Friday, June 10, 2016

உங்களைத் தெரியுமா உங்களுக்கு 01

நமக்கு அது தெரியும், இது தெரியும் என்பது ஒரு பக்கம் இருக்க, முதலில் நாம் தெரிந்துகொள்ள வேண்டியது நம்மை. யாருக்காவது தன்னையே தெரியாமல் போகுமா என்று கேள்வி எழலாம். ஆனால், நம்மைப் பற்றி நாம் நன்றாகத் தெரிந்துகொள்வது வாழ்க்கைத் திறன்களில் முக்கியமான ஒன்று. உதாரணத்துக்கு, உங்களுக்கு எப்போது எல்லாம் தூக்கம் வரும்? இந்தக் கேள்விக்கு சரியான விடை தெரிந்தால், நாம் தூக்கத்தைக்கூட நமக்கு பலன் தரும் விதத்தில் பயன்படுத்த முடியும். இதுபோல சின்னச் சின்ன விஷயங்களின் மூலமாகப் பெரிய பெரிய விஷயங்களை விளக்குவதுதான் இந்தக் குட்டித் தொடர் கட்டுரைகளின் வேலை.


‘‘அவனும் மூணு மணி நேரம்தான் படிக்கிறான். நானும் மூணு மணி நேரம்தான் படிக்கிறேன். ஆனா, எப்பவுமே அவன்தான் க்ளாஸ் ஃபர்ஸ்ட். அது எப்படி?”
“தினமும் பிராக்டீஸ் பண்றேன். அப்படியும் அவ 11 நிமிஷத்துல முடிக்கிற தூரம் எனக்கு 14 நிமிஷம் எடுக்குது.”

இப்படி நாம் அடிக்கடி கேட்கிற வசனங்கள் நிறைய. இதில் இருந்து என்ன தெரிகிறது? படிக்கிற நேரம், தொடர்ந்து பிராக்டீஸ் இவை இருந்தும் வெற்றிக்கு வேறு ஏதோ ஒன்று தேவைப்படுகிறது. அது என்ன?

ஓர் இடத்தில் தெளிவாகக் குவிக்கப்பட்ட கவனம்!

கவனம் இல்லாமல் அல்லது கவனச் சிதறலோடு நீங்கள் 10 மணி நேரம் படித்தாலும் அது மனதில் தங்கும் என்று நினைக்கிறீர்களா?

முழு ஆர்வம், ஒருமுகப்படுத்தல் ஆகியவைதானே கவனக்கூர்மைக்கு அடிப்படை? இதைத் தொடர்ந்து கடைப்பிடித்தால்தான் ஒரு பழக்கமாக நமக்குள் வளரும்.

இந்த கவனக் கூர்மை என்பது நம்மை எப்படி எல்லாம் பாதிக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள ஒரு சின்ன விளையாட்டு.

நண்பர்கள் ஆறேழு பேர் வட்டமாக உட்கார்ந்துகொள்ளுங்கள். ஆளாளுக்கு வரிசையாக ஒரு நபரின் பெயரைச் சொல்வதுதான் விளையாட்டு. வாய்க்கு வந்த பெயரைச் சொல்லக் கூடாது. முதல் ஆள் ஒரு பெயரைச் சொன்னதும் அது ஆங்கிலத்தில் என்ன எழுத்தில் முடிகிறதோ, அந்த எழுத்தில் ஆரம்பிக்கும் ஒரு பெயரை அடுத்த ஆள் சொல்ல வேண்டும். இப்படியாக அடுத்த அடுத்த ஆட்கள் தொடரட்டும்.

விளையாட்டில் சுவாரசியத்தைக் கூட்டுவதற்காக இடையில் நிறுத்தி Cat, Tiger, Rhino என்று விலங்குகளின் பெயரைச் சொல்ல ஆரம்பிக்கலாம். இப்படியே நகரங்கள், நதிகள் என்று தொடரலாம். இப்படிச் சில சுற்றுகள் விளையாடி முடித்ததும் யோசிப்பதற்காக ஓர் இடைவேளை விடுங்கள்.
உங்கள் கவனத்தைச் சிதறடிக்கும்படி என்னென்ன விஷயங்கள் நடந்தன? எவை உங்களைத் திசை திருப்பின? எந்தெந்த விஷயங்கள் உங்கள் கவனத்தைக் கூர்மைப்படுத்த உதவின? இதன் அடிப்படையில் படிப்பில் கவனக்கூர்மையை  செழுமைப்படுத்திக்கொள்ளலாம்.

இந்த விளையாட்டில் பங்கேற்ற ஒவ்வொருவரிடமும் பேசினால், ஒவ்வொரு விஷயம் வெளிப்படுவதை உணரலாம். விளையாட்டு பிடித்து இருந்தது, வெளியில் இருந்து வந்த சத்தத்தால் கவனம் சிதறியது, பெயரைச் சொல்லி முடித்தவர்கள், அடுத்தவருக்கு க்ளூ கொடுக்கிறேன் என்று கவனத்தைக் குறையச் செய்தார்கள்... இப்படிப் பல விஷயங்களை அறியலாம்.

டி.வி., சினிமா பார்ப்பது, கதை படிப்பது, விளையாடுவது போன்றவை பலருக்கும் ஜாலியாக இருக்கும். இதுபோன்ற விஷயங்களில் அவர்களுக்கு இருக்கும் ஆர்வமே காரணம். ஆர்வம் கவனக்கூர்மைக்கு உதவக்கூடியது. கவனக்கூர்மை என்பது ஞாபக சக்தியை வளர்த்துக்கொள்ள உதவும்.

சத்தம், ஆர்வமின்மை போன்றவை கவனக்கூர்மையைக் குறைக்கும்.
சிறப்பான கவனக்கூர்மை நேரத்தை மிச்சப்படுத்துகிறது. கவனக்கூர்மையை அதிகப்படுத்திக்கொள்ள சில எளிய வழிமுறைகள் இருக்கின்றன.

இதில் வித்தியாசமான ஒரு விஷயம், ஒரு வேலையைச் செய்துகொண்டு இருக்கும்போது நீங்கள் கவனக்கூர்மையைப் பற்றியே யோசித்துக்கொண்டு இருந்தால் உங்கள் கவனம் சிதறவே வாய்ப்பு அதிகம். அதனால்தான், கவனச் சிதறலை ஏற்படுத்துகிற விஷயங்களைக் குறைப்பதன் மூலம் கவனக்கூர்மையை அதிகப்படுத்திக்கொள்ளலாம்.

எவை எல்லாம் உங்கள் கவனத்தைச் சிதறடிக்கிறது என்று புரிந்துகொள்வதன் மூலமே அவற்றைத் தவிர்த்து, கவனக்கூர்மையை அதிகப்படுத்திக்கொள்ளலாம்.

வேறு வேறு நேரங்களில் தூங்குவது, இஷ்டப்பட்டபோது உடற்பயிற்சி செய்வது, நேரங்கெட்ட நேரத்தில் சாப்பிடுவது போன்றவை கவனக்கூர்மைக்கு இடையூறு செய்யக்கூடியவை.

கவனக்கூர்மையை வளப்படுத்திக்கொள்ள...

 படிக்கும்போது கவனம் சிதறாமல் இருக்க, போதுமான வெளிச்சம், காற்றோட்டம், இரைச்சல் குறைவாக இருக்கும் இடத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும். 

காலையிலும் இரவிலும் படியுங்கள். ஒவ்வொரு நாளும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் படிப்பதை வழக்கமாக்கிக்கொள்ளுங்கள். 

ஒரே இடத்தில் நீண்ட நேரம் உட்கார்ந்து படிக்காதீர்கள். படித்த விஷயத்தை மனதில் நிறுத்தும் திறனை அது குறைக்கும்.

வாசிக்கத் தொடங்குவதற்கு முன்னால், எடுத்துக்கொண்ட பாடப் பகுதியைப் படித்து முடிக்க வேண்டிய நேரத்தை ஒரு தாளில் குறித்து வைத்துக்கொள்ளுங்கள்.  ‘இன்றைக்குத் தமிழ்ப் பாடம் படிக்கப் போகிறேன்’ என்று மொட்டையாகத் தீர்மானித்துக்கொள்ளாதீர்கள். ‘இன்றைக்கு சமூக அறிவியலில் இரண்டு பாடங்கள், வேதியியலில் 10 கேள்விகளுக்கு விடை என்று குறிப்பாகத் தீர்மானித்துக்கொள்ளுங்கள். தெளிவான இலக்கு வேலையை முடிக்க உதவிகரமாக இருக்கும்.

ஒவ்வொரு சமயமும் ஏதாவது ஒரு விஷயத்தில் கவனத்தைக் குவியுங்கள். டி.வி. பார்த்துக்கொண்டே படிப்பது உதவாது.

உங்கள் சிந்தனைகள் வேறு எதிலாவது அலைபாய்ந்துகொண்டிருந்தால் படிப்பதைத் தள்ளிப்போடவும்.

மனம் எதனாலாவது வருத்தமாக இருந்தாலும் படிப்பதைத் தவிர்க்கவும்.     தியானம், யோகா, எளிய சுவாசப் பயிற்சிகள் போன்றவை கவனக் குவிப்புக்கு உதவும்.  அடுத்தடுத்து ஒரே விதமான பாடங்களைப் படிப்பதைத் தவிர்க்கவும். அது எந்தப் பாடத்தில் என்ன விஷயம் வந்தது என்கிற குழப்பத்தை ஏற்படுத்தக்கூடும்.  

தூக்கம் வரும்போதோ... களைப்பாக இருந்தாலோ... போர் அடித்தாலோ படிப்பதை நிறுத்திவிடுங்கள். நிறைய காபி, டீ குடிப்பது சுறுசுறுப்பைத் தருவதுபோன்ற தோற்றம் தந்தாலும் சிந்திக்கும் திறனைக் குறைக்கும் என்பதே உண்மை.  இரும்புச் சத்தும் விட்டமின்களும்கொண்ட உணவுகளை உண்ணுங்கள்.  பகல் கனவு காண்பதைக் குறையுங்கள். எல்லோரும்தான் பகல் கனவு காகிறார்கள். ஆனால், அதிலேயே பொழுதை ஓட்டிவிட முடியுமா? 

அப்படி சிந்தனைக் குதிரை கற்பனை உலகில் தறிகெட்டுப் பறந்துகொண்டு இருந்தால் எழுந்து ஒரு சிறிய நடை நடக்கலாம்.  கடைசியாக, பள்ளி சம்பந்தமான வேலைகளை ரசித்து அனுபவியுங்கள். படிப்பதில் உள்ள சுவாரசியத்துக்காகப் படியுங்கள். அது உங்களுக்கு எல்லாவற்றையும் கொண்டுவந்து சேர்க்கும்.

No comments: