Thursday, January 22, 2009

ஈழம் எரிகிறது

நாட்பட நாட்பட நாற்றமு சேறும்
பாசியும் புதைந்து பயன்நீர் இலதாய்
நோய்க் களமாகி அழிகெனும் நோக்கமோ?

விதியே விதியே தமிழச் சாதியை
என்செய நினைத்தாய் எனக்குரை யாயோ?
சார்வினுக் கெல்லாம் தகத்தக மாறித்
தன்மையும் தனது தருமமும் மாயாது
என்றுமோர் நிலையா யிருந்துநின் அருளால்
வாழ்ந்திடும் பொருளோடு வகுத்திடு வாயோ?

கற்பகத் தருவோ? காட்டிடை மரமோ?
விதியே தமிழச் சாதியை எவ்வகை
விதித்தாய் என்பதன் மெய்யெனக் குணர்த்துவாய்.
ஏனெனில்
சிலப்பதி காரச் செய்யுளைக் கருதியும்
திருக்குற ளுறுதியும் தெளிவும் பொருளின்
ஆழமும் விரிவும் அழகும் கருதியும்
எல்லை யொன் றின்மை எனும் பொருள் அதனைக்
கம்பன் குறிகளாற் காட்டிட முயலும்
முயற்சியைக் கருதியும் முன்புநான் தமிழச்
சாதியை அமரத் தன்மை வாய்ந்தது என்று
உறுதிகொண் டிருந்தேன். ஒருபதி னாயிரம்
சனிவாய்ப் பட்டும் தமிழச் சாதிதான்
உள்ளுடை வின்றி உயர்த்திடு நெறிகளைக்
கண்டு எனது உள்ளம் கலங்கிடா திருந்தேன்.

ஆப்பிரிக் கத்துக் காப்பிரி நாட்டிலும்
தென்முனை யடுத்த தீவுகள் பலவினும்
பூமிப் பந்தின் கீழ்ப்புறத் துள்ள
பற்பல தீவினும் பரவி யிவ்வெளிய
தமிழச் சாதி தடியுதை யுண்டும்

காலுதை யுண்டும் கயிற்றடி யுண்டும்
வருந்திடுஞ் செய்தியும் மாய்ந்திடுஞ் செய்தியும்
பெண்டிரை மிலேச்சர் பிரித்திடல் பொறாது
செத்திடுஞ் செய்தியும் பசியாற் சாதலும்
பிணிகளாற் சாதலும் பெருந்தொலை யுள்ளதம்

நாட்டினைப் பிரிந்த நலிவினார் சாதலும்
இஃதெலாம் கேட்டும் எனதுளம் அழிந்திலேன்,
தெய்வம் மறவார், செயுங்கடன் பிழையார்,
ஏதுதான் செயினும் ஏதுதான் வருந்தினும்,
இறுதியில் பெருமையும் இன்பமும் பெறுவார்,

என்பதென் னுலத்து வேரகழ்ந் திருத்தலால்
எனினும்
இப்பெருங் கொள்கை இதயமேற் கொண்டு
கலங்கிடா திருந்த எனைக்கலக் குறுத்தும்
செய்தியொன் றதனைத் தெளிவுறக் கேட்பாய்.

ஈங்கிதில் கலக்க மெய்திடு மாயின்
மற்றதன் பின்னர் மருந்தொன்று இல்லை
இந்நாள் எமது தமிழ்நாட் டிடையே
அறிவுத் தலைமை தமதெனக் கொண்டார்
தம்மிலே இருவகை தலைபடக் கண்டேன்,

முழுதுமே தழுவி மூழ்கிடி நல்லால்,
தமிழச் சாதி தரணிமீ திராது
பொய்த் தழி வெய்தல் முடி பெனப் புகழும்
நன்றடா! நன்று! நாமினி மேற்றிசை
வழியெலாந் தழுவி வாழ்குவம் எனிலோ
ஏ! ஏ! அஃதுமக் கிசையா தென்பர்,

விதியே! விதியே! தமிழச் சாதியை
என்செயக் கருவி யிருக்கின் றாயடா?

Tuesday, January 20, 2009

மாதவி மழை

பதினாறு முழத்துக்குள் வைத்தி ருக்கும்
பருவத்தைப் புதிர்களினை விடுவிக் காமல்
பதினாறு வருடங்க ளாய்ச்ச மைத்த‌
பக்குவத்தை, பதாம்புயத்தை, தந்தால் அந்த
அதிசயத்தோல் அரங்கத்தில் நீயும் நானும்
ஆடிடலாம் சதுரங்கம் ஐம்பு லத்தால்!
நதிநீச்சல் எதிர்நீச்சல் ஒத்துக் கொண்ட‌
நம்நீச்சல் பொதுநீச்சல், நிததீச் சல்தான்!

நாட்டியமா டும்பறவை நீ!பா வாடை
நட்சத்ரம்! அவையோரின் ஆசைப் பார்வை
ஈட்டிகள் எ லாம்மோதும் கேட யம்நீ!
ஈகையினால் விழிசிவக்கும் தோகை! பூவைத்
தோட்டத்தி லும்மஞ்சம் விரித்த காம‌
கோட்டத்தி லும் அவிழ்க்கும் பட்டுக் கோட்டை.
ஓட்டப்பந் தயம்நடக்கும் உன்னை நோக்கி.
ஒட்டப்பந் தயம் நடக்கும் உன்னி டத்தில்!

தத்தித்தா தாதைத்தா என்று ஆடும்
தாமரைத்தே ரே!குறுக்கே சிறிது கூட‌
ஒத்திவைப்புப் பிரச்சினைக்கே இடந்த ராமல்
ஒத்தித்தா முத்துத்தா! இயற்கை தீட்டும்
சித்திரமே வாஅருகில்! மெல்ப டிந்த
சேலயெனும் தூசைச்சற் றேது டைப்பேன்!
ஒத்திகையில் லாமல்வந் தெவரும் தம்மெய்
ஒத்திகைபி டித்திடஒத் துழைக்கும் மாதே!

பலகறைகள் இருந்தாலும் நிலவே உன்னைப்
பாடாத புலவனிந்த உலகில் உண்டோ?
நிலவைப்போல் நீபொதுதான். மழையைப் போல‌
நீஅனைவர் மேல்பொழியும் அருள்தான், அன்றோ?
வலதுகரம் தருவதனை இடத றிந்தால்
வள்ளலுக்கு அழகல்ல என்பர்! ஆனால்,
வலதுகரம், இடதுகரம் இரண்டி னாலும்
வாரிவழங் கும்இன்ப வள்ளல் நீயே!

ஊர்விஷயம் தெரிந்துகொண்டு அறிஞன் ஆகும்
உத்தேசம் எனக்கில்லை. உன்விழாவில்
தேரிழுக்கும் கயிறாக இருந்தால் போதும்!
சிலர்,கிணற்றுத் தவளையென்று என்னைச் சொன்னால்
யார்கவலைப் படுகின்றார் அதனைப் பற்றி?
யவனர்களைச் சுமந்துவரும் கப்ப லே!நீ
கார்கூந்தல் மேகமிடக் கீழே மின்னல்
கனியசைத்த நாட்டியத்தால் மயங்கி விட்டேன்!

வண்ணங்கள் கண்ணின்கள், குழலும் யாழும்
வழங்குவது செவிவழிக்கள், நீகொக் கோக‌
எண்ணங்க ளால்போதை ஏற்ப டுத்தும்
இளங்கள்ளி இதழ்க்கள்ளி. இந்த ரெட்டைக்
கிண்ணங்கள் பருவச்சந் தனக்கிண் ணங்கள்!
கிழக்கதிரான் மேற்குவிழும் வேளை. சொந்தத்
திண்ணையிலே இடங்கொடுத்தால் இரவு என்னைத்
திகட்டாத உலகத்துக் கிட்டுச் செல்லும்.

பக்கம்பக் கமாயுன்னைப் புரட்டிப் பார்த்தும்
பயில்தோறும் சுவைகொடுக்கும் பாவே! வந்து
சிக்கலிலே தித்திக்கும் புறாவே! எந்தத்
திக்குமுனைக் கோடிடினும் விடாதா சைத்தீ!
பக்கலிலே படுக்கையிலே தடுக்கா தொட்டி
பழகப்ப ழகக்கொப்பு ளிக்கும் பாலே!
கைக்குள்ளே நூலிடுப்பு இருக்க, வானில்
காற்றாடி யாகட்டும் பட்டுச் சேலை.

பொதுக்கூட்ட மேடையடி மஞ்சம்! இங்கே
பொன்,அன்னம் நீயிருக்க ஏது பஞ்சம்?
கதிரவன்சா யும்நேரம் தங்க மாலை,
காஞ்சனமா லைஇந்தா அணிந்தென் பால்வா!
நிதியேஎன் பெட்டகத்தில் உறங்க வா!நீ
நிதம்இனிமேல் ஊர்க்காடும் கைதி அல்ல,
உதயச்சூரி யன்காலை எழுந்து வந்து
உதைக்கும்வரை தூங்கிடலாம் கேட்பார் இன்றி!
-நீலமணி

Monday, January 19, 2009

பதிவுலகம் காத்தாடுதே...

கொஞ்ச நாளாகவே பார்க்கிறேன், வலைப்பக்கங்களில் நாலைந்துதான் தேறுகிறது ஒருநாளைக்கு.

அதற்கு முன்பெல்லாம் தமிழ் மணத்தைத் திறந்தால் இரண்டு மூன்று சுவாரசியமான (தலைப்புவைக்கப்பட்ட) பதிவுகப் படித்துவிட்டு வந்தால் முகப்பு மாறி, நான்கு பதிவுகள் புதியது என்கிற முத்திரையோடு இருக்கும்.

சமீபகாலமாகக் காற்றாடுவதன் காரணம் என்ன? உலகப் பொருளாதாரச் சீர்கேடு என்றால் சின்னப் பிள்ளைத்தனமாக இருக்கும். இடைத்தேர்தல் மும்முரம் என்றால்... அதைப் பற்றி சிலபல பதிவுகள் வந்தன. வேறு என்னதான் காரணம்.

அறிஞ்சவுக சொல்லுங்க!

Saturday, January 3, 2009

சபாஷ் பையா!

''இந்த பிரெக் மட்டும் அட்ஜஸ்ட் பண்ணிக் குடுங்க. ஒரு லாரியை நசுக்கத் தெரிஞ்சேன்" என்றபடி தர்மராஜிடம் என் மொபெட்டை ஒப்படைத்தேன். அவர் முகத்தில் சிரிப்புக்கான அறிகுறி இல்லை. வழக்கம்போல் நானும் இப்போதெல்லாம் அவர் முகத்தில் சிரிப்பை எதிர்பார்ப்பதில்லை. பள்ளிக்கூட நட்பும் ஒயின் பார் உறவும் எங்களிடம் ஏற்படுத்தியிருந்த நெருக்கம் சமீபகாலமாகச் சிறிது மாற்றத்துக்குள்ளாகியிருந்தது.

தர்மராஜின் டிரேட் மார்க் ஆன புன்னகை கொஞ்சகாலமாகவே காணாமல் போயிருந்தது. இந்த 'கொஞ்ச காலமாக' என்பதை சரியாக ஆறு மாதமாக என்றும் சொல்லலாம்.

ஆறு மாதத்துக்கு முன்னால்தான் தன் மெக்கானிக் ஷெட்டுக்கு, பிள்ளை சுரேஷைக் கூட்டிக்கொண்டு வந்து ஸ்பேனர் கொடுத்து தொழில் கல்வி ஆரம்பித்தார்.

"எட்டு வயசுப் பையனைப் போயி..." என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதுவும் முதல் ரேங்க் வாங்கும் பையன்... "நல்லாப் படிச்சு என்ன புண்ணியம்? படிச்ச ஆளுங்க படுற பாட்டைத்தான் பார்க்கிறோமே... நல்லா டைட் பண்ணுடா டேய்" என்று கோச்சிங்கில் மும்முரமாகிவிட்டார்.

கொஞ்ச நாள் எனக்கு கஷ்டமாக இருந்தாலும் பிற்பாடு பிரமித்துப் போனேன். மூணே மாதத்தில் அந்த அளவு தொழில் சுத்தம். என் லொடுக்கு மொபெட்டை ஒருநாள் என் மச்சினன் எங்கேயோ கொண்டுபோய் அக்குவேறு ஆணிவேறாகக் கொண்டுவந்து கொடுக்க... வெறும் மூன்று மணி நேரத்தில் வண்டியை மீண்டும் உயிர்த்தெசவைத்தான் அந்தச் சின்னப் பையன்.

மறுநாள் தர்மராஜிடம் பாராட்டாகச் சொன்னதற்கு'ப்சு' என்றார். ''என்ன தொழிலோ போங்க" என்று அலுத்துக்கொண்டார். 'பையன் தொழிலை ஒழுங்காகக் கற்றுக்கொள்ளவில்லை' என்று அவர் நினைப்பது புரிந்தது. உண்மையிலேயே அவன் கைதேர்ந்த தொழில்காரனாக வருவான் என்று எனக்குத் தோன்றியதை அவருக்குப் புரியவைக்கும் முயற்சியில் தோற்றுப்போனேன். நான் போகும்போதெல்லாம் என்னிடம் தன் பையனின் தொழில் அறியாமையைப் பற்றிப் புலம்பித்தீர்ப்பார். அதையெல்லாம் கேட்டுக்கொண்டிருக்க நேரமில்லாத குறை. நானும் ரொம்ப அலட்டிக்கொள்வதில்லை.

இன்றைக்கும், "நீ போயி சாருக்கு டீ வாங்கிட்டு வா. நானே ப்ரேக்கை அட்ஜஸ்ட் பண்ணிடுறேன்" என்று பையனை அனுப்பிவிட்டு "என்ன பையனோ போங்க" என்று தன் வழக்கமான் புலம்பலை ஆரம்பித்தார்.

"ஏங்க, என்னோட ஃப்ரெண்ஸ் ரெண்டு மூணு பேரு உங்க பையனோட வேலையைப் பத்தி ஆஹா ஓஹோன்னு பேசிக்கிறாங்க. உங்களுக்குப் பொறாமை போலிருக்கு" என்றேன்.

"சும்மா எனக்கு ஆறுதலா இருக்கட்டுமேன்னு சொல்றீங்க. தலையால தண்ணி குடிச்சு கத்துக் குடுத்தும் அவன் மண்டையிலே தொழில் ஏற‌மாட்டேங்குது. எம்முன்னால ஒரு 'நட்'டைக் கூட அவன் சரியா முடுக்கினதில்லை. ஸ்பேர் பார்ட்ஸ் ஃபிட் அப் பண்ணிக் குடுடான்னா அந்த பேப்பர்ல அச்சடிச்சிருக்கிறதைப் படிச்சுக்கிட்டே இருக்கான். படிக்கிற பையனுக்குத் தொழில் சரிப்பட்டு வராதுங்கிறது சரியாத்தான் போச்சு. எக்கேடோ கெட்டுப்போறான்னு திரும்பவும் அவனைப் பள்ளிக்கூடத்திலேயே போடரதுன்னு முடிவு பண்ணிட்டேன்.." தர்மராஜ் வருத்தம் தோய்ந்த குரலில் சொல்லிக்கொண்டிருக்கும்போதே காபியோடு வந்த அந்த சுட்டிப்பையன் எனக்கு மட்டும் தெரியும்படி என்னைப் பார்த்துக் கண்ணடித்தான்.

ஓஹோ... அப்படியா சங்கதி?