Wednesday, September 29, 2010

ஐயடிகள் காடவர்கோன் - 3

நூல் சிறந்த பண்டிதர்கள் நிறைந்த காஞ்சியம்பதியை ஒட்டி வாழ்ந்து வந்தவர்கள் காடவ ஆதிகுடிகள். அந்தச் சிற்றரசின் ராஜ்யபாரம் சுமந்துவந்த மன்னர் கள்ளியங்கோட் பெருமானாருக்கு ஒரே வாரிசு.. அந்தப் பிள்ளைக்கு இளம்பிள்ளை வாதம். கவலையோடே அரசாண்டார் மன்னர். ராஜ்யத்தின் எல்லைப் பகுதிகள் கொஞ்சம் கொஞ்சமாக அபகரணம் ஆயின. மன்னருக்கும் வயோதிகம் வந்துற்றது. பல காலமாக தளபதி பெருமாறனை அவதானித்து வந்தார் மன்னர். சகல கார்யங்களிலும் தீரனாகவும் ஒழுக்கத்தில் சீலனாகவும் இருந்தான் அவன். ஐப்பசி மாசம் மூல நட்சத்திரத்தில் பிறந்த ராஜ ஜாதகம் அவனுடையது.

மந்திரிப் பிரதானிகளின் ஆலோசனையின் பேரில் ராஜ்யத்தையும் இளம்பிள்ளைவாத இளம்பிள்ளையையும் பெருமாறனின் கைகளிலும், இடுப்பிலும் ஒரு சுப நாழிகையில் ஒப்படைத்தார்.

காடவர்களின் கோன் ஆன பெருமாறன் செவ்வனே சீர்திருத்தங்களைத் தொடங்கினான். அபகரிக்கப்பட்ட எல்லைகளை விஸ்தீரணம் செய்ததோடு, அடுத்த நாடுகளின் மீது படைகொண்டு ராஜ்யத்தை சாம்ராஜ்யம் ஆக்கினான். வெகுளம்பாடி, வேட்டியூர், தூசி பட்டணம், தொண்டலூர் சாவடி, கழுக்குன்றூர், மதுராசனூர் என அவன் ஜெயங்கொண்ட ராஜ்யங்களின் பட்டியல் மாளாது நீளும்.

இப்படியான பராக்கிரமன், தன் ஜனன முகூர்த்தத்திலேயே மெய்க்காப்பாளன் ஒருவனால் குத்திக் கொல்லப்பட்டான். சிவலோகப் பிராப்தி அடைந்த அவனது ஜென்ம தினம் அப்படியே கொண்டாடப்படாமல் காடவர்கள் கூடி மூன்று நாள் திருவிழாவாகவும் மூன்று நாள் துக்கமாகவும் நீண்ட காலம் அநுசரிக்கப்பட்டது.

இன்றும் அந்தக் காடவ மன்னனின் வாரிசுகள் அந்தப் பகுதியில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

*

இதுதான் அந்தப் பெரியவர் கொடுத்த நைந்த புத்தகத்தில் இருந்த விவரங்களின் சாரம்.

என் குழப்பம் அதிகரித்தது. கம்பெனிக்கு ஒரு வாரம் மெடிக்கல் லீவ் போட்டேன். வெட்ட வரும் எதிரியும், திட்ட வரும் புலவருமாகக் கனவுகள் அலைக்கழித்தன. வயிற்றில் குபீர் - வாரத்துக்கு ரெண்டு பீர் என்றிருந்தது நாளைக்கு ரெண்டு பெக் என்று ஆயிற்று. நிர்மலா ஏகத்துக்கும் கோபப்பட்டு எந்நேரமும் திட்டித் திரிந்தாள்.

''இதோ பாருங்க, என்ன பிரச்னைன்னும் சொல்ல மாட்டேங்கறீங்க. கம்பெனிக்கும் போகாம வீட்டுலயே உக்கார்ந்து மோட்டுலயே பாத்துட்டிருக்கீங்க. புறப்பட்டு வாங்க என்கூட'' என்று சாலிகிராமத்துக்குக் கூட்டிப் போனாள்.

'ஆதிநாக சுவடி ஜோதிட நிலையம்.'

சில மனநல மருத்துவர்களைப் பார்த்தாலே நோயின் வேகம் அதிகரிக்குமே அதுபோல இருந்தார் சுவடி ஜோதிடர். ''யாருக்குப் பார்க்கணும்?'' என்றார். அதுவே தெரியாதவர் மூன்று காலத்தையும் சொல்லப்போகிறார்.

என் முகத்தைப் பார்த்தார். மணியைப் பார்த்தார். பெயரைக் கேட்டார். உட்காரச் சொல்லிவிட்டு உள்ளே போய்விட்டார்.

கொஞ்ச நேரம் கழித்து வெளிவந்த ஜோதிடரின் கையில் இருந்த சுவடியில் என்ன இருக்கிறது என்று எட்டிப் பார்த்தேன். ஒன்றும் தெரியவில்லை. 'ம்க்குக்கூம்' என்று செருமி முறைத்தார்.

ஒன்றுமில்லாத சுவடியைப் பார்த்துப் படிக்க ஆரம்பித்தார்.

''மூநயன பிரமாண்டன் அடியவனென நாமம்.
வானயன் அனுப்பினான் அவனிடமே திரும்பிடுவான்
பத்துக்கு ஈரதிக மைந்து குறை மாதம்
பத்தொன் பதாம் வெள்ளி மூலம்'

என்று தொடங்கி நீளமாக வாசித்துக்கொண்டே போனார். சின்னச் சுவடியில் எவ்வளவு விஷயம்... அவ்வப்போது அவர் முகம் மாறியது. அவர் முடித்ததும் ''இவ்வளவு நேரம் நீங்க படிச்ச்சதில மையக் கருத்தை விளக்கிச் சொல்லுங்க" என்றேன்.

''ஐப்பசி மாச மூலநட்சத்திரத்துல பிறந்த ஜாதகர். ரெண்டு எல்லைதான் ஒண்ணு, ராஜா அல்லது வீதிவலம்தான். தட்டச்சநல்லூர் ருத்ரசோமசுந்தரர் கோயில்ல பரிகாரம் செய்யணும்'' என்றவர் நிர்மலாவைப் பார்த்துத் திரும்பி, ''நாளைக்கே அதைச் செஞ்சாகணும். என்னை வேற ஒண்ணும் கேட்காதீங்க'' என்று சொல்லிவிட்டு எழுந்து போய்விட்டார்.

*

அந்தக் கோயில் பாழடைந்து பார்க்கவே பயமாக இருந்தது. சுவடி ஜோதிடர் சொன்ன விஷயங்களை பூசாரியிடம் சொல்லி, எலுமிச்சம்பழம், நெய், திரி, தேங்காய், கீங்காய் என்று ஒவ்வொன்றாக எடுத்து வெளியே பயம் சார்ந்த திகிலுடன் வைத்தாள் நிர்மலா. அர்ச்சகர் அல்ட்டிக்கறாப்ல இல்லை. அவருக்கு இதெல்லாம் வாடிக்கை போலிருக்கிறது. தணிந்த குரலில், காசுபோட்ட ஜுக்பாக்ஸ்போல - அல்லது கிடைக்கப்போற காசுக்காக, ஏதோ சொல்லி பூஜை செய்ய ஆரம்பித்தார்.

எனக்கு என்ன ஆச்சர்யமென்றால்.... அந்தக் கோவில், அந்த பிரதேசம்.... யாவுமே எல்லாமே எனக்கு ஓரளவு தெரிந்தாப் போலிருந்தது. நேராப் போயி வலப்புறம் திரும்பினால் ஸ்வாமிவாகனங்கள் நிறுத்தி யிருப் - யிருந்தார்கள்! கால் சூம்பிய ராட்சஸனாய்த் தேர் வாசலில் நின்றிருக் - ருந்தது!

டிரில் மாஸ்டர் போல கோயிலை ஆறு முறை சுற்றிவரச் சொன்னார். மூன்றாவது முறையே எனக்குத் தலை சு.... சமாளித்துக்கொண்டு சுற் - தலைசுற்றினேன். சுற்றினேன் தலை.

கடைசி சுற்றில் தத் - தடுமாறி அங்கே இருந்த ஒரு சின்ன சிலையைப் பிடித் - கோயிலுக்குள் மனித சிலை! இந்த மனுசனை எங்கேயோ நிச்சமாய்ப் பார்த்திருக்கிறேன்! - கீழே ஏதோ செதுக் - 'ஐயடிகள்' - கியிருந்தது .. என் மொத்த ரத்தமும் தலைக்கு ஏறியது.

''ஐயடிகள் ஸ்வாமியைப் பார்க்கறீங்களா? இங்கேயே சமாதியான பெரிய்ய மகான். இவரைப் பத்தி கதை கதையாச் சொல்வாங்க. ஒவ்வொரு சிவன் கோயிலாப் போயி பாட்டுப் பாடி சாமி கும்பிடுவாராம். பிச்சை எடுத்துச் சாப்பிடுவாராம். இந்த ஊர்லேயே பெரிய பணக்காரரா இருந்தவரோட மகளுக்குப் பிடிச்சிருந்த பைத்தியத்தைப் பாட்டுப் பாடியே குணப்படுத்திட்டாராம். (சிலாள் பாட்டுப் பாடினா பைத்தியம் பிடிக்கும்) - அவர் குடுத்த தங்கக் காசுகளை ஐயடிகள் தொட்டதும் அது தண்ணியா மாறி பூமியில பரவிடுச்சாம். இந்த சுவர்ல இருக்கறதெல்லாம் இவர் பாடின பாட்டுதான்'' என்றார் பூசாரி.

படித்துப் பார்த்தேன். புரியாத தமிழ். பாட்டின் தாள லயம் மனதை என்னமோ செய்தது.

புறப்பட்டு வந்தோம்.

இரவு ஒன்பது மணி இருக்கும். மழை தூறிக்கொண்டிருந்தது. ''நீ ஆட்டோ பிடிச்சுப் போயிடு. நான் வண்டி எடுத்துட்டு வர்றேன்'' என்று நிர்மலாவை அனுப்பிவைத்தேன்.

வழியில் டாஸ்மாக் ஜெகஜோதியாக இருந்தது. ஒரு பெக் சாப்பிட்ட நேரத்தில் தூறல் விட்டிருந்தது. எனக்கு தங்கக்காசு தந்தால் நானுங்கூட இதோ தண்ணியா மாத்திக் காட்டுறேன்! - மீதியைப் பாக்கெட்டில் வைத்துக்கொண்டு சிக்கன் வறுவல் பார்சலோடு புறப்பட்டேன்.

கும்மிருட்டு. ஹெட்லைட் பேருக்கு எரிந்தது. மூளையின் இறுக்கங்களை நெகிழ்த்தி யோசனை மூட்டை கிழிந்து கொட்டுவது போன்ற போதை. அல்குல் அது இதுவென்று சங்ககாலக் கெட்ட வார்த்தைகள் மனசுக்குள் வட்டமடித்தன...

வீட்டுக்குள் நுழைந்ததுமே வாசனை பிடித்துவிட்ட நிர்மலா, ''என்னங்க இது அமாவாசையும் அதுவுமா அசைவம் வாங்கிட்டு வந்திருக்கீங்க? கோயிலுக்கு வேற போயிட்டு வந்திருக்கோம்...'' என்று முணுமுணுக்கத் தொடங்கினாள். '

என் மூளையில் பாம்பு கொத்தியது. ''என்ன சொன்னே, அமாவாசையா..?'' ஏறக்குறைய கத்தினேன். ''இது எந்தத் தமிழ் மாசம்?''

''ஐப்பசி, அட மறந்தே போயிட்டோமே இன்னிக்கு உங்க பிறந்த நட்சத்திரமாச்சே...'' என்றாள் நிர்மலா. பிரமை பிடித்து நின்றேன்.

''என்னங்க... என்ன ஆச்சு?''

கோயில் சுவரில் பார்த்த ஒரு பாட்டு நெற்றிப் பொட்டைக் கிழித்துக்கொண்டு நினைவுக்குள் வந்தது.
'இரண்டாம், இருபூஜ்யம் பத்தாம் ஒருவருடம்
திரண்டே தெருவெங்கும் நீரோட - இருண்ட
தினமதில் மூன்றாம் முறைகூடு விட்டு
சிவமதைச் சேர்தல் கடன்'.

பாட்டில் சொல்லியிருப்பது 2010 மழைக்கால அமாவாசை நாளா..?

அந்த நாடி ஜோசியன், அவன்கூட, இதுமாதிரி, பயத்துடன் ஏதோ சொன்னானே!

உடல் அதிர்ந்து அடங்கியது. பாக்கெட்டில் இருந்த பாட்டிலை எடுத்து அப்படியே வாயில் கவிழ்ந்த்துக்கொண்டேன். அப்புறம் என்ன நடந்தது என்பது எனக்குத் தெரியாது.

Tuesday, September 28, 2010

ஐயடிகள் காடவர்கோன் 2

முதல் பகுதிஅதில் ஒரு வார்த்தையும் புரியவில்லை. மறுபடி மனம் முழுக்க குழப்பம் சூழ்ந்தது. பொங்கு போதையும் தலை சுற்றலுமாகக் கிளம்பி வீட்டுக்குப் போய்விட்டேன்.

*

காலையானால் எஃப்எம் வைத்துவிடுகிறாள் நிர்மலா. ரேடியோவை அணைத்தால் அவள் சமையலில் நிதானம் தவறி மளிகைப் பட்டியலில் உப்புச் செலவு ஜாஸ்தியாகிவிடும் என்பதால் எதையும் காதில் போட்டுக்கொள்வதில்லை நான். ''சாயந்திரம் வரும்போது ---- வாங்கிட்டு வாங்க'' என்று நிர்மலா சொல்வதையும்.

மனுஷன் பரபரப்பாகக் கிளம்பிக்கொண்டு இருக்கும்போது, ''நான் ஒரு கவிதை சொல்றேன், மேகம் வடிக்கும் உப்பிள்ளாத கன்னீர்தான் மளை. எப்பிடி இருக்கு?''

''ஹைய்யோ, ஸூப்பர்பா ஸொன்னீங்க. இது நீங்கலே எலுதினதா... இதோ உங்க பாட்டு'' என்பதில் எரிச்சலடைந்து ரேடியோவை அணைத்தேன். நாம் சொல்வதைக் கேட்பதற்காக ரேடியோ கிடையாது.

அது ஸ்டேஷன் மாறி ரெயின்பே எஃப்எம்முக்குப் போனது. ''காடவர்கோன் என்பது சரியான விடை. கஷ்டமான கேள்விக்கு ரொம்பச் சரியா பதில் சொல்லிட்டீங்க. பாராட்டுக்கள்'' என்று தொகுப்பாளர் பரபரப்பான குரலில் கத்தியதும் மாள, என திகைத்துப் போனேன்.


எப்படித்தான் ஆஃபீஸுக்கு போன் போட்டேனோ, எப்படித்தான் பெர்மிஷன் கேட்டேனோ...

அடுத்த முக்கால் மணி நேரத்தில் ரெயின்பே ரேடியோவில் இருந்தேன். சம்பந்தப்பட்ட நிகழ்ச்சியின் தயாரிப்பாளரைச் சந்திக்க வேண்டும் என்பதை செக்யூரிட்டிக்குப் புரிய வைக்க இருபது நிமிடம் பிடித்தது. தயாரிப்பாளரைப் பார்த்து, நான் கேட்பது ராணுவ ரகசியத்தை அல்ல, என்று உணர்த்தி அவரது திகிலைக் குறைக்கவேண்டி இருந்தது. எல்லா விவரங்களையும் தெளிவாக விசாரித்துத் தெரிந்துகொண்டார் தயாரிப்பாளர்,

''நேயர்களோட அட்ரஸ் எங்களுக்கு எப்படிங்க தெரியும்? அவங்க போன் போட்டுப் பேசுவாங்க. அவங்களுக்குப் பரிசா ஒரு பாட்டுப் போடுவோம்...''

''காலர் ஐ.டியில நம்பர் இருக்காதா..?''

அவர் சிரித்தார். ''ஒரு நாளைக்கு எத்தனை நேயர்கள் பேசுறாங்கன்னு லிஸ்ட் தரட்டுங்களா?'' என்றார்.

சோர்ந்து திரும்பியவன், திடீரென்று திரும்பி அவரை நோக்கி ஓடினேன்.

நாற்காலியில் இருந்து எழுந்துவிட்ட அவர், என்ன என்பதுபோல் பார்த்தார்.

''சார், அந்தப் பதிலுக்கான கேள்வி என்னன்னு சொல்லுங்க'' என்றேன். கண்டேன்... நல்வார்த்தை நற்றமிழில் நவிலுக நாயே! என் இதயத் துடிப்பின் சத்தம் அந்த அறையில் ஓடிக்கொண்டு இருந்த ஃபேனின் சத்தத்தைவிட அதிகமாக இருந்தது.

அவர் மேஜை மணியை அடித்தது, அட்டெண்டென்ட் வந்தது, இவர் வேறு யாரையோ அழைத்து வரச் சொன்னது, அவர் வந்தது எல்லாமே ஸ்லோ மோஷனில் ந ட ந் த து. எனக்கு மூளைக்குள்ளே நரம்பு துடித்தது.

''காடவர்களுக்குத் தலைமை தாங்கி, ராஜ்யத்தை விஸ்தரித்த தென்னிந்திய மன்னன் யார்?' இதுதான் சார் அந்தக் கேள்வி.''

அவரே அவசரமாக ''அது நான் எப்பவோ, எங்கேயோ படிச்ச தகவல் சார். ஞாபகத்திலிருந்து எழுதினேன், ஏதாவது தப்புங்களா..?''

அவர் கவலை அவருக்கு. சரியாகவும் இருக்கலாம்... எனக்கே தெரியவில்லையே. அடியேனின் அவஸ்தையை அறியாத அற்பர்கள்..!

பிதுக்கிக் குடிக்கப்பட்ட பிளாஸ்டிக் பாக்கெட்டாய் வெளியே என்னையே வீசிக்கொண்டேன்.

ஆஃபீஸ் போகப் பிடிக்கவில்லை. முதன்முதலாக தலை வலிக்கிற உண்மையைச் சொல்லி லீவு போட்டேன். என் ராஜ நடை தொய்ந்திருந்தது. வண்டியை உதைத்து வீட்டுப்பக்கம் திருப்பினேன்.

வெறுமனே தூங்க முடியாது.... நிர்மலா, கோயம்பேட்டுக்குப் போயிருப்பாள் போலும். நல்லதாப் போச்சு. ஃப்ரிட்ஜில் வார இறுதிக்கான பீர் ரெண்டு பாட்டில் இருந்தது. வெயிலுக்கு இதமாக ஜில்லென்று நெஞ்சாங்கூட்டில் இறங்கியது. பாட்டில்களில் வெறும் தண்ணீரை ஊற்றி மூடியை வைத்து அழுத்திவிட்டு கட்டிலில் சாய்ந்தேன்.

இந்த ஐயடிகள் காடவர்கோன் யார்? ஏன் என்னை இப்படித் துரத்துகிறான்? எனக்குப் பைத்தியம் பிடித்துக்கொண்டு இருக்கிறதா? மூளையைப் பிறாண்டிக்கொண்டுதான் சாகப் போகிறேனா? என் பிராவிடென்ட் ஃபண்ட், இன்ஷ்யூரன்ஸை எல்லாம் நிர்மலா ஒழுங்காக வாங்கிவிடுவாளா?

நிர்மலா, எனக்கப்புறம் இன்னொரு கல்யாணம் செய்துகொள்வாயா? வேணாம் பிளீஸ். அவனாவது நிம்மதியாக வாழட்டுமே நிர்மலா...

நான் ஒருவேளை காடவர்கோனின் மறுபிறவியா? மண்ணாங்கட்டி! ஒரு பிறவியே பிரச்னையாக இருக்கிறது...

மனச் சுவரில் பலவிதமான சித்திரங்கள் சிதிலமாகத் தோன்றி மறைந்தபடி இருக்கின்றன.

அட! அதென்ன? நான் ஒரு சிம்மாசனத்தில் உட்கார்ந்திருக்கிறேன். எனக்கு மன்னர் உடை பொருத்தமாகத்தான் இருக்கிறது. ஒரு புலவர் எழுந்தார்.

''கொன்றையந் தார்சூடி கொடுங்களம் போராடி
கன்றிளம் காளையாய் கடும்பகை வேரோடு
கொன்றுஎம் துயர்தீர்க்க திசையெலாம் சூழ
வென்றவன் என்றுமே வாழ்க வாழ்க!'

அட, நமக்கு இவ்வளவு பெருமையா? ''யாரங்கே, புலவருக்கு ஒரு ஃபிப்டி ருபீஸ் பழைய நோட்டு கொடுங்கள்.'' ..

அடுத்து ஒரு புலவர் எழுந்தார். இவர் முந்தைய புலவரைவிட நன்றாகப் புகழ்வாரா?

''நாடாளல் மன்னர்க் கழகு. கவியெழுதி
ஏடாண்டால் மக்கள் எதுசெய்வர் - ஓடோடி
குடித்துவிட்டுப் பாட்டெழுதி கேவலப் பட்டபுகழ்
வடித்துவைப்பேன் வார்த்தை தொகுத்து.''

அடப்பாவி, அன்று பாரில் கேவலப் பட்டதைக் கிண்டல் செய்கிறானா? வாளை உருவிக்கொண்டு,. கட்டிலில் இருந்து மடேல் என்று கீழே விழுந்துவிட்டேன்.

மணியைப் பார்த்தேன். படுத்து அரை மணிகூட ஆகவில்லை. மண்டையின் குடைச்சல் தாங்காமல் கிறுகிறுத்தது தலை. முகம் கழுவிக்கொள்ளக்கூடத் தோன்றவில்லை.

பார் இதைப் பார், பாரில் நிகருண்டோ இதற்கு?

பாரில் எழுதிய காகிதத்தைத் தேடி எடுத்துக்கொண்டேன். எப்படியாவது இதைத் துப்புத் துலக்காவிட்டால் வாழவே துப்பில்லை என்று அர்த்தம்.

ரெண்டு தெரு தள்ளி இருக்கும் ஓய்வுபெற்ற தமிழாசிரியர் ஒருவர். அவரும் கதை எல்லாம் எழுதுவார். மூக்குப்பொடி வாங்க கைமாத்து அடிக்கடி கேட்பார். அதனால் அடிக்கடி சந்திப்பதில்லை. அவர் வீட்டுக்குப் போனேன்.

''இது பதினஞ்சு அல்லது பதிநாலாம் நூற்றாண்டில் புழக்கத்தில் இருந்த தமிழ் மாதிரி இருக்கு''.

''இதுக்கு அர்த்தம்கூட இருக்குங்களா?''

''என்னிக்கு சாகப் போறோம்னு தெரியாது. நம்ம உடலைக் கழுகு கொத்தி சிதைக்கிறதுக்கு முன்னாடி படவா நீ சிவனைக் கும்பிடு'ன்றா மாதிரியான கருத்து...'' என்றார்.

இப்படி தத்துவார்த்தமான பாட்டை நான் எப்படி எழுதினேன்..? ஒருவேளை அந்த ஐயடிகள் காடவர்கோன் சாமியாராக இருப்பாரோ? என்ன கண்றாவி இது. எங்கிருந்தோ 'மனமே நீ ஈசன் நாமத்தை' என்று பழைய காலப் பாட்டு கேட்டது. இதிலும் நாமமா அதும் சிவபெருமானுக்கே நாமம் போடுறான்கள்...

அட, சங்கமேஸ்வரன்!

பழைய பொருட்களின் பிரியன். பழைய பாடல்கள், பழைய திரைப்படங்கள், பழைய கால நாணயங்கள் சேகரிப்பவன். அவன் சாப்பிடுவதே பழைய அழுகிய தக்காளிதான் .மயிலாப்பூர் சுடுகாட்டுப் பக்கத்தில் அபார்ட்மென்ட். ஒருமுறை ஹொன்னப்ப பாகவதரின் பாட்டுக்களை - 'காடுடைய சுடலைப் பொடி பூசி' - கேட்கச் சொல்லி வற்புறுத்தியதில் இருந்து அவனோடு தொடர்பு துண்டுபட்டுப் போயிற்று.

''மிக்ஸர் சாப்பிடுறியா?'' என்று தந்தான் சங்கமேஸ்வரன். சங்ககால மிக்ஸரா? இன்னும் என்னென்ன புராதன வஸ்துக்கள் வைத்திருக்கிறானோ...

நான் சொன்ன எல்லா விவரங்களையும் பொறுமையாகக் கேட்டுக்கொண்டான்.

''முன்னால காஞ்சிபுரம் பக்கத்துல காடவர் இன மக்கள் இருந்தாங்கன்னு எதிலேயோ படிச்ச ஞாபகம் இருக்கு'' என்று தாடையைச் சொறிந்தான்.

நமக்குத் தெரிஞ்ச காஞ்சி ஆசான்கள் போலிஸ் ஸ்டேஷன்வரை மார்னிங் வாக் போய்வருகிறார்கள்!

என் நாடித்துடிப்பு எகிற ஆரம்பித்தது. ''ஒரு நிமிஷம்'' என்று சொல்லிவிட்டு யார் யாருக்கோ போன் போட்டான்.

ரொம்ப நல்லவனாக இருக்கிறான். ஹொன்னப்ப பாகவதர் பாட்டைக் கேட்டே இருந்திருக்கலாம்.

''பிடிச்சிட்டேன் நண்பா'' என்று உற்சாகமாகச் சொன்னான் சங்கமேஸ்வரன். அவனுக்குத் தெரிந்த ஒருவர் அந்த மன்னனைப் பற்றிப் படித்திருக்கிறாராம்.

''அவருக்கு உடம்பு முடியாததால அவர் வீட்டுக்கு நம்மளைக் கூப்பிடுறாரு.''

''உடனே விடுரா, ஜுட்!''

காற்றினும் கடுகி விரைகிறது மனப்புரவி, மனப்புரளி!

(நாளை)

Monday, September 27, 2010

ஐயடிகள் காடவர்கோன் தொடர் கதை

ரெண்டு பேர். நாற்காலியில் உட்காரும் இடத்தில் கையை வைத்து, கண்கள் செருகி சுவரில் சாய்ந்து தரையில் உட்கார்ந்திருக்கும் ஒருவர். அறிவின் விஸ்தீரணம் நரையில் தெரிய, மிச்சமிருக்கும் சொச்ச நாட்களில் இலக்கியத்தைக் காப்பாற்ற இருமலுடன் வந்திருக்கும் ரெண்டு பெரியவர்கள். மருந்துக்கும் பெண் கிடையாது. அவர்கள் வடிக்கும் மூடிதிறந்த ஆவேச இலக்கியப் பக்கங்களைக் கண்டால் இந்தப் பெருசுகள் மூச்சு நின்றுவிடும்.

இலக்கியக் கூட்டம்.. மொத்தத்துக்கு இருபத்தைந்து டிக்கெட்டுகள் இருந்தால் அதிகம். முதலில் ஓர் இலக்கியவாதி மதராஸில் ட்ராம் வந்து குதிரை வண்டிய அழிச்சிட்டது, என்று ஏதாவது ஆக்சிடென்ட் பற்றிப் பேசுவார். அடுத்து இன்னொரு அழுக்குச்சட்டைக்காரர் அந்த மாதம் பத்திரிகைகளில் வெளியான சிறுகதைகளில் சிறந்ததாக ஒன்றைத் தேர்ந்தெடுப்பார். 'அப்பாவுக்கு அரைச் செங்கல்' என்கிற என் சிறுகதை 'கழிவு' பத்திரிகையில் வெளிவந்திருந்தது. என் கதைக்கோ, இதைவிட மோசமான இன்னொரு கதைக்கோ பரிசு கிடைக்கலாம்... அழுக்கு நோட்டானாலும் அப்போதே தருவார்கள். பாட்டிலுக்கு உறுதி.

மோட்டார் சைக்கிள் ரேசில் எல்லாம் ஜெயிச்சவன் பீரை எடுத்து பிஸ்க்கவில்லையா நாலாபக்கமும்? ரைட்டர்னா கூடாதா?

கூட்டம் ஆரம்பித்தது. ஒரு வெள்ளிப்பனித்தலையர் எழுந்து, ''இங்கே எல்லாரும் எல்லாருக்கும் பரிச்சயம்தான். இருந்தாலும் ரெண்டு மூணு புது-கிழ-முகங்கள் தெரியறதால, எல்லாரும் அவங்கவங்க பேர் சொல்லி சாவறதுக்குள்ளாற அறிமுகப்படுத்திக்கலாமா'' என்றார். ஒவ்வொருவராக பேர் சொல்லிக்கொண்டு வந்தார்கள்.

எனக்கு முன்னால் இருந்தவர் சொல்லிமுடித்ததும் நான் எழுந்து ''ஐயடிகள் காட... ம்... சிவதாசன்'' என்று சொல்லிவிட்டு உட்கார்ந்தேன்.

எனக்குக் குழப்பமாக இருந்தது. சிவதாசன் என்று சொல்வதற்குப் பதிலாக வேறேதோ... ஹாங்... ஐயடிகள் காடவர்கோன் என்று சொல்லப் போனேனே, அது ஏன்? கவுந்தி அடிகள், கேள்விப்பட்டிருக்கிறேன். தாண்டவக்கோனே - பாட்டுக் கேட்டிருக்கிறேன். இது யார் ஐயடிகள் காடவர்கோன்?

மூளை சூடானதுபோல் தோன்றியபோது யோசிப்பதை நிறுத்தினேன். கூட்டத்தில் ஒன்ற முடியாமல் அந்த அரங்கின் ஜனத்தொகையை இருபத்தி நாலாக்கிவிட்டு வெளியேறினேன். ஐயா கோவிச்சுக்காமல் பரிசைத் தபாலில் அனுப்பவும், பாட்டிலாக என்றாலும் ஓ.கே.

வீட்டுப் பிடுங்கல், வேலைபார்க்கும் உரத் தொழிற்சாலை சவால்கள் என்று பரபரப்பில், இந்த விஷயத்தை மறந்தே போனேன்.
*


''சார், 'ரெப்'ஆ இருந்த நீங்க ஸீனியர் ரெப் ஆகியிருக்கீங்க. எங்களுக்கெல்லாம் பார்ட்டி கிடையாதா சார், கிடையாதா என்ன, எந்த இடத்திலேன்னு சொல்லுங்க..'' என்றாள் அக்கவுன்ட்ஸ் நந்திதா. பார்ட்டி சந்தோஷமாகக் கொடுக்கலாம். தண்ணி பார்ட்டியானால். இதுகளெல்லாம் எல்லாவற்றிலும் சைவம். பரவால்லை, கேட்டவள் தனியே லிஃப்ட் மறைவில் ஒரு முத்த வாய்ப்பு அளிக்கலாம்... பெண்களோடு லஞ்ச் சாப்பிட்டுவிட்டு, மாலை வீரஅசைவர்கள் எல்லாம் பாருக்குப் படையெடுத்தோம்.

''எம்.சி. ரெண்டு ஃபுல்லு குடுப்பா.''

''எம்.சி. இல்ல சார், ஹனிபீ வாங்க்கிர்றீங்களா?''

''ஜானெக்ஷா இருக்கா..?''

''ஜானெக்ஷா இல்ல சார், டே நைட் தரட்டுமா?''

டாஸ்மாக் வந்ததிலிருந்து நாம் குடிப்பது கடைக்காரன் சாய்ஸ் என்று ஆகிவிட்டது.

''என்ன எழவு இருக்கோ அதில ரெண்டு ஃபுல்லு குடு. சீரழிஞ்ச சிகரெட் மூணு பாக்கெட் வாங்கிக்க. பாழாப்போன பாக்கு பத்து வாங்கிக்க.'' அவரவரும் தங்களுக்குப் பிடித்த சைட் டிஷ் சொன்னார்கள். கடைப் பையன் முகத்தில் 'ஏகப்பட்ட டிப்ஸ்' சிரிப்பு.

எங்க காட்ல தண்ணின்னா, அடேய் உங்காட்ல மழை.

பார்ட்டி களைகட்டியது. எங்கே அடுத்தவன் அடுத்த ரவுண்டுக்குப் போய்விடுவானோ என்ற பயத்தில் எல்லோருமே வேகவேகமாகக் குடித்தோம். சிகரெட் புகை. மூத்திர நாற்றம். தலை கிர்ரடித்து ஹைதர் அலி காலத்து ஃபேன் போலச் சுழன்றது.

அட்டெண்டர் ராஜு ஒரு ஜோக்கை ஆறாவது முறையாகச் சொல்லிக்கொண்டு இருந்தான். என் மூளைக்குள் சரளைக் கல் சரிய ஆரம்பித்த நேரம். என்ன தோன்றியதோ தெரியவில்லை, டேபிள் மீது இருந்த மெனு கார்டின் பின்னால் கிறுகிறு என்று எழுத ஆரம்பித்தேன்.


''த்தா டேய், நான் ஒரு கவிதை எழுதியிருக்கேன், படிங்கடா'' என்று கொடுத்தேன். போதையில் செல்லத்துக்குத்தான் முக்கியத்துவம். மரியாதையை மறுநாள் பராமரித்துக்கொள்ளலாம்.

ராஜு, நான் எழுதியதை வாங்கிப் படித்தான்.

''அழுகு திரிகுரம்பை ஆங்கது விட்டாவி
ஒழுகும் பொழுதறிய ஒண்ணா - கழுகு
கழித்துண் டலையாமுன் காவிரியின் தென்பால்
குழித்தண் டலையானைக் கூறு"

என்ன சார் இது, தமிழ் எழுத்துல கன்னடப் பாட்டு மாதிரி இருக்கு..?'' என்றான் ராஜு.

''இவ்வளவு நேரம் ராஜு சொன்ன ஜோக்கைவிட காமெடியா இருக்கு'' என்றான் இன்னொரு மங்குணிப் பாண்டியன்.

''அட, சும்மா இருங்கப்பா... ஆமா சிவதாசன் இந்தப் பாட்டுக்கு என்ன அர்த்தம்?''

காகிதத்தை வாங்கிப் பார்த்தேன். நானா இதை எழுதினேன்..?

(நாளை)