் சந்தோஷம், அந்த வயலின்களின் மூலமாக நாமறியாமல் நம்மைத் தொற்றிக்கொள்கிறது.
'ம்யூஸிக் டைரக்டர்' என்கிற ஆங்கிலப் பதத்தை 'இசையமைப்பாளர்' என்று மொழி பெயர்த்திருக்கிறோம். இந்த மாதிரி, டரக்டர்களின், நடிகர்களின் வேலையைப் பாதி குறைக்கும் இசையமைப்பாளர்களுக்காவது 'இசை இயக்குனர்' என்று போடலாம்.

டைரக்டர் மணிரத்னத்திற்கு இந்தப் படம் ஒரு படி பின்னடைவு. 'பாடல் வரிகளை பிக்சரைஸ் பண்ணுவதில் நிபுணர்' என்று பெயர் வாங்கிய மணிரத்னம், 'சுந்தரி கண்ணால் ஒரு சேதி' பாட்டு மெட்டில் திணறி, தோற்றுவிட்டது அப்பட்டமாகத் தெரிகிறது. பின்னணியில் வாத்தியங்கள் விழா கொண்டாடிக்கொண்டு இருக்க திரையில் ஷோபனா, காதிலிருக்கும் தாடைக் கழற்றுகிறார். ரஜினி, ஷோபனாவின் நெக்லேசைக் கழற்றுகிறார். (இடையிடையே குதிரைச் சண்டை வேறு, எந்த முகாந்திரமுமின்றி) கற்பனையைக் கழற்றிவைத்துவிட்டார் மணிரத்னம்.

இரண்டு வருடத்துக்கு முந்தைய படமொன்றில் ஒரு சமூக விரோதியை ஒரு குழந்தை கேட்கும்.

''நீ நல்லவனா, கெட்டவனா?"

''தெரியலையே...'' என்பதே மணிரத்னத்தின் பதிலாக இருந்தது. அவரது குழப்பம் இன்னும் தீரவில்லை. தினசரி நாலு பேரையாவது அடித்தே கொன்றால்தான் தூக்கம் வரும் என்று இருக்கிற தேவாவும் சூர்யாவும் நல்லவர்களா, கெட்டவர்களா?

'நல்ல கெட்டவர்கள்' என்று சொல்ல வருகிறார் டைரக்டர்.

இவர்கள் யாரையாவது கொல்ல ஆக்ரோஷமாகக் கிளம்பும்போது படம் பார்ப்பவர் உற்சாகமாய்க் கை தட்டுகிறார்.

ஜனங்களை வியாதியஸ்தர்களாக்குவதற்கா, சினிமா?

வருடத்திற்கு ஒரு படம்தான் இயக்குகிறார் மணிரத்னம். படத்துக்குப் படம் கொஞ்சம் வித்தியாசம் காட்ட முயற்சிக்கலாம்.

இவரது எல்லாப் படங்களிலும் அடிக்கடி வரும் ஒரு வசனம், 'ய்யேன்?'

'அடடா, இரண்டே எழுத்தில் எத்தனை அர்த்தம் புதைந்துகிடக்கிறது!' என்று நாம் சொல்ல வேண்டுமாம். கேரக்டரைசேஷனில் எந்த வித்தியாசமுமின்றி , எல்லாப் பாத்திரங்களும் ஒர்ரே மாதிரிப் பேசுவது செயற்கையாக இல்லை?

இன்றைய தேதிக்கு இது வெற்றிப் படம். அதில் பாதிப் பங்கு பப்ளிசிடிக்கு இருக்கிறது.

கதையைப் பற்றியோ கலையைப் பற்றியோ கவலைப்படாமல் சகல காம்ப்ரமைஸ்களோடும் எடுக்கப்பட்டிருக்கும் மற்றுமொரு சாதாரணப் படம்.

Thursday, December 18, 2008

எனக்கு வந்த கடிதம் 1

எனக்கு வந்த கடிதம் 1
சிலருக்கு மனசுக்கு இதம் கடற்கரைக் காற்று; சிலருக்குக் கவிதை; சிலருக்கு இசை; எனக்கு நீ.
உனக்கு எழுதும்போது என் இதயமே எழுந்துவந்து எழுதத் தொடங்குகிறது. சில பேருக்கு நான் பேனாவை மட்டும் எழ்தச் சொல்லிவிடுவது உண்டு.
நாம் காப்பாற்று முயற்சிக்கு முன்பே நமது கடிதப் போக்குவரத்துக்குக் கல்லறை எழுப்பப்பட்டுவிட்டது. நான் உன்னை என்னில் ஒன்றிவிட்ட சகோதரனாகத்தான் நினைக்கிறேன். நீ ஏன் என்னை ஒன்றுவிட்ட சகோதரனாகக்கூட நினைப்பதில்லை?
என்னை அதிகமாகப் புரிந்துகொண்டது என் தாயும் நீயும்தான் என்று நான் நினைக்க, என்னை விட்டுப் பிரிந்துபோகிறேன் என்கிற மாதிரி இருக்கிறது உன் மௌனம். டைப் இன்ஸ்டிட்யூட், நெரிசல் நேரப் போக்குவரத்து, கடலலை இவை எல்லாவற்றையும்விட உன் நிசப்தம்தான் எனக்குப் பேரிரைச்சலாகக் கேட்கிறது.
எந்த இதயத்தையும் பணிய வைக்க நான் இவ்வளவு தூரம் முயற்சித்ததில்லை. இவ்வளவு பழகியும் என்னால் உன் இதயத்தைப் புரிந்துகொள்ள முடியவில்லை. வெட்கப்படுவதா, வேதனைப்படுவதா?
கடிதம் எழுதவில்லை என்று ஆதங்கப்பட்டிருக்கிறேன். ஆனால், அதற்காகப் போராடியதில்லை. முதன்முதலாக ஒரு போராட்டம் உன்னுடன் மட்டும்தான்.
ஆனால், இப்படிப் போராடினால்தான் உன்னுடைய கடிதத்தைக் காணமுடியுமாயின் என் வாழ்க்கை முழுவதும் போராடச் சம்மதமே.
நீ கடிதம் எழுதாததற்குக் காரணங்கள் தேவையில்லை. ஏனென்றால், எத்தகைய செயலுக்கும் நம்மால் காரணம் கற்பிக்க முடியும்.
'எழுதினால் ஒரேயடியாக ஆறு பக்கம் எழுதுவது.இல்லையென்றால், பேசாமல் இருந்துவிடுவது" இது என்ன வழக்கம்?
ஒரு காதலன் தன் காதலி மேல் கொண்ட மயக்கம் மாதிரி, உன்னை நேசிக்கிறேன். அது உன் அறிவாற்றலினால் அல்ல என்பதை உணர்ந்துகொள்.என் மேல் உனக்கிருக்கும் பிரியத்தையும் உணர்ந்திருக்கிறேன்.ஆனால், அதை சோம்பல் மிஞ்சுவதைக் கண்டுதான் அஞ்சுகிறேன்.
ஹரிகுமார்
பி.கு. உன் முந்தைய கடிதத்தை இன்றுடன் 19 தடவை படித்திருக்கிறேன்.

Monday, December 15, 2008

பின்லாந்தின் தேசிய காவியம்: கலேவலா




''நான் வடக்குப் பகுதிக்குப் போருக்குப் போகிறேன்..." ‍லெம்மின் கைனன் புறப்பட்டுவிட்டான்.

"போதுமான அளவு மந்திர சக்தி உனக்கு இல்லை. போகாதே மகனே! நீ இப்போது போனால் வடநாட்டுக்காரர்கள் உன்னைக் கொன்றுவிடுவார்கள். உன் முகத்தைக் கரியிலும் தலையைச் சேற்றிலும் அமுக்குவார்கள். உன்னைச் சூடான சாம்பலிலே புதைத்துவிடுவார்கள். அதனால் போகாதே மகனே..." என்று அம்மா தடுத்தாள்.

லெம்மிகைனன் கேட்கவில்லை. "அம்மா, இதோ பார், இந்த சீப்பை வைத்துக்கொள். இதிலிருந்து ரத்தம் வழிந்தால் எனக்கு ஏதோ அபாயம் நேர்ந்திருக்கிறது என்று புரிந்துகொள்" என்று சொல்லிவிட்டுப் போய்விட்டான்.

போனவன் நேராக வடநாட்டுத் தலைவி லொவ்ஹியைப் பார்த்து "உன் மகளை எனக்கு மணமுடித்துத் தா..." என்று கேட்டான்.

"சாதாரண மனிதனுக்கு என் பெண்ணைத் தரமாட்டேன். நீ பனிக்கட்டிகளில் சறுக்கிப் போ, பேய் வயலைத் தாண்ட வேண்டும். அங்கேயிருக்கும் பிசாசின் காட்டெருதைப் பிடித்து வந்தால் என் பெண் உனக்கே..." என்று சொல்லிவிட்டாள்.

வனதேவதைகளை வணங்கி, பிசாசின் கட்டெருதைப் பிடித்து வந்துவிடுகிறான் லெம்மின்கைனன்.

ஆனால், மறுபடியும் இரண்டு நிபந்தனைகளை விதிக்கிறாள் தலைவி. "தீக்குதிரையைப் பிடித்துவர மேண்டும். மரண ஆற்றில் இருக்கும் ஓர் அன்னத்தைக் கொல்ல வேண்டும்..."

தீக்குதிரையைப் பிடிப்பதில் சிரமம் எதுவும் இல்லை. தன் உடலின் எல்லா உறுப்புகளிலிருந்தும் தீயை வெளிவிடும் அந்தப் பேய்க்குதிரையைப் பார்த்த உடனேயே, கடவுளை வேண்டி, பனிமழை பெய்ய வைக்கிறான். சூடு தணிந்த குதிரையிடம் நல்ல வார்த்தைகள் பேசி, கெஞ்சிக் கூத்தாடி அதை வடநாட்டுக்கு அழைத்து வந்துவிடுகிறான்.

ஆனால், மரண ஆற்றில் இருக்கும் அன்னத்தைக் கொல்லப்போகும்போதுதான் மாட்டிக்கொள்கிறான். 'நனைந்த தொப்பியன்' என்கிற இடையன் ஒரு நீர்ப்பாம்பை எடுத்து லெம்மிகைனனின் ஈரலையும் இதயத்தையும் துளைக்குமாறு குத்திவிட்டான். சாகும் வேளையில் , தன்னைப் 'போகாதே' என்று சொன்ன அம்மாவை நினைத்துக்கொண்டான் லெம்மின் கைனன். மரணக் கடவுளின் மகன் இவனுடைய உடலைப் பல துண்டுகளாக வெட்டி, கறுப்பு நீர் ஓடும் மரண ஆற்றுக்குள் வீசினான்.

மகன் கொடுத்துவிட்டுப் போன சீப்பில் இருந்து ரத்தம் வழிவதைக் கண்ட அம்மா பதறிப்போய் வடநாட்டுக்கு விரைகிறாள்.

மரண ஆற்றில் மூழ்கிக் கிடக்கும் மகனின் உடல் துண்டுகளை, ஒரு நீண்ட குப்பைவாரியின் உதவியுடன் சேகரிக்கிறாள். சுவர்க்கத்திலிருந்து ஒரு தேனீ கொண்டுவந்து தந்த சிரஞ்சீவித் தேனைப் பயன்படுத்தி மகனுக்கு மீண்டும் உயிர்கொடுத்து வீட்டுக்கு அழைத்துப் போகிறாள்.

து பின்லாந்து நாட்டின் தேசிய காவியமான 'கலேவலா'வின் சுருக். பின்லாந்து நாட்டின் எந்த இலக்கியமும் இதுவரை தமிழில் கிடைத்ததில்லை. மொத்தமாக 88 தமிழர்களே வசிக்கும் ஒரு நாட்டிலிருந்து இவ்வளவு தடிமனான ஒரு தமிழ்ப் புத்தகம் வந்திருப்பது இனிய ஆச்சர்யம்!

இந்தியப் புராண இயல் போலவே மந்திரம், மாயம், பாதாளம், சொர்க்கம், போர், காதல், பிள்ளைப் பாசம் என்று விரியும் இந்த பின்லாந்துக் காவியத்தைப் படிப்பதில் நமக்கு எந்த சிரமமும் இல்லை. வனாமொயினன், யொவுகாஹைனன், அந்தரோவிபுனன், குல்லர்வோ, கலர்வோ என்று கதாபாத்திரங்களுக்கு வித்தியாசமான பெயர்கள்.

இது உரைநடையில் எழுதப்பட்டிருந்தால் இன்னும் கூடுதலாக ரசித்திருக்க முடியும். மரபுக் கவிதையாக எழுதவேண்டும் என்று நிர்ணயித்துக்கொண்டதால், 'சொன்னான்' என்று முடிக்க வேண்டியதை, 'உரைத்தான் ஒருசொல் உரைத்தான் இவ்விதம் உரைத்தே அவந்தான் உரைசெயலாயினன்...' என்று எழுதியிருக்கிறார் மொழிபெயர்ப்பாளர் ஆர்.சிவலிங்கம்.‌‌

Friday, December 12, 2008

விழுந்தவன்

இன்னும் எவ்வளவு தூரத்தில் இருக்கிறது அந்தப் பாலம்..?

தெறிக்கும் என் இதயத்தின், வெடிக்கும் என் நாடிகளின் கேள்வி.

பாலத்தைக் கடந்துவிட்டால், என்னைத் தேடிக்கொண்டிருக்கும் ராணுவத்தினர் அங்கே முகாமடிக்காமலிருந்தால், துரத்திவரும் தீவிரவாதிகளின் துப்பாக்கி ரேஞ்சைத் தாண்டிவிட்டால்... கடவுளே, எத்தனை 'ஆல்'களைத் தாண்டி என் வாழ்க்கை இருக்கிறது! எப்போது வரும் பாலம்?

ஆபத்துக்கும் பாதுகாப்புக்கும் நடுவே வெறும் நூறு மீட்டர் நீளமுள்ள பாலம்! என் அம்மாவின் பெயரைக் கொண்ட நர்மதா நதியின் ஓர் ஓரமாக இரண்டு கரைகளையும் இணைக்கும் பாலம். ஒருபுறம் சமவெளியும் மறுபுறம் அடர்காடுமாகத் தலைக்கும் வாலுக்கும் பெரும் வித்தியாசம் கொண்ட பாலம். என் தாய், அந்த நாற்பது வயதுப் பெண், அவமானம் தாங்காமல் தன் நிர்வாண உடலை ஜலசமாதியாக்க, நர்மதா நதிக்குள் குதித்டது அந்தப் பாலத்திலிருந்துதான்.
கல்லூரிக்குப் போய்க்கொண்டு, ஓய்ந்த நேரங்களில் 'காந்தியன் தாட்ஸ்' சர்டிபிகெட்டுக்காகப் படித்துக்கொண்டு சாமானியனாக இருந்தவன் பழிதீர்க்கும் துப்பாக்கி வேண்டி தீவிரவாதத்தின் பதுங்குகுழியான புத்தினி காட்டுக்குள் நுழைய ஒத்தாசையாக இருந்த பாலம்தான் அது.

ஐயா, நீங்கள் அகிம்சை பேசுவீர்கள். தீவிரவாதம் தப்பென்பீர்கள். உங்கள் நண்பன் திடீரென்று உங்களுக்குப் புரியாத கொள்கை பேசி துப்பாக்கி தூக்கியிருக்க மாட்டான். காணாமல் போவதற்குமுன் "கடைசியாக உங்க கிட்டே சொல்லிட்டுப் போகலாம்னு வந்தேன்..." என்று உங்கள் அம்மாவிடம் சொல்லிவிட்டுப் போயிருக்க மாட்டான். ராணுவ அதிகாரி, உங்கள் அம்மாவை சந்தேகப்பட்டு த் துன்புறுத்தி, தேவதையாக வாழ்ந்த ஊரில் ஆடை களைந்து அவமானப்படுத்தி, ஊரெல்லாம் நிர்வாண ஊர்வலமாக அடித்து இழுத்துக்கொண்டு போய், அதை நீங்களே பார்க்க நேர்ந்து...

கடவுளே, யாருக்கும் இந்த நிலை வரக்கூடாது. எனக்கு வந்தது. அந்தக் கோபத்தில்தான் புத்திக்காட்டுக்குள் தீவிரவாதிகளின் காலில் விழுந்தேன்.


அந்த ராணுவ அதிகாரியை, அவன் என் அம்மாவைச் சித்திரவதை செய்தபோது சும்மா இருந்த ஜவான்களை, அவர்கள் குடும்பத்தினரை... பல் கடித்தேன்.!

புத்தியை கோபம் மறைக்க, பிரிந்து போவதில்லை, காட்டிக் கொடுப்பதில்லை என்று தீயில் உள்ளங்கை பொசுக்கிச் சத்தியம் செய்த கணத்தில் நான் அறியேன். இது வெறும் போக்கிரிக் கூட்டமென்று. பணத்தைப் பார்த்தால் திருடும், பெண்களைப் பார்த்தால் தூக்கிக்கொண்டு வரும் கும்பல் என்று. ஒரு பாட்டில் சாராயத்துக்கு நாட்டை விற்றுவிடும் ஆட்கள் என்று மூன்று மாதம் கழித்துத் தெரிந்தபோது ஒன்றும் செய்ய முடியவில்லை.தேசபக்தர்கள் என்று நினைத்திருந்த திருட்டுக் கும்பலிடமிருந்து தப்பி, ஹோஷங்காபாத் போய்விடலாம் என்றால், இந்தக் கால் வருடம் செய்திருந்த குற்றங்களுக்கு உள்ளூர் போலீஸிடம் பதில் சொல்லியாக வேண்டும். "தப்பி வந்தாயா, உளவு பார்க்க வந்தாயா...? என்பார்கள். கூட்டாளிகளைப் பிடித்துத்தரச் சொல்வார்கள். நகக்கண் ஊசி, லாடம், ஐஸ்கட்டிப் படுக்கை... கடவுளே! அதனால் மத்தியப் பிரதேச எல்லையையே கடந்து போனாலாவது உயிர் தப்பலாம் என்று... அதோ தெரிகிறது பாலம் ஆ... பின்னால் என்ன சத்தம்..?

ஐயோ...'அவ‌ர்க‌ள்' வ‌ந்துவிட்டார்க‌ள். ப‌துங்கு.. ப‌துங்கு... உட்கார்ந்த‌ப‌டியே நக‌ர். வெறும் நூறு அ‌‌டிதான் பால‌ம். நாற்ப‌து விநாடிக‌ளில் உருண்டு க‌ட‌ந்துவிட‌லாம்.

எதிர்முனையில6் என்ன‌ புகை..? ஆஹா.... ராணுவ‌த்தின‌ர் முகாம் அடித்திருக்கிறார்க‌ள். குளிர் காய்கிறார்க‌ள்.

உருண்டு உருண்டு... ம‌ர‌நிழ‌ல் க‌விந்த‌ பாலத்தின் உள்ளே இருப‌து அடி தூர‌ம் வ‌ந்துவிட்டேன். கீழே நுங்கும் நுரையுமாக‌ப் பிர‌வகித்து உற்சாக‌மாக‌ ஓடிக்கொண்டிருக்கிறாள் ந‌ர்ம‌தா.இன்றைக்கு ஏன் இந்த‌ ஆன‌ந்த‌ம்..? அம்மா எப்போதும் அணிந்திருந்த‌ முத்துமாலை போல‌வும் அவ‌ளுடைய‌ நிர‌ந்த‌ப் புன்னைக‌யின் ப‌ல்வ‌ரிசை போல‌வும் நுரையின் சுழிப்பு தோற்ற‌ம் காட்டிய‌து.
ராணுவ‌த்தின‌ர் இருப்ப‌தை மோப்ப‌ம் பிடித்துவிட்டு 'அவ‌ர்க‌ள்' ம‌ர‌ங்க‌ளின் பின்னால் ப‌ம்மி நிற்கிறார்க‌ள். இங்கே முகாம்காரர்களின் பாட்டுச் ச‌த்த‌ம்! அட‌டா... அட‌டா... நான் என் வாழ்நாளில் ஒருபோதும் அறிந்திராத‌ ப‌ர‌வ‌ச‌ நிலை!

பின்னால் அவ‌ர்க‌ள்... முன்னால் ராணுவ‌ம். என்ன‌ செய்வேன்? குப்புற‌ப்ப‌டுத்த‌ப‌டியே பால‌த்தின் ப‌ல‌கைக‌ளின் இடைவெளியினூடே பார்க்கிறேன். கீழே ஓடிக்கொண்டிருக்கிறாள் என் அம்மா!

Wednesday, December 10, 2008

யப்பா போதுமப்பா..!


பிழிஞ்ச துணிபோல் ஊரே மழையால் ஊறிப்போச்சப்பா
நனைஞ்சு காய்ஞ்சு நனைஞ்சு காய்ஞ்சு நாறிப்போச்சப்பா
கிழிஞ்ச வானம் ஓட்டைவாளியாக் கீறிப்போச்சப்பா
எரிஞ்சு கெடந்த தரையில் வெள்ளம் ஏறிப்போச்சப்பா

காகிதம் மடிச்சுக் கப்பல் செஞ்ச பழக்கம் கெடலாமா
குடிசை பூராம் கப்பல் போல வெள்ளத்தில் விடலாமா
மாமூல் வாழ்க்கை மண்ணாக அடி மடியில தொடலாமா
மனுஷப் பய மேல் இரக்கமில்லாம கோபப்படலாமா

ஊருக முங்க ஊத்துன பெறகும் மேகம் தீரலையா
தாரு ரோடெல்லம் முழுங்கின பெறகும் தாகம் தீரலையா
வருணன், இந்திரன் மழைக்குச் சாமியாம் போதும் போங்கையா
வெயிலுக்குக் கடவுள் யாரோ எவரோ வெளியில வாங்கையா

என் புத்தகங்களில் (இன்) ஒன்று

Monday, December 8, 2008

பேயெனப் பெய்த மழை


மழை பெய்து முடித்த, ஆனால் சாலைகளில் கெண்டைக் கால் அளவு தண்ணீர் தேங்கிக் கிடந்த அந்த வியாழக்கிழமை இரவு ஏழு மணிக்கு, இந்தத் தண்ணீரால் நேரவிருக்கும் அவஸ்தைகளை என்னால் யூகிக்க முடியவில்லை.
வீட்டுக்குள் சன்னல் வழியாகக் கசிந்த சிறிதளவு ஈரம் மட்டுமே இருந்தது. கரன்ட் (சொல்லவேண்டியது) இல்லை. மெழுகுவத்தி வெளிச்சத்தில் பத்திரிகைகளை மேய்ந்துவிட்டுத் தூங்கப் போய்விட்டேன்.
கட்டிலில் படுத்திருந்த என் மேல் ஏதோ ‘ஜில்’ என்று படர்ந்த ஸ்பரிச உணர்வில் கண்விழித்த நான், அறைக்குள் எழுந்த நாற்றத்தால் முற்றிலும் தூக்கம் கலைந்தேன். தண்ணீர். சாக்கடைத் தண்ணீர்! அது இரண்டரை அடி மட்டத்துக்கு வீட்டுக்குள் சூழ்ந்திருந்ததை உணர முடிந்தது.
மேசை மேல் மெழுகுவத்தி இருந்த இடத்தை மனதுக்குள் குறித்துவைத்திருந்ததால், முழங்காலளவு நீரில் ‘சளப் சளப்’ என குத்துமதிப்பாக நடந்துபோய் அதைப் பற்ற வைத்தேன். மணி ஒன்று ஐந்து. சுற்றிலும் என்ன நடக்கிறதென்று எனக்குத் தெரியவில்லை; என்ன செய்வதென்றும்!
‘திடீரென்று எப்படி வந்ததிந்தத் தண்ணீர்..?’ அறையிலிருந்த மேஜை மேல் ஏறி குத்தவைத்து உட்கார்ந்துகொண்டேன். துணைக்கு மெழுகுவத்தி வெளிச்சம் மாத்திரம்! குட்டித் தூண் போன்ற மெழுகுவத்தி. கோழித் தூக்கமும் ஆந்தை விழிப்புமாக மாறி மாறி வந்தது. வீட்டுக்குள் அலையடித்துக்கொண்டு இருந்த கூவத்தில் ஏதோ அசைவு. உலுப்பிக்கொண்டு பார்த்தேன். பிளாஸ்டிக் முக்காலி இரண்டு கால்களைத் தூக்கிக்கொண்டு சாய்ந்து நின்று, பிறகு தலைகீழாகக் கவிழ்ந்தது. எனக்கு முழு விழிப்பு வந்துவிட்டது.
குளிர் வெடவெடத்தது. கட்டிலின் மேலிருந்த போர்வை முழுக்கத் தண்ணீர் படர்ந்திருப்பது இருளினூடே தெரிந்தது. மேஜையின் காலில் ஏதோ ‘ணங்’ என்று மோதியது. காஸ் சிலிண்டர்! அதை சமையலறையினுள் கொண்டுவைக்க காஸ்காரப் பையனுக்கு எக்ஸ்ட்ரா பத்து ரூபாய் கொடுப்பேன். அவ்வளவு எடையுள்ள சிலிண்டரை தண்ணீர் மிக எளிதாக சுழற்றி விளையாடுகிறது! மேஜை மேல் இருந்த என்னை ஒரு முறை நிமிர்ந்து பார்த்த சிலிண்டர், மெள்ள மிதந்து நகர்ந்தது.
இப்படி... வாஷிங் மிஷின், டி.வி.டி. பிளேயர், மிக்ஸி, பாத்திரம், பண்டம் என ஒவ்வொன்றாக ஆற்று நீர்ப்போக்கில் மிதந்து வர ஆரம்பித்தன. மேஜை மேல் குந்தியிருந்தநான் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தேன், கையறு நிலையின் உச்சபட்சமாக! உள்ளறையில் ஃபிரிஜ் சாயும் சத்தம் கேட்டது.
என் பதவி என்ன, செல்வாக்கு என்ன, எத்தனை தொடர்புகள்... என்ன செய்ய..? தண்ணீர் விளையாடிக்கொண்டு இருக்கிறது! செல்போனில் சுத்தமாக ஈரம் ஏறி, சத்தமில்லாமல் செத்துப் போயிருந்தது. சாகாத உயரத்தில் வைத்திருந்த மற்றொரு செல்போனில் சார்ஜ் இல்லை. சார்ஜ் போட கரன்ட்..?
இப்படியே கழிந்தது ஐந்து மணி நேரம். காலை ஆறு மணி ஆகியும் நடுராத்திரி போல் இருட்டு. மேகத்தின் கருமை!
எவ்வளவு நேரம்தான் மேஜையே தஞ்சம் என்றிருப்பது? இறங்கிக் கதவைத் திறந்தேன். அதற்கென்றே காத்திருந்தது போல் சரட்டென்று மிதந்து வெளியேறின என் ஒரு ஜோடி செருப்புகள்! எட்டிப் பிடிக்க முடியாமல் கோட்டைவிட்டுத் தடுமாறியபடியே மெதுவாக வாசலுக்கு வந்தேன். தண்ணீரின் அலைவில் பயந்து ஒரு தண்ணீர் பாம்பு அம்பெனப் பாய்ந்து விரைந்தது. சாக்கடை நீரில் காலை ஊறப்போடுவது அயர்ச்சியைத் தர, மெள்ளப் படியேறி மாடிக்குச் சென்று ‘ஓவர் ஹெட் டேங்க்’கின் மறைவில் அமர்ந்தேன்.
ஏழு மணி. எட்டு மணி. ஒன்பது. பத்து. பதினொன்று... ‘அடுத்து என்ன செய்யப் போகிறேன்?’ பத்து மணி நேரப் பசி வயிற்றைக் கிள்ளியது. வேறு வழியில்லை. ‘ஏதாவது கடை திறந்திருக்குமா? தொண்டைக் குழிக்கு ஒரு மடக்கு காபி கிடைக்குமா...’ இறங்கி வெளியே போகத் தீர்மானித்தேன்.
அடேங்கப்பா... எங்கும் வெள்ளக்காடு..!
தெருமுனை திரும்பி நடக்க... நீர் மட்டம் உயர்ந்துகொண்டே போனது. பாய்ந்து வரும் தண்ணீரை எதிர்த்து நடப்பது நாலு பேரைத் தூக்கிச் சுமப்பது போல் சிரமமாக இருந்தது. தண்ணீரில் ஏதேதோ கழிவுகள் மிதந்து கடந்தன. ‘நீல் மெட்டல் ஃபனால்கா’ குப்பைத் தொட்டி ஒன்று கடப்பாறை நீச்சல் அடித்துப் போயிற்று. மூக்கைப் பொத்திக் கொண்டேன். பெரும் பிரயத்தனத்துக்குப் பின் பிரதான சாலை வந்தது.
சாட்டையாக அடிக்கும் மழையையும் சாக் கடையின் மணத்தையும் தாங்க முடியாமல், இதற்கு எப்போது விடிவு வரும் என்று தெரியாமல் ஏராளமான மனிதர்கள் கைக்குக் கிடைத்ததைச் சுருட்டிக்கொண்டு ஏரியாகிப்போன ஏரியாவிலிருந்து வெளியேறிக்கொண்டு இருந்தார்கள். ‘‘செம்பரம்பாக்கம் ஏரியைத் திறந்துவிட்டுட்டாங்களாம். சொல்லாமக் கொள்ளாம இப்பிடிப் பண்ணிட்டானுகளே... நல்லா இருப்பானுக...’’ &சாபமிட்டபடி ஒருவர் தண்ணீரில் தடுமாறியயபடி கடந்தார். பஸ் போகும் பாதையில் ‘ஸ்டீமர் போட்’ போய்க்கொண்டிருந்தது.
அப்பாடி, ஒரு புண்ணியவான் காபி கடை திறந்திருந்தார். ஒரு காபி இத்தனை சுவையாக இருக்குமா..?
சாலை வெள்ளத்தில் ஏகப்பட்ட பேர் போய்க்கொண்டு இருந்தார்கள். இளைஞர், முதியவர், ஏழை, பணக்காரன், ஆண், பெண்... எந்த வித்தியாசமும் இல்லாமல் சாக்கடைக்குள் நீந்தவைத்த அரசை, குப்பையோடு மிதந்த ஒரு காய்ந்த மாலையைப் போட்டுப் பாராட்டத் தோன்றியது.
‘பெருத்த மழை பெய்திருந்தபோதிலும், இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை’ என்று அரசாங்கச் செய்தி முரசறைந்தது. அது உண்மைதான்..! மின்வெட்டு, விலைவாசி உயர்வு, போக்குவரத்து நெரிசல் என்று அன்றாடம் செத்துச் சுண்ணாம்பாவதுதானே இயல்பு வாழ்க்கை! மாறுதலுக்கு இந்த முறை தேடி வந்து மூழ்கடிக்கும் ஏரித் தண்ணீர்!
எங்கே தீ எரிந்தாலும் வேலைக்குப் போனால் தானே சோறு! இயல்பு வாழ்க்கை எப்படி பாதிக்கும்?