Tuesday, May 23, 2017

இப்போதும் இனிக்கும் குறள்
Introduction of kural history mystery motive
Characters: தருண், குழலி, ராணி, தேவி, சாம், குமார்.
தருண்: பத்திரிகையில் பணி. பள்ளிக் காலத்திலேயே பேச்சு, கட்டுரைப் போட்டிகளில் பரிசு பெற்றவன்.
குழலி: தருணின் மனைவி. தமிழார்வம் உள்ள பெண்.
ராணி: குழலியின் தமிழார்வத்துக்குக் காரணமான பெண். குழலியின் அம்மா. தமிழ் டீச்சர். வயது 42.
தேவி: தருணின் தங்கை. பள்ளி மாணவி. எக்ஸ்ட்ரா கரிகுலர் ஆக்டிவிடீஸில் அண்ணனைப் போலவே விருப்பம் உள்ள சிறுமி. வயது 17.
சாம்: தருணின் அலுவலக நண்பன்.
குமார்: தருணின் அலுவலக நண்பன்.
*
Begins
தேவி: எங்க ஸ்கூல்ல திருவள்ளுவர் விழா கொண்டாடப்போறாங்க. நான் எல்லா ஈவெண்ட்ஸ்லயும் பார்ட்டிசிபேட் பண்ணப் போறேன். பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, கவிதைப் போட்டி...
தருண்: வாவ்… அருமை. திருவள்ளுவர் விழாவிலேயே கவிதைப் போட்டியா? தமிழ்ல இதுவரைக்கும் உள்ள கவிஞர்களுக்கெல்லாம் தலைவர்னு திருவள்ளுவரைத்தானே சொல்ல முடியும். கவிதைப் போட்டி பொருத்தம்தான்.
குழலி: எவ்வளவு நீதிகளை எல்லாம் சொல்லியிருக்காரு! அதுவும் எத்தனையோ காலத்துக்கு முன்னால…
தருண்: அவரை வெறும் நீதி சொன்னவர்னு சுருக்கிட முடியுமா, குழலி? சொல்ற நீதியையும் கவிதையாச் சொல்றதுக்குப் பேர்போனவர் திருவள்ளுவர். அதுக்கு எடுத்துக்காட்டா எத்தனையோ திருக்குறள்களைச் சொல்லலாம். அப்பிடி கவிதையாக் கொட்டினதாலேதான் அவருக்கு, செந்நாப்போதார், பெருநாவலர்னு எல்லாம் பேரு வச்சுக் கூப்பிட்டாங்க.
சாம்: திருவள்ளுவருக்கு இன்னும் வேற பேர்கள்கூட இருக்கு, இல்ல?
குமார்: ஆமாமாம். சின்ன வயசுல படிச்சிருக்கேன். நாயனார், தேவர், முதற்பாவலர், தெய்வப்புலவர், நான்முகனார், மாதானுபங்கி… இப்பிடி நிறையப் பேர் வள்ளுவருக்கு உண்டு.
தருண்: அதே மாதிரி திருக்குறளுக்கும் நிறைய சிறப்புப் பேர்கள் இருக்கில்லையா?
குமார்: யெஸ்… உலகப் பொதுமறை, பொய்யாமொழி, தெய்வ நூல், தமிழ் மறை…
ராணி: குமார், அருமை. எப்பவோ படிச்சதை இன்னும் ஞாபகம் வச்சிருக்கீங்க. திருவள்ளுவரோட அத்தனை பேரையும் சொல்லிட்டீங்க. அந்தப் பேர்களோட அர்த்தத்தை எல்லாம் பாத்தா அதுவே ஒரு சுவாரசியம்…
சாம்: ஆஹா… தமிழம்மா நீங்க உட்கார்ந்திருக்கிறதை ஒரு செகண்ட் மறந்துட்டு நாங்க சின்னப் புள்ளைங்க பேசிட்டோம். அந்த அர்த்தங்களை நீங்க சொல்லுங்களேம்மா…
ராணி: திருக்குறள் ரெண்டாயிரம் வருஷத்துக்கு முந்தினதுன்னு எல்லோரும் ஒப்புக்குறோம். தமிழ்ல அதுக்கு முந்தி வேற எந்த புத்தகமும் இல்லை. உலக நாடுகள் எல்லாமும் கூட இதை ஒப்புக்கிட்டதால திருக்குறளுக்கு முந்தி புத்தகமே இல்லைன்னு எடுத்துக்கலாம் இல்லையா? அதனாலதான் முதல் புத்தகத்தை எழுதின திருவள்ளுவரை ‘முதற்பாவலர்’னு சொல்றாங்க. செய்யுளைப் பாடல்னும் சொல்ற வழக்கம் தமிழ் இலக்கியத்துல இருக்கு. தன்னோட கருத்துகளை எல்லாம் செய்யுள் வடிவத்துல, அதாவது பாடல் வடிவத்துல எழுதுறவர் பாவலர். அதில் முதல் ஆள், திருவள்ளுவர், அதனால அவர்தான் ‘முதற்பாவலர்’.
குழலி: எனக்கு ரொம்ப நாளா ஒரு ஆச்சரியம்மா… எழுதணும்னு திருவள்ளுவருக்கு எப்பிடித் தோணியிருக்கும்?
தருண்: அப்பிடிப் போடு, அத்தை, இதுக்கு நீங்க பதில் சொல்லியே ஆகணும்.
ராணி (சிரித்துக்கொண்டே): குழலி கேக்குறது அற்புதமான சந்தேகம். ஒரு நிமிஷம் நினைச்சுப் பாருங்க. ரெண்டாயிரம் வருஷத்துக்கு முன்னால மனுஷங்களோட சூழ்நிலை எப்பிடி இருந்திருக்கும்? டெக்னாலஜி கிடையாது, நல்ல வீடு கிடையாது; ஏன், கரண்ட்கூடக் கிடையாது. வாழணும்னா, நாமளே உடல் உழைப்பு செஞ்சாத்தான் உண்டு. அந்தச் சூழ்நிலையில ஒரு மனுஷனுக்கு தோணியிருக்கு, தனக்குத் தெரிஞ்ச உண்மைகளை, நியாயங்களை இந்த உலகத்துக்குச் சொல்லணும்னு. அதுவும் மனசுல பதியிற மாதிரி சந்தத்தோட, இலக்கணத்தோட! குகைக்குள்ளேயும் குடிசைக்குள்ளேயும் தங்கிக்கிட்டு, மழை எப்ப வருமோ, புயல் எப்ப தாக்குமோன்னு பயந்துக்கிட்டு, பழம் எங்கே கிடைக்கும், கிழங்கு எங்கே அகழ்ந்து எடுக்கலாம்னு கவலைப்பட்டுக்கிட்டு இருக்குற கூட்டத்துல ஒரு மனுஷனுக்கு மட்டும் எழுதணும்னு தோணியிருக்கே… அதுதான் க்ரியேட்டிவிடி. படைப்பூக்கம். அந்த இக்கட்டுகளுக்கு மத்தியிலேயும் எந்த விமர்சனத்தையும் அங்கீகாரத்தையும் எதிர்பார்க்காம எழுதின அந்த மனசுக்காகத்தான் திருவள்ளுவருக்கு, மனிதர்களுக்கு மத்தியில ‘தேவன்’ அப்டீன்னு பேர். அதே காரணத்துனாலதான் தெய்வப் புலவர்னும் சொன்னாங்க. படைப்புக்கடவுள் பிரம்மனோட பேரான ‘நான்முகனார்’னும் திருவள்ளுவரைக் குறிப்பிட்டாங்க…
தருண்: அங்கீகாரம் கிடைக்காட்டிக் கூடப் பரவாயில்லை, எவ்வளவு கேலி, கிண்டல்களை சந்திச்சிருப்பாரு…
சாம்: அதே, அதே… மனசுக்குத் தோணினதை எல்லாம் ஃபேஸ்புக்குல போட்டுட்டு, அருமை தோழர், பிரமாதம் சகோன்னு கமெண்ட் பாக்க முடியுமா அப்பல்லாம்?
குமார்: திருக்குறள் முதல் முதல்ல அச்சுலே வந்ததே, 1812- லதான். அச்சுக்குக் கொண்டுவந்தவர் தஞ்சை ஞானப்பிரகாசர்னு சொல்றாங்க.
ராணி: ஸோ, எழுதும்போது பனை ஓலையில தான் கீறிக் கீறித்தான் எழுதியிருப்பார். திருவள்ளுவரோட ஆணி முக்கியம்தானே?
குழலி: ஹாஹாஹா… அம்மா பழசுலேருந்து டக்குனு கரண்ட் ட்ரெண்டுக்கு மாறுறாங்க பாருங்க…
தேவி: திருக்குறள்ங்கிற புத்தகத்தை எழுதின திருவள்ளுவருக்குப் பின்னாடி இவ்வளவு ஸ்பெஷாலிட்டி இருக்கா?
ராணி: வெயிட் வெயிட். திருவள்ளுவர், திருக்குறள்ங்கிற புத்தகத்தை எழுதலை. அவர் அப்பப்ப எழுதின சிந்தனைகள்தான் பிற்காலத்துல புத்தகமா மாறிச்சு. அவர் எழுதினது எல்லாம், குறள் வெண்பாங்கிற இலக்கணத்துக்குள்ள அடங்கி இருந்ததால அதுக்கெல்லாம் குறள்னு பேர் வந்துது. பெருமையாச் சொல்றதுக்காக, திருக்குறள்னு வச்சாங்க.
குமார்: ஓ… குறள் வெண்பாங்கிற இலக்கணத்துக்குள்ளதான் திருக்குறள் இருக்கா?
ராணி: ஆமா, இப்போ, ட்விட்டர்ல நூத்தி நாப்பது எழுத்துக்குள்ள (கேரக்டர்) விஷயத்தைச் சொல்லணும்னு வச்சிருக்காங்களே, அது மாதிரி. நாலு ப்ளஸ் மூணு சீர்ல, அதாவது ரெண்டு அடியில விஷயத்தைச் சொல்லி முடிக்கணும். அதான் குறள் வெண்பா.
குழலி: எப்பிடி கச்சிதமா நூத்தி முப்பத்து மூணு டாபிக், ஒவ்வொரு டாபிக்குக்கும் பத்து குறள்னு ஆயிரத்து முன்னூத்து முப்பது குறள் எழுதணும்னு முடிவு பண்ணினார் வள்ளுவர்?
ராணி: இல்லை இல்லை, அவர் நிறைய எழுதினாராம். பிற்காலத்துல தேடினவங்களுக்குக் கிடைச்சது 1330 குறள்கள்தானாம். இப்படி ஒரு வரலாறும் இருக்கு.
தருண்: அட! அந்த காணாமப் போன குறள்களும் கிடைச்சிருந்தா எவ்வளவு நல்லா இருந்திருக்கும்…
சாம்: இப்பவே, வள்ளுவர் தொடாத டாபிக்கே இல்லைங்கிற மாதிரிதானே இருக்கு…
தேவி: இன்னிக்கு இருக்குற சூழ்நிலை வேற ஆச்சே… டெக்னாலஜி இம்ப்ரூவ்மெண்ட், மாடர்ன் ப்ராப்ளம்ஸ்…
தருண்: இல்லம்மா… ஃபேஸ்புக் பத்தி திருக்குறள் இருக்கான்னு பார்க்கக் கூடாது. ஃபேஸ்புக்குங்கிறது என்ன? ஒரு தகவல் தொடர்பு சாதனம். பிறரோட நாம உறவாட, உரையாட ஒரு கருவி. அதுல எப்படி நடந்துக்கணும், எந்த மாதிரி பேசக்கூடாதுங்கிற எட்டிக்கெட் எல்லாம் இருக்கு இல்லையா? அதை வள்ளுவர் அப்பவே சொல்லி வச்சிருக்காரு. ‘ஃபேஸ்புக்ல சும்மா வளவளன்னு எழுதினா யாரும் படிக்க மாட்டாங்க. டு தி பாயிண்ட் எழுதினாத்தான் லைக்ஸும் கமெண்ட்ஸும் கிடைக்கும்’னு வள்ளுவர் எழுத வாய்ப்பில்லை. ஆனா, ‘இன்னிக்கு தேவி போட்டுருக்கிற ஸ்டேட்டஸ் காலையில இருந்து மனசுல சுத்திக்கேட்டே இருக்குடி’ன்னும்; ‘இன்னிக்கு தேவி ஃபேஸ்புக்ல ஏதோ ஸ்டேட்டஸ் அப்டேட் பண்ணியிருக்காளாமே… எல்லாரும் அதைப் பத்தியே பேசுறாங்களே’ன்னும் சொல்ற மாதிரி ஸ்டேட்டஸ் போடணும். இந்த அர்த்தத்துலதான் வள்ளுவர்,
‘கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும்
வேட்ப மொழிவதாம் சொல்’ ங்கிற குறள்ல சொல்றாரு…
தேவி: ஓ.எம்.ஜி… வள்ளுவர் இஸ் அமேஜ்ஸிங்…
குழலி: ஓ மை காட்ங்கிறதை தேவி எப்பிடிச் சொல்றா பாருங்க… இதே மாதிரிதானே வள்ளுவர் ரெண்டே வரியில தான் சொல்ல வந்த கருத்தை முழுசாச் சொல்லியிருக்கார்..!
தருண்: அதனாலதானே மத்த புலவர்கள் எல்லாம் திருவள்ளுவரைத் தலையில தூக்கி வச்சுக் கொண்டாடினாங்க.
ராணி: ஆமாமா… ‘கடுகைத் துளைத்தேழ் கடலைப் புகட்டிக் குறுகத் தறித்த குறள்’னு கொண்டாடினார் இடைக்காடர்ங்கிற புலவர். கடுகு உதாரணம்கூட ஔவையாருக்குப் பொருத்தமாத் தோணலை. அதனால, ‘அணுவைத் துளைத்தேழ் கடலைப் புகட்டிக் குறுகத் தறித்த குறள்’னு மேலேயும் பெருமை சேத்தாங்க.
தருண்: கரெக்டாச் சொன்னீங்க அத்தை. இந்தப் பாட்டுகளை கூகுள்ல தேடும்போது எனக்கு இன்னும் சுவாரசியமான சில பாட்டுகள் கிடைச்சுது.
‘வெள்ளி வியாழம் விளங்கிரவி வெண்திங்கள்
பொள்ளென நீக்கும் புறஇருளை – தெள்ளிய
வள்ளுவ ரின்குறள் வெண்பா அகிலத்தோர்
உள்ளிருள் நீக்கும் ஒளி’ ன்னு மதுரைப் பாலாசிரியனார் பாடியிருக்கார்.
ஆலங்குடி வங்கனார்னு இன்னொரு புலவர்,
‘வள்ளுவர் பாட்டின் வளம்உரைக்கின் வாய்மடுக்கும்
தெள்ளமுதின் தீஞ்சுவையும் ஒவ்வாதால் – தெள்ளமுதம்
உண்டறிவார் தேவர் உலகடைய உண்ணுமால்
வண்டமிழின் முப்பால் மகிழ்ந்து’
பாடியிருக்கார்.
பலப்பல வருஷங்களுக்கு அப்பறமா வந்த பாரதியாருக்குக்கூட வள்ளுவர் மேல ஆச்சரியம் குறையலையே…
‘யாமறிந்த புலவரிலே கம்பனைப் போல் வள்ளுவர்போல் இளங்கோவைப் போல்
பூமிதனில் யாவருமே பிறந்ததில்லை; உண்மை வெறும் புகழ்ச்சி இல்லை’ன்னு சொல்லிச் சொல்லிப் பாராட்டினார்.  
ராணி: எல்லாக் காலத்திலேயும் எல்லாருக்கும் தேவையான எல்லா மருந்தும் திருக்குறள்ல இருக்கும். அதிலேயும், திருக்குறள் ஒரு மெடிக்கல் ஷாப் மாதிரின்னுகூடச் சொல்லலாம். பேதி ஆகுறதுக்கும் மருந்து இருக்கும். பேதியை நிறுத்துறதுக்கும் மருந்து இருக்கும். நமக்கு அந்த நேரத்துக்கு எது தேவையோ அதை எடுத்துக்கலாம்.
தருண்: அத்தை இஸ் அமேஜ்ஸிங்.
சாம்: சமூகத்தோட நோயைத் தீர்க்குற மருந்தை மட்டும் திருக்குறள் குடுக்கலை; சமூகத்துக்கு நோய் வராம இருக்குறதுக்கும் ப்ரிவென்ஷன் மெத்தட்ஸ் சொல்லுது. அந்த வகையில திருக்குறள் கிரேட்தான்…
குமார்: அந்த ஸ்பெஷாலிட்டி இருக்கறதாலதானே ஏராளமான உலக மொழிகள்ல திருக்குறள் மொழிபெயர்க்கப்பட்டிருக்கு…
தருண்: ஆமா, பைபிள்தான் உலகத்திலேயே அதிகமான மொழிகள்ல வந்திருக்கு. அது மத நூல். அப்பிடி ஒரு மத நூலா இல்லாத புத்தகம் திருக்குறள். இருந்தாலும், பைபிளுக்கு அடுத்த படியா நூத்துக்கும் அதிகமான மொழிகள்ல மொழிபெயர்க்கப்பட்டு உலகத்தோட எல்லாப் பகுதிகள்லேயும் இதை ஆர்வமாவும் ஆச்சரியத்தோடவும் படிக்கிறாங்க.
தேவி: சந்தேகமே இல்லாம, திருக்குறளை, ‘தமிழோட பெருமை’ன்னு சொல்லலாம் இல்லையா, ஆன்ட்டி?
ராணி: அதுல என்ன சந்தேகம்? ஆனா, அப்படிப்பட்ட திருக்குறள்ல ‘தமிழ்’னு ஒரு சொல்லே இல்லை!!
தேவி: ஹைய்ய்யோஓஓஓ… சூப்பர்…
ராணி: இதுக்கே அசந்தா எப்பிடி? இன்னும் இது மாதிரி நிறைய சுவாரசியங்கள் திருக்குறள்ல உண்டு.
சாம்: ப்ளீஸ் சொல்லுங்க தெரிஞ்சுப்போம்.
ராணி:  கடவுள்ங்கிற சொல் கூட குறள்ல இல்லை. எழுத்துன்னு எடுத்துக்கிட்டா, குறள்ல வராத ஒரே உயிரெழுத்து ஔ. வராததை விட்டுறலாம். வந்ததைப் பார்த்தா, பற்று-ங்கிற வார்த்தை ஒரே குறள்ல ஆறு தடவை வந்திருக்கு.
தேவி: ஐ… எனக்கு அந்தக் குறள் தெரியும்… ‘பற்றுக பற்றற்றான் பற்றினை – அப்பற்றைப் பற்றுக பற்று விடற்கு. சரிதானே…
ராணி: தேவி சொன்னா தப்பா இருக்குமா? இன்னும் கவனமா திருக்குறளைப் படிச்சேன்னா, திருக்குறளுக்கு நீ குட்டிப் பசங்களுக்கான உரையே எழுதலாம்.
தேவி: வாவ்…
ராணி: முதல் முதல்ல திருக்குறளுக்கு உரை எழுதினவர், மணக்குடவர். அப்பறம் எத்தனையோ பேர் எழுதிட்டாங்க. மு.வரதராசனார் எழுதின உரை ரொம்ப ஃபேமஸ். அதே மாதிரி திருக்குறளை இங்லீஷ்ல முதல்ல மொழி பெயர்த்தவர் ஜி.யூ. போப். இன்னிக்கு வரைக்கும் பல மொழிகள்ல மொழி பெயர்த்துக்கிட்டுத்தான் இருக்காங்க.
சாம்: இன்னிக்கும் குறள் ரெலவண்ட்டா இருக்கே…
ராணி: இன்னிக்கு இருக்கிற சூழ்நிலையில திருக்குறள் எவ்வளவு பொருத்தமானதுன்னு தான் தொடர்ந்து பேசப்போறோம் இல்லையா…
தருண்: நிச்சயமா அத்தை. அந்த பேச்சுல இருந்தே தேவி தன்னோட போட்டிகளுக்குத் தேவையான ஸ்டஃப்-ஐ எல்லாம் எடுத்துப்பா…
*
பரிந்துரைக்கப்படக் கூடிய தமிழ்த் திரைப் பாடல்கள்
நான் பிறந்த நாட்டுக்கெந்த நாடு பெரியது

அறிவுக்கு விருந்தாகும் திருக்குறளே ......

அறிவுக்கு விருந்தாகும் திருக்குறளே வள்ளுவர்
ஆக்கி நமக்களித்த அரும் பொருளே
உலகுக்கு ஒளிபோலே உடலுக்கு உயிர்போலே
பயிருக்கு மழைபோலே பைந்தமிழ் மொழியாலே
அறிவுக்கு விருந்தாகும் திருக்குறளே
அறம் பொருள் இன்பம் எனப்படும் முப்பாலே
அனுபவத்தாலே தான் சுவைத்ததற்கப்பாலே
அவனியில் உள்ளோர்கள் அனைவரும் தலைபோலே
அவசியம் கற்றுணர்ந்து பயன் பெறும் நினைப்பாலே
அறிவுக்கு விருந்தாகும் திருக்குறளே
வாழும் வழிமுறைக்கு இலக்கணமானது
மனம் மொழி மெய்யினிக்கே வார்த்திட்ட தேனிது
வானகம் போல் விரிந்த பெரும் பொருள் கொண்டது
எம் மதத்துக்கும் பொதுவென்னும் பாராட்டைக் கண்டது
அறிவுக்கு விருந்தாகும் திருக்குறளே…