Wednesday, September 29, 2010

ஐயடிகள் காடவர்கோன் - 3

நூல் சிறந்த பண்டிதர்கள் நிறைந்த காஞ்சியம்பதியை ஒட்டி வாழ்ந்து வந்தவர்கள் காடவ ஆதிகுடிகள். அந்தச் சிற்றரசின் ராஜ்யபாரம் சுமந்துவந்த மன்னர் கள்ளியங்கோட் பெருமானாருக்கு ஒரே வாரிசு.. அந்தப் பிள்ளைக்கு இளம்பிள்ளை வாதம். கவலையோடே அரசாண்டார் மன்னர். ராஜ்யத்தின் எல்லைப் பகுதிகள் கொஞ்சம் கொஞ்சமாக அபகரணம் ஆயின. மன்னருக்கும் வயோதிகம் வந்துற்றது. பல காலமாக தளபதி பெருமாறனை அவதானித்து வந்தார் மன்னர். சகல கார்யங்களிலும் தீரனாகவும் ஒழுக்கத்தில் சீலனாகவும் இருந்தான் அவன். ஐப்பசி மாசம் மூல நட்சத்திரத்தில் பிறந்த ராஜ ஜாதகம் அவனுடையது.

மந்திரிப் பிரதானிகளின் ஆலோசனையின் பேரில் ராஜ்யத்தையும் இளம்பிள்ளைவாத இளம்பிள்ளையையும் பெருமாறனின் கைகளிலும், இடுப்பிலும் ஒரு சுப நாழிகையில் ஒப்படைத்தார்.

காடவர்களின் கோன் ஆன பெருமாறன் செவ்வனே சீர்திருத்தங்களைத் தொடங்கினான். அபகரிக்கப்பட்ட எல்லைகளை விஸ்தீரணம் செய்ததோடு, அடுத்த நாடுகளின் மீது படைகொண்டு ராஜ்யத்தை சாம்ராஜ்யம் ஆக்கினான். வெகுளம்பாடி, வேட்டியூர், தூசி பட்டணம், தொண்டலூர் சாவடி, கழுக்குன்றூர், மதுராசனூர் என அவன் ஜெயங்கொண்ட ராஜ்யங்களின் பட்டியல் மாளாது நீளும்.

இப்படியான பராக்கிரமன், தன் ஜனன முகூர்த்தத்திலேயே மெய்க்காப்பாளன் ஒருவனால் குத்திக் கொல்லப்பட்டான். சிவலோகப் பிராப்தி அடைந்த அவனது ஜென்ம தினம் அப்படியே கொண்டாடப்படாமல் காடவர்கள் கூடி மூன்று நாள் திருவிழாவாகவும் மூன்று நாள் துக்கமாகவும் நீண்ட காலம் அநுசரிக்கப்பட்டது.

இன்றும் அந்தக் காடவ மன்னனின் வாரிசுகள் அந்தப் பகுதியில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

*

இதுதான் அந்தப் பெரியவர் கொடுத்த நைந்த புத்தகத்தில் இருந்த விவரங்களின் சாரம்.

என் குழப்பம் அதிகரித்தது. கம்பெனிக்கு ஒரு வாரம் மெடிக்கல் லீவ் போட்டேன். வெட்ட வரும் எதிரியும், திட்ட வரும் புலவருமாகக் கனவுகள் அலைக்கழித்தன. வயிற்றில் குபீர் - வாரத்துக்கு ரெண்டு பீர் என்றிருந்தது நாளைக்கு ரெண்டு பெக் என்று ஆயிற்று. நிர்மலா ஏகத்துக்கும் கோபப்பட்டு எந்நேரமும் திட்டித் திரிந்தாள்.

''இதோ பாருங்க, என்ன பிரச்னைன்னும் சொல்ல மாட்டேங்கறீங்க. கம்பெனிக்கும் போகாம வீட்டுலயே உக்கார்ந்து மோட்டுலயே பாத்துட்டிருக்கீங்க. புறப்பட்டு வாங்க என்கூட'' என்று சாலிகிராமத்துக்குக் கூட்டிப் போனாள்.

'ஆதிநாக சுவடி ஜோதிட நிலையம்.'

சில மனநல மருத்துவர்களைப் பார்த்தாலே நோயின் வேகம் அதிகரிக்குமே அதுபோல இருந்தார் சுவடி ஜோதிடர். ''யாருக்குப் பார்க்கணும்?'' என்றார். அதுவே தெரியாதவர் மூன்று காலத்தையும் சொல்லப்போகிறார்.

என் முகத்தைப் பார்த்தார். மணியைப் பார்த்தார். பெயரைக் கேட்டார். உட்காரச் சொல்லிவிட்டு உள்ளே போய்விட்டார்.

கொஞ்ச நேரம் கழித்து வெளிவந்த ஜோதிடரின் கையில் இருந்த சுவடியில் என்ன இருக்கிறது என்று எட்டிப் பார்த்தேன். ஒன்றும் தெரியவில்லை. 'ம்க்குக்கூம்' என்று செருமி முறைத்தார்.

ஒன்றுமில்லாத சுவடியைப் பார்த்துப் படிக்க ஆரம்பித்தார்.

''மூநயன பிரமாண்டன் அடியவனென நாமம்.
வானயன் அனுப்பினான் அவனிடமே திரும்பிடுவான்
பத்துக்கு ஈரதிக மைந்து குறை மாதம்
பத்தொன் பதாம் வெள்ளி மூலம்'

என்று தொடங்கி நீளமாக வாசித்துக்கொண்டே போனார். சின்னச் சுவடியில் எவ்வளவு விஷயம்... அவ்வப்போது அவர் முகம் மாறியது. அவர் முடித்ததும் ''இவ்வளவு நேரம் நீங்க படிச்ச்சதில மையக் கருத்தை விளக்கிச் சொல்லுங்க" என்றேன்.

''ஐப்பசி மாச மூலநட்சத்திரத்துல பிறந்த ஜாதகர். ரெண்டு எல்லைதான் ஒண்ணு, ராஜா அல்லது வீதிவலம்தான். தட்டச்சநல்லூர் ருத்ரசோமசுந்தரர் கோயில்ல பரிகாரம் செய்யணும்'' என்றவர் நிர்மலாவைப் பார்த்துத் திரும்பி, ''நாளைக்கே அதைச் செஞ்சாகணும். என்னை வேற ஒண்ணும் கேட்காதீங்க'' என்று சொல்லிவிட்டு எழுந்து போய்விட்டார்.

*

அந்தக் கோயில் பாழடைந்து பார்க்கவே பயமாக இருந்தது. சுவடி ஜோதிடர் சொன்ன விஷயங்களை பூசாரியிடம் சொல்லி, எலுமிச்சம்பழம், நெய், திரி, தேங்காய், கீங்காய் என்று ஒவ்வொன்றாக எடுத்து வெளியே பயம் சார்ந்த திகிலுடன் வைத்தாள் நிர்மலா. அர்ச்சகர் அல்ட்டிக்கறாப்ல இல்லை. அவருக்கு இதெல்லாம் வாடிக்கை போலிருக்கிறது. தணிந்த குரலில், காசுபோட்ட ஜுக்பாக்ஸ்போல - அல்லது கிடைக்கப்போற காசுக்காக, ஏதோ சொல்லி பூஜை செய்ய ஆரம்பித்தார்.

எனக்கு என்ன ஆச்சர்யமென்றால்.... அந்தக் கோவில், அந்த பிரதேசம்.... யாவுமே எல்லாமே எனக்கு ஓரளவு தெரிந்தாப் போலிருந்தது. நேராப் போயி வலப்புறம் திரும்பினால் ஸ்வாமிவாகனங்கள் நிறுத்தி யிருப் - யிருந்தார்கள்! கால் சூம்பிய ராட்சஸனாய்த் தேர் வாசலில் நின்றிருக் - ருந்தது!

டிரில் மாஸ்டர் போல கோயிலை ஆறு முறை சுற்றிவரச் சொன்னார். மூன்றாவது முறையே எனக்குத் தலை சு.... சமாளித்துக்கொண்டு சுற் - தலைசுற்றினேன். சுற்றினேன் தலை.

கடைசி சுற்றில் தத் - தடுமாறி அங்கே இருந்த ஒரு சின்ன சிலையைப் பிடித் - கோயிலுக்குள் மனித சிலை! இந்த மனுசனை எங்கேயோ நிச்சமாய்ப் பார்த்திருக்கிறேன்! - கீழே ஏதோ செதுக் - 'ஐயடிகள்' - கியிருந்தது .. என் மொத்த ரத்தமும் தலைக்கு ஏறியது.

''ஐயடிகள் ஸ்வாமியைப் பார்க்கறீங்களா? இங்கேயே சமாதியான பெரிய்ய மகான். இவரைப் பத்தி கதை கதையாச் சொல்வாங்க. ஒவ்வொரு சிவன் கோயிலாப் போயி பாட்டுப் பாடி சாமி கும்பிடுவாராம். பிச்சை எடுத்துச் சாப்பிடுவாராம். இந்த ஊர்லேயே பெரிய பணக்காரரா இருந்தவரோட மகளுக்குப் பிடிச்சிருந்த பைத்தியத்தைப் பாட்டுப் பாடியே குணப்படுத்திட்டாராம். (சிலாள் பாட்டுப் பாடினா பைத்தியம் பிடிக்கும்) - அவர் குடுத்த தங்கக் காசுகளை ஐயடிகள் தொட்டதும் அது தண்ணியா மாறி பூமியில பரவிடுச்சாம். இந்த சுவர்ல இருக்கறதெல்லாம் இவர் பாடின பாட்டுதான்'' என்றார் பூசாரி.

படித்துப் பார்த்தேன். புரியாத தமிழ். பாட்டின் தாள லயம் மனதை என்னமோ செய்தது.

புறப்பட்டு வந்தோம்.

இரவு ஒன்பது மணி இருக்கும். மழை தூறிக்கொண்டிருந்தது. ''நீ ஆட்டோ பிடிச்சுப் போயிடு. நான் வண்டி எடுத்துட்டு வர்றேன்'' என்று நிர்மலாவை அனுப்பிவைத்தேன்.

வழியில் டாஸ்மாக் ஜெகஜோதியாக இருந்தது. ஒரு பெக் சாப்பிட்ட நேரத்தில் தூறல் விட்டிருந்தது. எனக்கு தங்கக்காசு தந்தால் நானுங்கூட இதோ தண்ணியா மாத்திக் காட்டுறேன்! - மீதியைப் பாக்கெட்டில் வைத்துக்கொண்டு சிக்கன் வறுவல் பார்சலோடு புறப்பட்டேன்.

கும்மிருட்டு. ஹெட்லைட் பேருக்கு எரிந்தது. மூளையின் இறுக்கங்களை நெகிழ்த்தி யோசனை மூட்டை கிழிந்து கொட்டுவது போன்ற போதை. அல்குல் அது இதுவென்று சங்ககாலக் கெட்ட வார்த்தைகள் மனசுக்குள் வட்டமடித்தன...

வீட்டுக்குள் நுழைந்ததுமே வாசனை பிடித்துவிட்ட நிர்மலா, ''என்னங்க இது அமாவாசையும் அதுவுமா அசைவம் வாங்கிட்டு வந்திருக்கீங்க? கோயிலுக்கு வேற போயிட்டு வந்திருக்கோம்...'' என்று முணுமுணுக்கத் தொடங்கினாள். '

என் மூளையில் பாம்பு கொத்தியது. ''என்ன சொன்னே, அமாவாசையா..?'' ஏறக்குறைய கத்தினேன். ''இது எந்தத் தமிழ் மாசம்?''

''ஐப்பசி, அட மறந்தே போயிட்டோமே இன்னிக்கு உங்க பிறந்த நட்சத்திரமாச்சே...'' என்றாள் நிர்மலா. பிரமை பிடித்து நின்றேன்.

''என்னங்க... என்ன ஆச்சு?''

கோயில் சுவரில் பார்த்த ஒரு பாட்டு நெற்றிப் பொட்டைக் கிழித்துக்கொண்டு நினைவுக்குள் வந்தது.
'இரண்டாம், இருபூஜ்யம் பத்தாம் ஒருவருடம்
திரண்டே தெருவெங்கும் நீரோட - இருண்ட
தினமதில் மூன்றாம் முறைகூடு விட்டு
சிவமதைச் சேர்தல் கடன்'.

பாட்டில் சொல்லியிருப்பது 2010 மழைக்கால அமாவாசை நாளா..?

அந்த நாடி ஜோசியன், அவன்கூட, இதுமாதிரி, பயத்துடன் ஏதோ சொன்னானே!

உடல் அதிர்ந்து அடங்கியது. பாக்கெட்டில் இருந்த பாட்டிலை எடுத்து அப்படியே வாயில் கவிழ்ந்த்துக்கொண்டேன். அப்புறம் என்ன நடந்தது என்பது எனக்குத் தெரியாது.

9 comments:

பரிசல்காரன் said...

அற்புதம்!

//அர்ச்சகர் அல்ட்டிக்கறாப்ல இல்லை./

இதில் நடுப்பதம் மொத்த மொழிநடையினின்றும் விலகி நிற்கிறதே.. ஏதும் சூட்சுமமா?


//நிறுத்தி யிருப் - யிருந்தார்கள்!

நின்றிருக் - ருந்தது!
//


மிக மிக ரசித்தேன்..!

ரமேஷ் வைத்யா said...

மானத்தைக் காப்பாற்றியதற்கு நன்றி.

//அல்ட்டிக்கறாப்ல//
அவதானிப்பை வியக்கிறேன் பரிசல்.

எம்.எம்.அப்துல்லா said...

என்னத்தச் சொல்றது???

அற்புதம்னு சொன்னா ஓன்னோட அண்ணே எழுதுனதுன்னு உயர்வா சொல்றியான்னு நாலுபேரு கேப்பாய்ங்க.

நல்லாருக்குன்னு சொன்னா சம்பிரதாயத்துக்கு சொல்லிட்டு போறாம்பாய்ங்க.

ஒன்னும் சொல்லாமப்போன நான் கண்டுகிடலன்னு நீங்களே சொல்லுவீங்க.

ஒரு பின்னூட்டம் போடுறதுல இத்தனை பிரச்சனையா?? கொடுமைடா சாமி!!

செல்ல நாய்க்குட்டி மனசு said...

''யாருக்குப் பார்க்கணும்?'' என்றார். அதுவே தெரியாதவர் மூன்று காலத்தையும் சொல்லப்போகிறார்.//

ரசிக்க வைத்ததோடு சிந்திக்கவும் தூண்டிய வரிகள்

நேசமித்ரன் said...

இந்த அத்தியாத்தில் இன்னும் கொஞ்சம் சங்கதிகள் சேர்த்திருக்கலாம் ...

கச்சேரி களை கட்டி இருக்கும்

கொஞ்சம் வேகமாய் முடித்த உணர்வு

மொத்தத்தில் இது ..இது .. ரமேஷ் வைத்யாடா என்று சொல்லிக் கொண்டேன்

மணிஜி said...

வெண்ட்று

மோனி said...

அட்டகாசம் நண்பா..

கதிர்கா said...

நண்பரே, என் பதிவில் நீங்கள் கொடுத்த உங்கள் எண்ணை பலமுறை முயற்சித்தேன். ஆனால் தொடர்புகொள்ள முடியவில்லை. மீண்டும் அடுத்த வாரம் முயற்சி செய்கிறேன்.

நன்றி,
கதிர்கா

நளினா லாவண்யா said...

Ramesh Vaidya sir,
story narration is amazing!