Friday, June 10, 2016

தன்னைத் தானே கவனித்தல்..

சுஷில் குமார்... சீனாவில் 2008&ல் நடந்த ஒலிம்பிக்கில் வெண்கலம், இப்போது லண்டனில் வெள்ளிப் பதக்கம் என அடுத்தடுத்த இரண்டு ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வென்ற முதல் இந்தியர். இப்படி மகத்தான சாதனை படைப்பதற்கோ அல்லது தான் குறித்துக்கொண்ட குறிக்கோளைச் செம்மையாக முடிப்பதற்கோ ஒரு சிலருக்கு மட்டும் எப்படி முடிகிறது?

பிறரிடம் இல்லாத ஏதோ ஓர் உந்துசக்தி அவர்களிடம் இருக்கிறது. இதைச் செய்ய வேண்டும், இதில் வெற்றி பெற வேண்டும் என்கிற எண்ணம் எல்லோரிடமும் இருக்கும். பத்தாம் வகுப்பிலும் 12&ஆம் வகுப்பிலும் மாநில அளவில் ரேங்க் வாங்க வேண்டும் என்கிற ஆசை யாரிடம்தான் இருக்காது? ஆனால், சிலர்தானே அதைச் சாதிக்கிறார்கள்... அதற்கு அவர்களுக்குப் பெரிய அளவில் உதவியாக இருந்தது உந்துசக்தி. ஆங்கிலத்தில் Motivation.

படிப்பது, வேலைக்குப் போவது, பணம் சம்பாதிப்பது, பிறருடனான உறவுகளைச் சிறப்பாகப் பேணுவது போன்ற பல்வேறு காரியங்களுக்கு முக்கியமான ஒத்தாசையாக இருப்பது இந்த உந்துசக்திதான். நமக்கு உள்ளே இருந்தே உந்துசக்தி நமக்குக் கிடைக்கும். சில சமயம் வெளியில் இருந்தும் உருவாகி வரும். ஒவ்வொரு நபருக்கும் தக்கபடி இந்த உந்துசக்திக்கான காரணங்கள் மாறுபடும். ஊக்கப்படுத்துதல், பரிசுகள், பணம், புகழ் போன்றவை சில காரணங்கள்.
உங்களுக்குப் பிடித்த ஒரு சினிமா நடிகரை எடுத்துக்கொள்ளுங்கள், ரசிகர்களின் பாராட்டுகள் அவரை ஊக்கப்படுத்தி இருக்கும். விருதுகளும் பரிசுகளும் அவரை அடுத்த படிக்கு இட்டுச் சென்றிருக்கும். அதனால் அவரது சன்மானப் பணம் படிப்படியாக உயர்ந்து, மேலும் சம்பாதிக்க வேண்டும் என்கிற எண்ணத்தை அவருக்கு ஏற்படுத்தி இருக்கும். இதனால் அவரது புகழ் அதிகரித்து, அந்தப் புகழைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டுமே என்கிற எண்ணம்கூட அவருக்கு ஒரு முக்கியமான உந்துசக்தியாக இருந்து இருப்பதை நீங்கள் உணர முடியும்.

இந்த உந்துசக்தியின் அளவுகூட நேரத்துக்கு நேரம் மாறுபடும் தன்மை உடையது. நம்பிக்கை, பிறரின் உதவியைப் பயன்படுத்திக்கொள்ளல், தன்னம்பிக்கை, கடின உழைப்பு, ஒரு வேலையைத் தொடர்ந்து செய்யும் தன்மை, ஒழுக்கம் போன்ற பல தகுதிகள், இந்த உந்துசக்தியின் அளவை அதிகரிக்கும். இப்போது விளையாட்டாக ஒரு கற்பனையைப் பார்ப்போம். நீங்கள் ஒரு பென்சில் டிராயிங் படத்துக்கு கலர் அடிக்கப்போகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். உங்களுக்கு உதவி செய்ய உங்கள் நண்பர் ஒருவர் பக்கத்தில் இருக்கிறார். இதில் மூன்று விதமான சூழ்நிலைகளைக் கற்பனை செய்துகொள்ளுங்கள்.

சூழ்நிலை - 1:

 நீங்கள் கலர் அடிக்க விரும்பும் வண்ணத்திலான பென்சில்களை உங்கள் நண்பர் உடனே எடுத்துக்கொடுக்கிறார். படத்தின் ஒவ்வொரு பகுதிக்கும் நீங்கள் கலர் அடித்து முடிக்கும்போது, நண்பர் உங்களைப் பாராட்டிக் கை தட்டுகிறார்.

நீங்கள் ஏதாவது தவறு செய்துவிட்டால் ‘பரவாயில்லை, மறுபடி முயற்சி செய்..’ என்கிறார்.

சூழ்நிலை - 2:

 நீங்கள் ஒரு கலரில் பென்சில் கேட்டால், நண்பர் இன்னொரு கலரை எடுத்துக் கொடுக்கிறார். சரியான கலரைக் கொடுத்தால், அவர் கொடுக்கும் பென்சில் கூர் இல்லாமல் மொட்டையாக இருக்கிறது. தூரத்தில் இருந்து பென்சிலைத் தூக்கிப் போடுகிறார். ‘என்ன, மரம் சிவப்பு கலர்ல இருக்கு’ என்று கிண்டல் செய்கிறார்.

சூழ்நிலை - 3:

 உங்கள் நண்பர் எந்த விதமான உணர்வுகளையும் காட்டவில்லை. கேட்ட பென்சிலைக் கொடுக்கிறார். நீங்கள் கலர் அடிப்பதைப் பார்க்காமல் வேறு எதிலோ கவனமாக இருக்கிறார். கலர் அடித்தது நன்றாக இருந்தால் பாராட்டவில்லை. மோசமாக இருந்தால் சுட்டிக்காட்டுவதும் இல்லை.சரியா... இப்போது இந்த மூன்று சூழ்நிலைகளிலும் நீங்கள் கலர் அடித்த ஓவியம் என்ன மாதிரி இருக்கும் என்று நீங்களே சொல்லுங்களேன்... முதல் சூழ்நிலையில் நீங்கள் பிரமாதப்படுத்தி இருப்பீர்கள்.சூழ்நிலை இரண்டில் கலர் அடித்து முடிப்பதே மிகவும் கஷ்டமாக இருந்திருக்கும். உங்கள் நண்பரின் ஒத்துழையாமை இயக்கத்தையும் மீறி நீங்கள் கலர் அடித்தது ரொம்பவே சுமாராக இருக்கும். சூழ்நிலை மூன்றிலும் நிலைமை ஒன்றும் சுகம் இல்லை. திட்டும் கிடைக்காமல் பாராட்டும் இல்லாமல் கலர் அடிப்பது என்கிற சந்தோஷமான காரியத்தை, ஏதோ கடமைக்குச் செய்ததைப் போலச் செய்து முடித்திருப்பீர்கள். இப்போது ‘உந்துசக்தி’ பற்றிய ஒரு சித்திரம் உங்களுக்குக் கிடைக்கிறது அல்லவா?இன்னொரு விஷயத்தையும் இந்த இடத்தில் பார்க்க வேண்டி இருக்கிறது. அமிதாப் பச்சன், சிவாஜி கணேசன் என்கிற இரண்டு சினிமா நடிகர்கள் ஆரம்பத்தில் சின்ன வேடத்துக்குக்கூட லாயக்கு இல்லை என்று பல இயக்குநர்களாலும்  தயாரிப்பாளர்களாலும் ஒதுக்கப்பட்டவர்கள். கேரம் விளையாட்டு சாம்பியன் இளவழகிக்கு அரசு வழங்குவதாகச் சொன்ன பரிசுப் பணம் வருடக்கணக்காகத் தரப்படாமல் இழுத்தடிக்கப்படும் செய்தியையும் பத்திரிகைகளில் படித்து இருப்பீர்கள். ஆனாலும் மேலே குறிப்பிடப்பட்டவர்கள் தங்கள் துறைகளில் செய்த, செய்துவரும் சாதனைகளை நம்மால் வியந்து பாராட்டாமல் இருக்க முடியாது. இவர்களுக்கு உதவியது, இவர்களுக்கு உள்ளேயே சேமித்து வைக்கப்பட்ட உந்துசக்தி.  இந்த சுய உந்துசக்தியைக்கொண்டு நாம் ஏன் வெற்றிகளை சாத்தியப்படுத்திக்கொள்ளக் கூடாது?நம் அனுபவங்களில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு நாம் தேர்ந்தெடுத்துக்கொண்ட சரியான பாதையில் இருந்து விலகாமல் இருப்பது நமது பொறுப்பு. நாம் ஒருவேளை உடனடியாக வெற்றி பெறாமல் போகலாம். ஆனாலும், நமது சுய உந்துசக்தியையும் உற்சாகத்தையும் உத்வேகத்தையும் கைவிட்டுவிடக் கூடாது. எப்போதும் உற்சாகத்தோடும் மகிழ்ச்சியோடும் இருப்போம்.ஒரு தோல்வியில் இருந்து இன்னொரு தோல்விக்குச் சென்றாலும் உற்சாகத்தை இழந்துவிடாமல் இருப்பது வெற்றிக்கு வழிவகுக்கும். விழுவது அல்ல தோல்வி; விழுந்தாலும் எழாமல் இருப்பதுதான் தோல்வி என்கிற பழமொழி உங்களுக்குத் தெரியும்தானே..?

வெற்றிக்கு உந்துசக்தியே முக்கியமானது.
வெளியில் இருந்து உந்துசக்தி கிடைக்காவிட்டாலும், உள்ளே இருக்கும் உந்துசக்தியைக் கண்டடைந்து பயன்படுத்துவோம்.
பிறருக்கு உந்துசக்தியாக இருப்பதையும் தொடர்வோம்.
புரிந்துகொள்வோம் உந்துசக்தியை.

நாம் ஏன் ஒரு செயலைச் செய்ய வேண்டும் என்பதற்கான காரணத்தை உணர்த்துவதும் உந்துசக்தியே.

நாம் நடந்துகொள்ளும் விதத்துக்கு நோக்கத்தைக் கொடுத்து, திசையைக் காட்டுவதுமே உந்துசக்தி.குறிப்பிட்ட விதத்தில் நடந்துகொள்வது அல்லது ஒரு குறிப்பிட்ட வேலையை எடுத்துக்கொள்வதற்கு எது உங்களைச் செலுத்துகிறதோ, தூண்டுகிறதோ அதுவே உந்துசக்தி.நமக்கு ஒரு விஷயம் வேண்டும் என்று உறுதியாக ஆசைப்பட்டால், அதை அடைவதற்கான வழி நமக்குத் தெரியாவிட்டாலும் நாம் முயற்சிப்பதை நிறுத்திவிடக் கூடாது. உண்மையிலேயே நாம் ஒன்றைச் சாதிக்க வேண்டும் என்று விரும்பினால், உலகமே அதற்கான சூழ்நிலைகளையும் வாய்ப்புகளையும் தேவையான நபர்களையும் உதவிகளையும் நமக்குக் கொடுக்கும் என்று பரவலாகச் சொல்லப்படுவது உண்டு.அசாத்தியம் என்று தோன்றுவதைக்கூட சாதிக்க தேவை, தொலைநோக்குப் பார்வை, கனவு, ஆழ்ந்த விருப்பம் போன்றவை உதவும். தடைகளைத் தாண்டி முன்னேறவும் தோல்வி, ஊக்கமின்மை போன்றவற்றில் இருந்து மேலேறி வரவும் நாம் பழக வேண்டும். சாதனை என்றால் அதற்கு முன்பாக, தடைகளும் தோல்விகளும் இருக்கத்தான் செய்யும். அவற்றில் இருந்து மேலேறி வரப் படைப்பூக்கம் மிக்க சிந்தனை அவசியம். மாணவர்களைப் பொறுத்தவரை உந்துசக்தி கீழ்க்கண்ட மூன்று விஷயங்களைச் சார்ந்து இருக்கிறது.1.சிறப்பாக இருந்தாலும் சரி, சுமாராக இருந்தாலும் சரி.. பழைய வேலைகளை முழுமையாகப் புரிந்துகொள்ளுதல். 2.மற்றவர்களுக்கு முன்னால் வெற்றிகரமாகத் தோற்றம் அளிப்பது என்பதைவிட, எடுத்துக்கொண்ட குறிக்கோளில் கவனமாக இருப்பது.3.பிறரிடம் இருந்து கற்றுக்கொள்ளும் சுய தீர்மானம்.

உங்களைத் தெரியுமா உங்களுக்கு 01

நமக்கு அது தெரியும், இது தெரியும் என்பது ஒரு பக்கம் இருக்க, முதலில் நாம் தெரிந்துகொள்ள வேண்டியது நம்மை. யாருக்காவது தன்னையே தெரியாமல் போகுமா என்று கேள்வி எழலாம். ஆனால், நம்மைப் பற்றி நாம் நன்றாகத் தெரிந்துகொள்வது வாழ்க்கைத் திறன்களில் முக்கியமான ஒன்று. உதாரணத்துக்கு, உங்களுக்கு எப்போது எல்லாம் தூக்கம் வரும்? இந்தக் கேள்விக்கு சரியான விடை தெரிந்தால், நாம் தூக்கத்தைக்கூட நமக்கு பலன் தரும் விதத்தில் பயன்படுத்த முடியும். இதுபோல சின்னச் சின்ன விஷயங்களின் மூலமாகப் பெரிய பெரிய விஷயங்களை விளக்குவதுதான் இந்தக் குட்டித் தொடர் கட்டுரைகளின் வேலை.


‘‘அவனும் மூணு மணி நேரம்தான் படிக்கிறான். நானும் மூணு மணி நேரம்தான் படிக்கிறேன். ஆனா, எப்பவுமே அவன்தான் க்ளாஸ் ஃபர்ஸ்ட். அது எப்படி?”
“தினமும் பிராக்டீஸ் பண்றேன். அப்படியும் அவ 11 நிமிஷத்துல முடிக்கிற தூரம் எனக்கு 14 நிமிஷம் எடுக்குது.”

இப்படி நாம் அடிக்கடி கேட்கிற வசனங்கள் நிறைய. இதில் இருந்து என்ன தெரிகிறது? படிக்கிற நேரம், தொடர்ந்து பிராக்டீஸ் இவை இருந்தும் வெற்றிக்கு வேறு ஏதோ ஒன்று தேவைப்படுகிறது. அது என்ன?

ஓர் இடத்தில் தெளிவாகக் குவிக்கப்பட்ட கவனம்!

கவனம் இல்லாமல் அல்லது கவனச் சிதறலோடு நீங்கள் 10 மணி நேரம் படித்தாலும் அது மனதில் தங்கும் என்று நினைக்கிறீர்களா?

முழு ஆர்வம், ஒருமுகப்படுத்தல் ஆகியவைதானே கவனக்கூர்மைக்கு அடிப்படை? இதைத் தொடர்ந்து கடைப்பிடித்தால்தான் ஒரு பழக்கமாக நமக்குள் வளரும்.

இந்த கவனக் கூர்மை என்பது நம்மை எப்படி எல்லாம் பாதிக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள ஒரு சின்ன விளையாட்டு.

நண்பர்கள் ஆறேழு பேர் வட்டமாக உட்கார்ந்துகொள்ளுங்கள். ஆளாளுக்கு வரிசையாக ஒரு நபரின் பெயரைச் சொல்வதுதான் விளையாட்டு. வாய்க்கு வந்த பெயரைச் சொல்லக் கூடாது. முதல் ஆள் ஒரு பெயரைச் சொன்னதும் அது ஆங்கிலத்தில் என்ன எழுத்தில் முடிகிறதோ, அந்த எழுத்தில் ஆரம்பிக்கும் ஒரு பெயரை அடுத்த ஆள் சொல்ல வேண்டும். இப்படியாக அடுத்த அடுத்த ஆட்கள் தொடரட்டும்.

விளையாட்டில் சுவாரசியத்தைக் கூட்டுவதற்காக இடையில் நிறுத்தி Cat, Tiger, Rhino என்று விலங்குகளின் பெயரைச் சொல்ல ஆரம்பிக்கலாம். இப்படியே நகரங்கள், நதிகள் என்று தொடரலாம். இப்படிச் சில சுற்றுகள் விளையாடி முடித்ததும் யோசிப்பதற்காக ஓர் இடைவேளை விடுங்கள்.
உங்கள் கவனத்தைச் சிதறடிக்கும்படி என்னென்ன விஷயங்கள் நடந்தன? எவை உங்களைத் திசை திருப்பின? எந்தெந்த விஷயங்கள் உங்கள் கவனத்தைக் கூர்மைப்படுத்த உதவின? இதன் அடிப்படையில் படிப்பில் கவனக்கூர்மையை  செழுமைப்படுத்திக்கொள்ளலாம்.

இந்த விளையாட்டில் பங்கேற்ற ஒவ்வொருவரிடமும் பேசினால், ஒவ்வொரு விஷயம் வெளிப்படுவதை உணரலாம். விளையாட்டு பிடித்து இருந்தது, வெளியில் இருந்து வந்த சத்தத்தால் கவனம் சிதறியது, பெயரைச் சொல்லி முடித்தவர்கள், அடுத்தவருக்கு க்ளூ கொடுக்கிறேன் என்று கவனத்தைக் குறையச் செய்தார்கள்... இப்படிப் பல விஷயங்களை அறியலாம்.

டி.வி., சினிமா பார்ப்பது, கதை படிப்பது, விளையாடுவது போன்றவை பலருக்கும் ஜாலியாக இருக்கும். இதுபோன்ற விஷயங்களில் அவர்களுக்கு இருக்கும் ஆர்வமே காரணம். ஆர்வம் கவனக்கூர்மைக்கு உதவக்கூடியது. கவனக்கூர்மை என்பது ஞாபக சக்தியை வளர்த்துக்கொள்ள உதவும்.

சத்தம், ஆர்வமின்மை போன்றவை கவனக்கூர்மையைக் குறைக்கும்.
சிறப்பான கவனக்கூர்மை நேரத்தை மிச்சப்படுத்துகிறது. கவனக்கூர்மையை அதிகப்படுத்திக்கொள்ள சில எளிய வழிமுறைகள் இருக்கின்றன.

இதில் வித்தியாசமான ஒரு விஷயம், ஒரு வேலையைச் செய்துகொண்டு இருக்கும்போது நீங்கள் கவனக்கூர்மையைப் பற்றியே யோசித்துக்கொண்டு இருந்தால் உங்கள் கவனம் சிதறவே வாய்ப்பு அதிகம். அதனால்தான், கவனச் சிதறலை ஏற்படுத்துகிற விஷயங்களைக் குறைப்பதன் மூலம் கவனக்கூர்மையை அதிகப்படுத்திக்கொள்ளலாம்.

எவை எல்லாம் உங்கள் கவனத்தைச் சிதறடிக்கிறது என்று புரிந்துகொள்வதன் மூலமே அவற்றைத் தவிர்த்து, கவனக்கூர்மையை அதிகப்படுத்திக்கொள்ளலாம்.

வேறு வேறு நேரங்களில் தூங்குவது, இஷ்டப்பட்டபோது உடற்பயிற்சி செய்வது, நேரங்கெட்ட நேரத்தில் சாப்பிடுவது போன்றவை கவனக்கூர்மைக்கு இடையூறு செய்யக்கூடியவை.

கவனக்கூர்மையை வளப்படுத்திக்கொள்ள...

 படிக்கும்போது கவனம் சிதறாமல் இருக்க, போதுமான வெளிச்சம், காற்றோட்டம், இரைச்சல் குறைவாக இருக்கும் இடத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும். 

காலையிலும் இரவிலும் படியுங்கள். ஒவ்வொரு நாளும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் படிப்பதை வழக்கமாக்கிக்கொள்ளுங்கள். 

ஒரே இடத்தில் நீண்ட நேரம் உட்கார்ந்து படிக்காதீர்கள். படித்த விஷயத்தை மனதில் நிறுத்தும் திறனை அது குறைக்கும்.

வாசிக்கத் தொடங்குவதற்கு முன்னால், எடுத்துக்கொண்ட பாடப் பகுதியைப் படித்து முடிக்க வேண்டிய நேரத்தை ஒரு தாளில் குறித்து வைத்துக்கொள்ளுங்கள்.  ‘இன்றைக்குத் தமிழ்ப் பாடம் படிக்கப் போகிறேன்’ என்று மொட்டையாகத் தீர்மானித்துக்கொள்ளாதீர்கள். ‘இன்றைக்கு சமூக அறிவியலில் இரண்டு பாடங்கள், வேதியியலில் 10 கேள்விகளுக்கு விடை என்று குறிப்பாகத் தீர்மானித்துக்கொள்ளுங்கள். தெளிவான இலக்கு வேலையை முடிக்க உதவிகரமாக இருக்கும்.

ஒவ்வொரு சமயமும் ஏதாவது ஒரு விஷயத்தில் கவனத்தைக் குவியுங்கள். டி.வி. பார்த்துக்கொண்டே படிப்பது உதவாது.

உங்கள் சிந்தனைகள் வேறு எதிலாவது அலைபாய்ந்துகொண்டிருந்தால் படிப்பதைத் தள்ளிப்போடவும்.

மனம் எதனாலாவது வருத்தமாக இருந்தாலும் படிப்பதைத் தவிர்க்கவும்.     தியானம், யோகா, எளிய சுவாசப் பயிற்சிகள் போன்றவை கவனக் குவிப்புக்கு உதவும்.  அடுத்தடுத்து ஒரே விதமான பாடங்களைப் படிப்பதைத் தவிர்க்கவும். அது எந்தப் பாடத்தில் என்ன விஷயம் வந்தது என்கிற குழப்பத்தை ஏற்படுத்தக்கூடும்.  

தூக்கம் வரும்போதோ... களைப்பாக இருந்தாலோ... போர் அடித்தாலோ படிப்பதை நிறுத்திவிடுங்கள். நிறைய காபி, டீ குடிப்பது சுறுசுறுப்பைத் தருவதுபோன்ற தோற்றம் தந்தாலும் சிந்திக்கும் திறனைக் குறைக்கும் என்பதே உண்மை.  இரும்புச் சத்தும் விட்டமின்களும்கொண்ட உணவுகளை உண்ணுங்கள்.  பகல் கனவு காண்பதைக் குறையுங்கள். எல்லோரும்தான் பகல் கனவு காகிறார்கள். ஆனால், அதிலேயே பொழுதை ஓட்டிவிட முடியுமா? 

அப்படி சிந்தனைக் குதிரை கற்பனை உலகில் தறிகெட்டுப் பறந்துகொண்டு இருந்தால் எழுந்து ஒரு சிறிய நடை நடக்கலாம்.  கடைசியாக, பள்ளி சம்பந்தமான வேலைகளை ரசித்து அனுபவியுங்கள். படிப்பதில் உள்ள சுவாரசியத்துக்காகப் படியுங்கள். அது உங்களுக்கு எல்லாவற்றையும் கொண்டுவந்து சேர்க்கும்.

Friday, March 25, 2016

சின்னாத்து மண்ணே என் பொன்னே

சின்னாத்து மண்ணே எம் பொன்னே
செருவாட்டுக் காசா என் ரோசா
செலவாகிப் போகாதே செல்லம்மா செல்லம்மா
செலவாகிப் போகாதே செல்லம்மா
1. மண்சரிஞ்சு பங்கப்பட்ட
பந்தக்காலு பள்ளத்திலும்
மஞ்சணத்திப் புல்துளிர்க்கும் மந்திரமாய்… (பத்திரமா
நேந்துவச்ச உண்டிக்காச
சாமியே திருடுமா
காவல்நிக்கும் எல்லச்சாமி
காலனா மருவுமா சொல்லம்மா… நீ சொல்லம்மா
செல்லம்மா ஏஞ் செல்லம்மா (ஏலேலம்மா/சின்னாத்து மண்ணே
2. பச்சைப்பல்லில் புன்சிரிக்கும்
பட்டுப்போலப் புல்வெளியும்
பச்சைப்பாம்பை வச்சிருக்கும் கண்மறைவா
கோடிஉசிர் செஞ்ச பாவி (சாமி)
கோடிக்கும் உறவுதான்
ஒண்ணிருக்கும் ஒண்ணுபோகும்
நேர்ப்படும் கணக்குதான்
துன்பமே இன்பம்தான்
செல்லம்மா ஏஞ்செல்லம்மா (ஏலேலம்மா
3. நேத்திருந்தோம் வீட்டுக்குள்ளே
காத்தடிச்ச வேகத்திலே
சாஞ்சிருச்சு கூரையெல்லாம் சங்கடமா
நீலவண்ணப் புள்ளிவானம்
 கூரையா ஜொலிக்குமே
மேகவெள்ளைப் பஞ்சுக் கூட்டம்
தோரணம் அசைக்குமே
இல்லைகள் இல்லையே
செல்லம்மா ஏஞ்செல்லம்மா
4. பொன்வண்டுக்கு வத்திப்பெட்டி
உள்ளுக்குள்ள மெத்தைகட்டி
வச்சிருந்தேன் பொத்திப்பொத்தி பத்திரமா
காலொசத்தி முட்டைபோடும்
காட்சிதான் கிடைக்குமா
நூலறுத்து தப்பியோடும்
சூழ்ச்சிதான் நடக்குமா
செல்லம்மா ஏஞ்செல்லம்மா
5. நள்ளிரவு விண்வெளியில்
நட்சத்திரப் பந்தலைப் போல்
பிள்ளையுந்தன் மென்சிரிப்பு (மென்னகைதான்)
கொல்லுவதோ (கொல்லுதடி)
காலையொளி பட்டதாலே
மீனெல்லாம் உதிர்ந்ததோ
வேளைவரும் அந்த ராவில்
 தோன்றவே மறைந்ததோ
 செல்லம்மா… செல்லம்மா

கபி கபி மேரே தில் மே


எப்போதும்என் மனதுள்ளே
ஓர்எண்ணமே தோன்றும்
 நீஇந்த உலகில்
வந்தாயோ என்னோடு சேர என
நீமுந்தைய பிறப்பில்
விண்மீனாய்மின் னியவளோ என்று
 உனைக் கொணர்ந்தார் மண்மேலே
என்னோடு வாழ்கவென
 எப்போதும்என் மனதுள்ளே
ஓர்எண்ணமே தோன்றும்
 உன் ஜோடி கை, உன் தோள்கள்
என்றும் என் ஆஸ்தி என
 உன் நீண்ட கூந்தல் நிழல் போக்கும்
எந்தன் வெய்யில் உன் ஈர இதழ், கரங்கள்
என் ஆஸ்தி என
 எப்போதும்என் மனதுள்ளே
ஓர்எண்ணமே தோன்றும்
 நான் போகும் சாலையில்
ஷெனாயின் பாடல் வந்தாற்போல்
 நம் சாந்தி ராத்திரி
பூந்துகில் தொடாமலா போவேன்
 உள்ளங்கைக்குள்ளே தான்
சுருங்காய் உன் வெட்கத்தாலே நீ
 எப்போதும்என் மனதுள்ளே
ஓர்எண்ணமே தோன்றும்
 உன் ஆயுளெல்லாம் இதைப் போலே
உன் அன்பு தாராய் நீ
 உன் நாட்கள் யாவும் இதே காதலின்
பார்வை வீசாய் முன் உன்னை அறியேன்
உனக்கும் அதேதானே
 எப்போதும்என் மனதுள்ளே
ஓர்எண்ணமே தோன்றும்

எரிமலையின் சிகரத்தில்
பனி பெய்வதை
கடற்கரை ஓரம் நடக்கையில் பார்த்தேன்

எங்கள் வீட்டுப்பக்கம் புல்தரை இருக்கும்
அங்கே பவழமல்லி பொறுக்கப் போய்
சந்தோஷமாகிவிட்டேன், பல நாட்கள் அங்கே இருந்ததைப் போல

நேற்று மாலை அவளை
மறுபடி சந்திப்பேனா
நாளை பெய்த மழை நேற்றும் பெய்யுமா

வணிக வளாகத்தின் நீரூற்று நிற்கிறது
அசைவது நினைவு

நனைந்த உடைபோல்
நெருக்கமாயிருக்கிறேன் அவளோடு

நினைவில் நிலவின் கிரணத் துளி
பறவைகளின் வாயைக் கட்டிப்போட்டிருக்கிறது
சிள்வண்டு இசைக்கிறது

வானுக்கு வெளியே வழியும் நிலவுக் கதிர்
கடலை உப்பளமாக்கிவிட்டது

பண்டிகைக்கு ஏற்றப்பட்டிருக்கிறது சரவிளக்கு
தொலைபேசியின் பாட்டொலி குறுகுகிறது
என் ஆறுதல் ஏறிய வாகனம்
தென்கிழக்கில் நகர்ந்துபோகிறது

வருத்தத்தின் பல பாதைகளில் நிலா ஒளிர்கிறது
வெக்கையில் இருப்பது நான் மட்டுமல்ல

என் தனித்த தூக்கத்துக்குள்
மயில் நீட்டுகிறது
தன் களைத்த,
கண்கள் வைத்த தோகையை

மொட்டை மலையில்
காற்றின் இரைச்சலில்
இங்கே இல்லாதவள்
 இங்கே இருக்கிறாள்

பாட்டு வைத்தியர்


தேசியத்து முற்போக்கு
தேரடியில் நிக்குது
ஜோசியத்தை நம்பிக்கிட்டு
ஜோக்கராக மாறுது
சுட்டுவிரல் முடிவெடுக்கும்
சட்டசபைத் தேர்தலில்
கட்டைவிரல் ஜோசியமா
காப்பாத்தப் போகுது?

நீங்கள் கனவு கண்டிருக்கிறீர்களா?


“பல முறை வித்தியாசமான கனவெல்லாம் கண்டிருக்கிறோம்” என்றும் சொல்கிறீர்கள், அல்லவா? ஓர் இரவுத் தூக்கத்தில் சிலர் ஆறு முறைகூட கனவு காண்பதுண்டு. அந்த ஆறில் ஒண்ணோ ரெண்டோ அவர் யோசித்தே இராத சம்பவங்களைக் கொண்டதாகவும் இருக்கலாம். கனவு எங்கே இருந்து உருவாகிறது? நம்முடைய நினைவுகள், உணர்ச்சிகள், யோசனைகள் போன்றவை, நம் மூளையின் குறிப்பிட்ட ஒரு பகுதியில் பதிந்திருக்கும். அந்தப் பகுதியில் இருந்துதான் கனவு உருவாகிறது. இரவு நேரத்தில், உங்கள் மனதில் பதிந்திருக்கும் விஷயங்களையும், நீங்கள் தூங்கப் போகும் முன்பு என்ன யோசித்தீர்களோ அதையும் உங்கள் மூளை போட்டுக் கலக்குகிறது. குலுக்குகிறது. அதுவே கனவு. கனவில் வந்தது நிஜத்தில் நடக்கும் என்று சொல்ல முடியாது. ஆனால், அந்த சமயத்தில் நம் வாழ்வில் என்ன நடந்துகொண்டு இருக்கிறதோ அதைப் பற்றிய குறிப்புகள் இருக்கக்கூடும். ‘நமது உள்மன உணர்வுகளைத் தெரிந்துகொள்ள கனவுகள் நமக்கு உதவுகின்றன’ என்று கனவுகளை ஆராய்ச்சி செய்பவர்கள் கூறுகிறார்கள். “கனவுகளின் மூலம் நம்முடைய பிரச்னைகள் சிலவற்றை நாம் தெளிவுபடுத்திக்கொள்ளக்கூட முடியும்” என்றும் சேர்த்துக்கொள்கிறார்கள். பல கனவுகள், அர்த்தமுள்ள - பொதுவான மையக் கருத்துகளை உள்ளடக்கியிருக்கின்றன என்று விஞ்ஞானிகள் சொல்கிறார்கள். இங்கே அவற்றில் சில விதக் கனவுகளைப் பற்றிப் பார்க்கலாம். அவை உங்களைப் பற்றியும் உங்கள் வாழ்வில் என்ன நடந்துகொண்டிருக்கிறது என்பதைப் பற்றியும் சொல்லக்கூடும். கனவின் கருத்து: யாரோ துரத்துவது போல அதன் பொருள்: ஏதோ ஒரு பயங்கரமான உயிர் உங்களைத் துரத்துவது போலக் கனவு வரும். இதற்கு, நிஜ வாழ்வில் உங்களுக்கு வந்திருக்கும் பிரச்னை ஒன்றை நீங்கள் சந்திக்காமல் ‘அப்புறம் பார்த்துக்கொள்ளலாம்’ என்று தவிர்ப்பதைக் குறிக்கும். க.க. : பறப்பது போல… பொருள்: நிஜ வாழ்க்கையில் நீங்கள் ஏதோ சிறப்புப் பெறப் போகிறீர்கள். உங்கள் நண்பர்கள் உங்களை லீடர் போலப் பார்க்கலாம். பெற்றோர் உங்களுக்கு அதிக சுதந்திரம் கொடுக்கலாம். க.க. : காணாமல் போய்விடுவது போல… பொருள்: ஏதோ ஒன்றைப் பற்றி முடிவு எடுக்க வேண்டிய கட்டத்தில் இருக்கிறீர்களா? தவறான முடிவை எடுத்துவிடுவோம் என்று இப்போது பயப்படுகிறீர்கள். இந்தக் குழப்பத்தைத் தவிர்க்க, உங்கள் முன் இருக்கும் சாத்தியக் கூறுகளை ஒன்றுக்கு இரண்டு முறை அலசி ஆராயுங்கள். க.க. : கீழே விழுவது போல… பொருள்: நீங்கள் நிறைய வேலைகளை இழுத்துப் போட்டுக்கொண்டிருக்கிறீர்கள். கொஞ்சம் நிதானம் ஆகி, உங்களை எது அழுத்தத்துக்கு ஆளாக்குகிறது என்று யோசிக்க வேண்டிய நேரம் இது. கனவில் கீழே விழும்போது மெதுவாக அடிபடாமல் விழுந்தீர்களா? உங்கள் கடினமான கால கட்டத்தை சீக்கிரமே தாண்டிவிடுவீர்கள் என்று புரிந்துகொள்ளுங்கள். க.க. : அசைய முடியாதது போல… பொருள்: ஏதோ பிரச்னையில் மாட்டிக்கொண்டிருக்கிறீர்கள். இந்தப் பிரச்னை எப்படி வந்தது, வருங்காலத்தில் இது போன்ற சந்தர்ப்பத்தில் புத்திசாலித்தனமாக முடிவெடுப்பது எப்படி என்று யோசியுங்கள். க.க. : எதையோ காணாமல் போட்டுவிடுவது போல… பொருள்: உங்கள் தன்னம்பிக்கை கொஞ்சம் தளர்ந்திருக்கிறது. ஏதேனும் புது விளையாட்டிலோ, புதிய பொழுதுபோகிலோ நீங்கள் ஈடுபட விரும்பலாம். ஆனால், அதில் வெற்றிகரமாகச் செயல்பட முடியாதோ என்று உங்களுக்குத் தோன்றலாம். தன்னம்பிக்கைக் குறைவு! அந்த நம்பிக்கை உங்களுக்கு உள்ளேயேதான் இருக்கிறது. தேடிப் பாருங்கள், கண்டுபிடித்துவிடுவீர்கள்! க.க. : ஏதோ ஒரு விஷயத்துக்கு (பரீட்சைக்கோ பயணத்துக்கோ…) உங்களைத் தயார்ப்படுத்திக்கொள்ளாதது போல, அல்லது தாமதமாகிவிடுவது போல… பொருள்: சீக்கிரம் உங்களுக்கு வரவிருக்கும் ஒரு வேலை, அல்லது நீங்கள் பங்குகொள்ள வேண்டிய ஒரு நிகழ்ச்சி பற்றி நீங்கள் கவலையோடு இருக்கிறீர்கள். அதற்கு நீங்கள் ஏற்கெனவே நல்ல முறையில் தயார் செய்திருந்தால், உங்களுக்கு இப்போது பதற்றமாக இருக்கிறது என்று அர்த்தம். இது சாதாரணமானதுதான். நல்ல முறையில் தயார் செய்யவில்லை என்றால் இந்தக் கனவை ஓர் எச்சரிக்கையாக எடுத்துக்கொள்ளுங்கள். தயார் செய்யுங்கள். One liners ஒரு கனவு 10 நிமிடம் முதல் 40 நிமிடம் வரை நீடிக்கும். நீங்கள் விழித்திருக்கும்போது இருப்பதை விட, கனவு காணும்போது மூளை அதிக சுறுசுறுப்போடு வேலை செய்கிறது. உங்கள் வாழ்க்கையில் நீங்கள் கனவு காணும் நேரம் மொத்தத்தையும் கணக்கிட்டால், சுமார் ஆறு வருட காலம் வரும்.

ஆப்பிள்னா என்ன?


‘ஆப்பிள்’ என்றால் ஆப்பிள் இல்லை! ‘ஆப்பிள்’ என்றதும் உங்களுக்கு மொபைல் போனோ, மேக் (Mac) கணினியோ ஞாபகம் வந்திருக்குமே… இந்த ஆப்பிளை அறிமுகப்படுத்தி, உலகில் முக்கியமான மாற்றங்களை ஏற்படுத்திய ஸ்டீவ் ஜாப்ஸ்-க்கு முன்பிருந்தே, வேறு இரு ஆப்பிள்கள் பிரபலமாக இருக்கின்றன. உலகம் தோன்றுவதற்கே ஏவால் தின்ற ஆப்பிள்தான் காரணம் என்று ஒரு கதை உண்டு. அது முதல் ஆப்பிள். அறிவியல் உலகில் மறுமலர்ச்சி ஏற்படுத்தியது, ஐஸக் நியூட்டனின் ஆப்பிள்! மரத்தில் இருந்து ஆப்பிள் கீழே விழுவதைப் பார்த்து, ‘புவி ஈர்ப்பு விசை’ என்பதை உலகத்துக்கு நிரூபித்தார் அந்த விஞ்ஞானி. இதை எல்லாம் யோசிக்கும்போது ஆப்பிள் என்கிற பழத்தின் சுவாரசியம் நமக்குத் தெரிகிறது. அது ஒரு பக்கம் இருக்க, ஆங்கிலத்தில் ‘Apple’ என்பது பழத்தைக் குறிப்பதோடு, வேறு எதை எதையோ குறிப்பிடும். கவனித்திருக்கிறீர்களா? Idiom என்று சொல்லப்படும் மரபுத் தொடர்களில் ஆப்பிள் என்கிற சொல் பல வேறு அர்த்தங்களைத் தருகிறது. ஒரு கூட்டத்தில் எல்லோரும் நல்லவர்களாக இருக்க, ஒருவர் மட்டும் மோசமானவராக இருந்தால், அவரை ‘rotten apple’ என்பது வழக்கம். அதே பலரில், ஒருவரை மட்டும் எனக்கு மிகவும் பிடிக்கும் என்றால் அவரை ‘you are the apple of my eyeசs’ என்று சொல்வேன். அப்படியே எதிர்ப்பதம் ஆகிறது, பாருங்கள்! ‘பட்டிக்காட்டு ஆள்’ என்பதைக் கூட, ‘apple knocker’ என்று ஆங்கிலேயர்கள் கிண்டல் கலந்து கூப்பிடுவார்கள். தொடர்பே இல்லாத இரண்டு விஷயங்களைக் குறிப்பிட, ஆப்பிளைத் தொடர்பு படுத்தி ஒரு சொற்றொடர் உண்டு. Apples and oranges என்பதுதான் அது. அதாவது, டேவிட்டையும் பீட்டரையும் ஒப்பிடவே முடியாது, ஏனென்றால் அவர்கள் ஆப்பிளும் ஆரஞ்சும் போல (like apples and oranges) என்று குறிப்பிடுவார்கள்.. இரண்டு ஆப்பிள்கள் தொடர்பு இல்லாமல் உருண்டு கிடப்பது கூட ஓ.கே. ஆனால், சதுர ஆப்பிள் என்பதுதான் இடிக்கிறது. விதிமுறைகளுக்கு முழுமையாகக் கட்டுப்பட்டு நடப்பவரை square apple என்கிறார்கள். அதேபோல பொருட்களை எல்லாம் அதிகபட்சமாக ஒழுங்காக, சுத்தமாக வைத்திருப்பதற்கு ‘apple – pie - order’ என்று பெயர். ஒழுங்காகவும் இல்லாமல், வேலைகளை நியதிப்படி செய்யாமல் இருப்பவர், வேலை சொன்னவருக்கு ஜால்ரா அடிக்க வேண்டியிருக்கும்! இப்படி, தேவையில்லாமல் புகழ்ந்து பேசுவதை, ‘polish the apple’ என்கிறார்கள். (தமிழில் இதை சோப்புப் போடுவது என்று சொல்லும் வழக்கம் உண்டு.) ஒரு செய்கைக்கு இப்படி ஒரு பெயர் என்றால், ஒரு நகருக்கே ஆப்பிள் என்று பெயர் உண்டு. ஆம், நியூயார்க் நகரத்தை ‘Big apple’ என்பார்கள். அதே நேரம், “அங்கே ‘Road apple’ கிடக்கு” என்று யாராவது சொன்னால், குனிந்து பழத்தைத் தேட வேண்டாம். ரோடு ஆப்பிள் என்றால், குதிரைச் சாணி!

Saturday, March 19, 2016

அகநாழிகை மாமா

அகநாழிகை மாமா

 அழகு மிகுந்த மாமா
அகநாழிகை மாமா
அறிவு நிறைந்த மாமா
அவரைப் பாடுவோமா..?

வக்கீல் கோட்டு மாட்டி
வாது மன்றம் செல்லுவார்
வார்த்தைகளை நீட்டி
வழக்குகளில் வெல்லுவார்

எத்தனையோ பாட்டிலே
ஏழு ஸ்வரம் காட்டுவார்
ஏரி காத்த ராமரை
இடத்தை விட்டு ஓட்டுவார்

ஏசுநாதர் என்றைக்கோ
எருசலேமைச் சுற்றினார்
வாசுதேவன் அப்பப்போ
வாய்த்த மலையில் சுற்றுவார்

பாங்காய்க் கவிதை எழுதுவார்
பதிப்பகமும் நடத்துவார்
போங்காய்ப் பேசும் மனிதரை
போட்டுப் பார்த்து மகிழுவார்

பாங்காக் சென்ற மாமா
என்ன செய்தார் தெரியுமா?
அதனை நானும் கூறினால்
அடிக்க ஓடி வருகுவீர்..! -

கொழந்தைக் கவிஞர் ரமேஷ் வைத்யா