Monday, September 27, 2010

ஐயடிகள் காடவர்கோன் தொடர் கதை

ரெண்டு பேர். நாற்காலியில் உட்காரும் இடத்தில் கையை வைத்து, கண்கள் செருகி சுவரில் சாய்ந்து தரையில் உட்கார்ந்திருக்கும் ஒருவர். அறிவின் விஸ்தீரணம் நரையில் தெரிய, மிச்சமிருக்கும் சொச்ச நாட்களில் இலக்கியத்தைக் காப்பாற்ற இருமலுடன் வந்திருக்கும் ரெண்டு பெரியவர்கள். மருந்துக்கும் பெண் கிடையாது. அவர்கள் வடிக்கும் மூடிதிறந்த ஆவேச இலக்கியப் பக்கங்களைக் கண்டால் இந்தப் பெருசுகள் மூச்சு நின்றுவிடும்.

இலக்கியக் கூட்டம்.. மொத்தத்துக்கு இருபத்தைந்து டிக்கெட்டுகள் இருந்தால் அதிகம். முதலில் ஓர் இலக்கியவாதி மதராஸில் ட்ராம் வந்து குதிரை வண்டிய அழிச்சிட்டது, என்று ஏதாவது ஆக்சிடென்ட் பற்றிப் பேசுவார். அடுத்து இன்னொரு அழுக்குச்சட்டைக்காரர் அந்த மாதம் பத்திரிகைகளில் வெளியான சிறுகதைகளில் சிறந்ததாக ஒன்றைத் தேர்ந்தெடுப்பார். 'அப்பாவுக்கு அரைச் செங்கல்' என்கிற என் சிறுகதை 'கழிவு' பத்திரிகையில் வெளிவந்திருந்தது. என் கதைக்கோ, இதைவிட மோசமான இன்னொரு கதைக்கோ பரிசு கிடைக்கலாம்... அழுக்கு நோட்டானாலும் அப்போதே தருவார்கள். பாட்டிலுக்கு உறுதி.

மோட்டார் சைக்கிள் ரேசில் எல்லாம் ஜெயிச்சவன் பீரை எடுத்து பிஸ்க்கவில்லையா நாலாபக்கமும்? ரைட்டர்னா கூடாதா?

கூட்டம் ஆரம்பித்தது. ஒரு வெள்ளிப்பனித்தலையர் எழுந்து, ''இங்கே எல்லாரும் எல்லாருக்கும் பரிச்சயம்தான். இருந்தாலும் ரெண்டு மூணு புது-கிழ-முகங்கள் தெரியறதால, எல்லாரும் அவங்கவங்க பேர் சொல்லி சாவறதுக்குள்ளாற அறிமுகப்படுத்திக்கலாமா'' என்றார். ஒவ்வொருவராக பேர் சொல்லிக்கொண்டு வந்தார்கள்.

எனக்கு முன்னால் இருந்தவர் சொல்லிமுடித்ததும் நான் எழுந்து ''ஐயடிகள் காட... ம்... சிவதாசன்'' என்று சொல்லிவிட்டு உட்கார்ந்தேன்.

எனக்குக் குழப்பமாக இருந்தது. சிவதாசன் என்று சொல்வதற்குப் பதிலாக வேறேதோ... ஹாங்... ஐயடிகள் காடவர்கோன் என்று சொல்லப் போனேனே, அது ஏன்? கவுந்தி அடிகள், கேள்விப்பட்டிருக்கிறேன். தாண்டவக்கோனே - பாட்டுக் கேட்டிருக்கிறேன். இது யார் ஐயடிகள் காடவர்கோன்?

மூளை சூடானதுபோல் தோன்றியபோது யோசிப்பதை நிறுத்தினேன். கூட்டத்தில் ஒன்ற முடியாமல் அந்த அரங்கின் ஜனத்தொகையை இருபத்தி நாலாக்கிவிட்டு வெளியேறினேன். ஐயா கோவிச்சுக்காமல் பரிசைத் தபாலில் அனுப்பவும், பாட்டிலாக என்றாலும் ஓ.கே.

வீட்டுப் பிடுங்கல், வேலைபார்க்கும் உரத் தொழிற்சாலை சவால்கள் என்று பரபரப்பில், இந்த விஷயத்தை மறந்தே போனேன்.
*


''சார், 'ரெப்'ஆ இருந்த நீங்க ஸீனியர் ரெப் ஆகியிருக்கீங்க. எங்களுக்கெல்லாம் பார்ட்டி கிடையாதா சார், கிடையாதா என்ன, எந்த இடத்திலேன்னு சொல்லுங்க..'' என்றாள் அக்கவுன்ட்ஸ் நந்திதா. பார்ட்டி சந்தோஷமாகக் கொடுக்கலாம். தண்ணி பார்ட்டியானால். இதுகளெல்லாம் எல்லாவற்றிலும் சைவம். பரவால்லை, கேட்டவள் தனியே லிஃப்ட் மறைவில் ஒரு முத்த வாய்ப்பு அளிக்கலாம்... பெண்களோடு லஞ்ச் சாப்பிட்டுவிட்டு, மாலை வீரஅசைவர்கள் எல்லாம் பாருக்குப் படையெடுத்தோம்.

''எம்.சி. ரெண்டு ஃபுல்லு குடுப்பா.''

''எம்.சி. இல்ல சார், ஹனிபீ வாங்க்கிர்றீங்களா?''

''ஜானெக்ஷா இருக்கா..?''

''ஜானெக்ஷா இல்ல சார், டே நைட் தரட்டுமா?''

டாஸ்மாக் வந்ததிலிருந்து நாம் குடிப்பது கடைக்காரன் சாய்ஸ் என்று ஆகிவிட்டது.

''என்ன எழவு இருக்கோ அதில ரெண்டு ஃபுல்லு குடு. சீரழிஞ்ச சிகரெட் மூணு பாக்கெட் வாங்கிக்க. பாழாப்போன பாக்கு பத்து வாங்கிக்க.'' அவரவரும் தங்களுக்குப் பிடித்த சைட் டிஷ் சொன்னார்கள். கடைப் பையன் முகத்தில் 'ஏகப்பட்ட டிப்ஸ்' சிரிப்பு.

எங்க காட்ல தண்ணின்னா, அடேய் உங்காட்ல மழை.

பார்ட்டி களைகட்டியது. எங்கே அடுத்தவன் அடுத்த ரவுண்டுக்குப் போய்விடுவானோ என்ற பயத்தில் எல்லோருமே வேகவேகமாகக் குடித்தோம். சிகரெட் புகை. மூத்திர நாற்றம். தலை கிர்ரடித்து ஹைதர் அலி காலத்து ஃபேன் போலச் சுழன்றது.

அட்டெண்டர் ராஜு ஒரு ஜோக்கை ஆறாவது முறையாகச் சொல்லிக்கொண்டு இருந்தான். என் மூளைக்குள் சரளைக் கல் சரிய ஆரம்பித்த நேரம். என்ன தோன்றியதோ தெரியவில்லை, டேபிள் மீது இருந்த மெனு கார்டின் பின்னால் கிறுகிறு என்று எழுத ஆரம்பித்தேன்.


''த்தா டேய், நான் ஒரு கவிதை எழுதியிருக்கேன், படிங்கடா'' என்று கொடுத்தேன். போதையில் செல்லத்துக்குத்தான் முக்கியத்துவம். மரியாதையை மறுநாள் பராமரித்துக்கொள்ளலாம்.

ராஜு, நான் எழுதியதை வாங்கிப் படித்தான்.

''அழுகு திரிகுரம்பை ஆங்கது விட்டாவி
ஒழுகும் பொழுதறிய ஒண்ணா - கழுகு
கழித்துண் டலையாமுன் காவிரியின் தென்பால்
குழித்தண் டலையானைக் கூறு"

என்ன சார் இது, தமிழ் எழுத்துல கன்னடப் பாட்டு மாதிரி இருக்கு..?'' என்றான் ராஜு.

''இவ்வளவு நேரம் ராஜு சொன்ன ஜோக்கைவிட காமெடியா இருக்கு'' என்றான் இன்னொரு மங்குணிப் பாண்டியன்.

''அட, சும்மா இருங்கப்பா... ஆமா சிவதாசன் இந்தப் பாட்டுக்கு என்ன அர்த்தம்?''

காகிதத்தை வாங்கிப் பார்த்தேன். நானா இதை எழுதினேன்..?

(நாளை)

18 comments:

adhiran said...

welcome back. :-))

வால்பையன் said...

இந்த ஐடி பாஸ்வேர்டு ஞாபகம் இருக்கா!?

ரமேஷ் வைத்யா said...
This comment has been removed by the author.
ரமேஷ் வைத்யா said...

vaal id, password anuppavum.

மணிஜி said...

இரவு பாடகன் ஒருவன் வந்தான்....சிலிருந்து பாடல்கள் கொண்டு வந்தான்

நேசமித்ரன் said...

ரகளை நல்லாருக்குண்ணே !

ரமேஷ் வைத்யா said...

மணிஜி,
விமர்சனத்தைக் காணோமே..

நேசமித்ரன்,
thnx

Raju said...

அண்ணே, அந்த ராஜூ யாருண்ணே?!
கிழிந்து தொங்கட்டும் தாரை தப்பட்டைகள்.

எல்லாரும் சொல்ற மாதிரியே வெல்கம் பேக்குண்ணே.
:-)

லதானந்த் said...

அறிவிப்புக்குப் பலன் கிடைச்சிருச்சு

க. சீ. சிவக்குமார் said...

vaa...vaaa!

பரிசல்காரன் said...

என்ன ஒரு எழுத்துண்ணே...

கார்க்கிபவா said...

கதையை தொடர்கதையா போட்டதுக்கு நன்றிண்ணே..

எங்க நீஙக்ளும் பல்லவராஜாவா மாறி அட்வைசிடிவீஙக்ளோன்னு பயந்துட்டேன் :))

நையாண்டி நைனா said...

அந்த கவுதைக்கு எதிர் கவுதை நம்ம பட்டறைலே தயார் பண்ண முடியலையே...

வாங்க, வாங்க "பட்டைய"கெளப்புங்க...

Cable சங்கர் said...

ரைட்டு.. வெயிட்டிங்

butterfly Surya said...

வெல்கம் பேக்..

நலமா..?

வெயிட்டிங்.

செல்ல நாய்க்குட்டி மனசு said...

டாஸ்மாக் வந்ததிலிருந்து நாம் குடிப்பது கடைக்காரன் சாய்ஸ் என்று ஆகிவிட்டது.//
அங்கே மட்டுமா?

எங்கே போயிருந்தீங்க? எல்லோரும் வெல்கம் சொல்லறாங்களே?
சாரி, நான் கொஞ்சம் லேட் கம்மர் பதிவு உலகுக்கு.
போட்டோவுக்கு பென்னாலே தாடி போட்டது ஆரு?
அடையாளம் தெரியக் கூடாதுன்னு தானே?

அருண் said...

ஆரம்பமே அமர்க்களமா ஆரம்பிச்சிருக்கிங்க,தொடருங்கள் வாசிக்க காத்திருக்கிறேன்.

அசிஸ்டன்ட் டைரக்டர் said...

ngoyyaal.. engadaa poyiruntha ivvalavu naalaa? welcome backuda.. veti nimithuda machaan..